Pages - Menu

Wednesday, December 9, 2015

தமிழ் டொமைன் பெயர்கள்

டொமைன் எனப்படும் களப்பெயரானது ஒரு வலைத்தளத்தைக் குறிக்கப்பயன்படும் வலை முகவரியாகும் (உதா: neechalkaran.com)  .com போல .in, .org, என பல துணைக்களப்பெயர்களும் உள்ளன. இவை எல்லாம் ASCII குறியீட்டு முறையைப் பின்பற்றுகின்றன எனவே அதில் ஆங்கில எழுத்தும் பிற குறியீடு மட்டும் இருப்பதால் பொதுவாக ஆங்கிலத்திலேயே இப்பெயர்கள் இருக்கும். அக்டோபர் 2009ல் ஐகன் (ICANN) மூலம் அங்கீகரிக்கப்பட்டு முதன்முதலாக மார்ச் 2010ல் பிறமொழி களப்பெயர்கள் DNS root zoneல் பதிவேற்றப்பட்டது. அதன் பின்னர் யாவரும் 60திற்கும் மேற்பட்ட பிற மொழிகளில் ஒருங்குறியில் களப்பெயரைப் பதிவுசெய்யமுடிகிறது. ஆனால் களப்பெயர் வழங்குநரின் சேவையைப் பொறுத்தே துணைக் களப்பெயருடன் வாங்கமுடியும். சீனர்கள் அதிகமாகக் களப்பெயர்களைத் தங்கள் மொழியில் வாங்குவதால் சீனத்தில் துணைக் களப்பெயரும் உள்ளது. தற்போதைக்குத் தனிநபர்கள் முதன்மைக் களப்பெயர்களை வாங்கமுடியும். அவ்வாறு இயங்கும் தளங்கள் சில
www.இந.இந்தியா
www.அகரமுதலி.com
www.டிஜிட்டல்இந்தியா.com
www.எடியுலங்கா.இலங்கை
தளம்.நுட்பம்.இலங்கை
தளம்.பாராளுமன்றம்.இலங்கை
தற்போது தமிழில் களப்பெயரை அதிகமாக இலங்கை நாட்டினர் பயன்படுத்துகின்றனர். .இலங்கை என்ற மேல்நிலை களப்பெயர் நாட்டுக் குறியீடும்(Country Code Top Level Domain) தமிழில் உள்ளது. இவற்றை http://www.i-dns.net/, https://www.name.com/idn/, https://www.101domain.com போன்ற தளங்களில் வாங்கலாம். 

இவை எப்படி செயல்படுகின்றன? 
முன்பு கூறியதைப் போல அஸ்கி எழுத்துக்களைத் தான் களப்பெயர் வழங்கி புரிந்து கொள்ளும். ஒரு வலைத்தளத்தின் பக்கத்தின் பெயர் ஒருங்குறியில் இருந்தால் (example.com/எப்படி.html) அது யுடிஎப் முறைக்கு உருமாற்றப்பட்டு (example.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.html) என்று மாறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதேபோல ஒருங்குறியில் ஒரு களப்பெயரிருந்தால் அதை அஸ்கியாக மாற்றிப் பயன்படுத்திக் கொள்கிறது. இதைக் களப்பெயர் தீர்ப்பான் (DNS resolvers) செய்து தகவல் பரிமாற்றத்தை நிகழ்த்துகிறது. ஆகவே இம்முகவரி www.xn--vkc6a6bybjo5gn.com என்று சில உலாவிகளில் தெரியும். 


இத்தகைய பிறமொழிப் பெயர் கொண்ட வலைத்தளங்கள் கூகிள் உள்ளிட்ட தேடுதளங்களில் இன்று சரியாகக் காட்டப்படுகின்றன. சில தளங்களில் இவை தளமாகப் புரிந்து கொள்வதில்லை. இந்நிலை விரைவில் மாறும். எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதால் அவரவர் தாய்மொழியில் பெயர்கள் இருப்பது வரவேற்கத் தக்கது. அரசுத் தளங்கள் தமிழ் களப்பெயர்களைக் கொண்டிருக்கலாம். எதிர்காலத்தில் மின்னஞ்சல் முகவரியும் தமிழில் கிடைக்கலாம். உதாரணம் மணுக்கள்@அரசு.தநா என்றுகூட நாம் பயன்படுத்தும் காலம்வரும்
தமிழ் கம்ப்யூட்டர் இதழுக்காக எழுதியது.

4 comments:

  1. அருமையான கட்டுரை!

    www.அகரமுதலி.com தளத்தை நான் வெகு நாட்களுக்கு முன்பிருந்தே பார்த்து வருகிறேன். எப்படி இவர்கள் மட்டும் இப்படிக் களப்பெயர் வாங்கினார்கள் என்று வியந்திருக்கிறேன். ஆனால், அதற்கான பதில் தெரியவில்லை. இதைப் படித்து ஓரளவு புரிந்தது. ஆனால் கூடவே, இப்படித் தமிழில் களப்பெயர் வாங்குவது எப்படி என்றும் எழுதியிருந்தீர்களானால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். இருந்தாலும், இந்தச் சுவையான தகவலுக்காக நன்றி! நீங்கள் கூறியிருந்தபடி, முழுக்க முழுக்கத் தமிழில் தளத்தின் பெயர்கள் ஒளிரும் நாளை விரைவில் எதிர்பார்ப்போம் பேராவலுடன்!

    ReplyDelete
  2. முழுக்க முழுக்கத் தமிழில் தளத்தின் பெயர்கள் ஒளிரும் நாளை விரைவில் எதிர்பார்ப்போம் ,வாழ்த்தி வரவேற்போம்

    ReplyDelete
  3. சுவையான தகவல்கள்!

    தமிழில் களப்பெயர்கள்... ஆஹா... அருமை!

    .

    ReplyDelete
  4. அருமை... விரைவில் நடக்கட்டும்...

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது