Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Thursday, March 31, 2016

Info Post
2000 மார்ச் முதல் 2004 மே வரையிலான காலகட்டத்தில் விகடன் தனது இணையத்தளத்தைச் சொந்த எழுத்துருவில் வெளியிட்டது. அதன் பிறகு TAM எழுத்துருவைப் பயன்படுத்தி வந்தது. பின்னர் 2010 ஜூலை முதல் ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தத் தொடங்கியது. தொடக்கத்திலிருந்து ShreeTam எழுத்துருவைப் பயன்படுத்திய தினமலர் 2008க்குப் பிறகு படிப்படியாக ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தத் தொடங்கியது. 2004 முதல் 2006 காலகட்டத்தில் அமுதம் என்ற எழுத்துருவைப் பயன்படுத்திய தினகரன் பின்னர் சில காலம் TAM எழுத்துருவைப் பயன்படுத்தி 2009ல் ஒருங்குறிக்கு மாறியது. 2004லிலிருந்து தினமணிக்கென தனியான எழுத்துருவில் வெளிவந்து பின்னர் 2009 ஏப்ரல் 14 முதல் ஒருங்குறிக்கு மாறியது. இதில் சில ஊடகங்களின் உள்பயன்பாடு இன்னும் பழைய எழுத்துருவிலேயே உள்ளது. அவர் வெளியிடும் பிடிஎப் கோப்புகளைப் பார்த்தால் இவ்வெழுத்துருவை இன்றும் காணலாம். தமிழ்ப் பல்கலைக்கழக (www.tamiluniversity.ac.in) வெளியீடுகள் பெரும்பாலும் TAB குறியீட்டில் உள்ளன. தமிழ் வளர்ச்சித் துறையின் வெளியீடுகளில் (tamilvalarchithurai.org) வானவில் குறியீடுகளைக் காணலாம். அரசு ஆவணங்கள், பல்வேறு வார இதழ்கள் இன்றும் ஒருங்குறி அல்லாமலே வெளிவருகின்றன. அவை பிடிஎப் வடிவிலோ, இதர மென்பொருள் துணையுடன் இருப்பதால் அங்கு மட்டுமே வாசிக்க முடியும். நகலெடுத்துக் கொள்ள முடியாது.

அக்காலத்தில் பல குறியாக்கங்கள் இருந்தாலும் இறுதியாக தரப்படுத்தப்பட்ட இரு குறியாக்கங்கள் முக்கியமானவை ஒன்று டேஸ்(TACE) மற்றொன்று ஒருங்குறி(Unicode). அடிப்படையில் ஒருங்குறிக்கும், டேஸிற்கும் உள்ள வேற்றுமையாதெனில் ஒரு உயிர்மெய் எழுத்தை எழுத டேஸ்ஸில் ஒவ்வொரு குறியீட்டையும் தனித்தனியாக அடிக்க வேண்டும், ஒருங்குறியில் ஒவ்வொரு உயிர்/மெய் எழுத்தைத் தனித்தனியாக அடிக்க வேண்டும். அதாவது இரட்டைக் கொம்பு + க + துணைக்கால் என்று பிற டேஸிலும், க் + ஒ என்று ஒருங்குறியிலும் அடித்தால் "கோ" என்ற எழுத்தை எழுதமுடியும். TACE முறையே சிறப்பானது என்று சில அறிஞர்கள் கருதினாலும் ஒருங்குறி முறையில்தான் தமிழ் இயல்மொழி பகுப்பாய்வு சிறந்ததாகவும் சிலர் கருதுகின்றனர். இணையத்தில் வெளிவந்த வாணி பிழை திருத்தி அதற்குச் சான்றாகும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருங்குறி இன்று மூலைமுடுக்கெல்லாம் பரவிவிட்டது. பல்வேறு தட்டச்சுக் கருவிகளும் அதை ஒத்து வெளிவந்துவிட்டன.

சிலர் ஒருங்குறியால் எழுத்துவடிவம் தவறாக எழுதப்படுவதாக நினைக்கிறார்கள். உதாரணம் ஒள என்பதன் துணையெழுத்து சிறிதாக இருக்கவேண்டும் என்போம். துணைக்கால் மீது புள்ளிவைத்து "ர்" என்று எழுதாதீர்கள் என்போம். இப்படி பல வடிவச் சர்ச்சைகள் உள்ளன. ஒருங்குறி(unicode) என்பது ஒரு தரப்பாடு(standard). இந்தத் தரப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டே ஒருங்குறி எழுத்துருக்கள் உருவாகின்றன. சில சமயம் எழுதுமுறை வரலாறு அறியாத நுட்பவியலாளர்களால் எழுத்துருக்கள் வரையப்படுவதால் இந்நிலை ஏற்படுகிறது. நீங்களே ஒரு எழுத்துருவை உருவாக்கமுடியும் என்பதால் இப்பிரச்சினை என்பது ஒருங்குறி சார்ந்ததல்ல. திண்ணை இணைய இதழில் கவனித்தால் அதே ஒருங்குறி குறியாக்கத்தில் 1980களில் பயன்படுத்திய எழுத்து வடிவங்களைக் காணலாம். எனவே எழுத்துக்களின் வடிவ வேறுபாட்டிற்கும், அமைப்பிற்கும் ஒருங்குறி காரணமல்ல. நாம் பயன்படுத்தும் எழுத்துருவே காரணமாகும். எழுத்துச் சீர்திருத்தச் சட்டமியற்றியோ அதற்கேற்ப எழுத்துருக்களை உருவாக்கியோ எழுத்துவடிவத்தைக் கொண்டுவரலாம். எதிர்காலத்தில் வரவிருக்கும் சிறிய ரக மின்னணு கருவிகளுக்கு ஏற்ப தமிழ் எழுத்தின் உருவ அளவைச் சுருக்கவும் சில அறிஞர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆகவே வடிவச் சிக்கல் ஒருங்குறி சார்ந்ததல்ல.

அதே நேரத்தில் நுட்பரீதியாகப் புதிய பிழை ஒன்று தமிழ் எழுத்துருக்களில் நிகழும் என்பதைப் பொது பயனர்கள் அறிந்து கொள்ளவேண்டும். நுட்பச் சிக்கல் என்பதால் நிரலாக்க அனுபவமில்லாதவர்களால் கண்டுகொள்ள முடியாது. முன்பு குறிப்பிட்டது போல பார்ப்பதற்கு ஒரே தமிழ் எழுத்தாக இருந்தாலும் குறியாக்க மாறுபாட்டால் ஒரு கணினி புரிந்து கொள்ளாதோ அதே போல பார்ப்பதற்கு ஒரே வடிவில் ஒரே குறியாக்கமாக இருந்தாலும் வெவ்வேறு எழுத்துக்களைத் தவறாகத் தட்டச்சு செய்ய வாய்ப்புள்ளது. தமிழ் எண் ஒன்றைக் குறிக்கும் "௧" என்ற குறியீட்டைக் கொண்டு "க" என்று எழுதுவதும், ஐந்தைக் குறிக்கும் "௫" என்ற குறியீட்டை "ரு" என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்தினால் கணினியால் புரிந்து கொள்ளமுடியாது. சில பிழைகள்.
ா+்ர+்துணைக்கால் - ரகர வேறுபாடு
ா+ிர+ிதுணைக்கால் - ரகர வேறுபாடு
ெ+ளஔகாரம் - ளகர வேறுபாடு
ெ+ாமுன்னொட்டு - பின்னொட்டு வேறுபாடு
ே+ாமுன்னொட்டு - பின்னொட்டு வேறுபாடு
ோ+்ே+ர+்துணைக்கால் - ரகர வேறுபாடு
ொ+ிெ+ர+ிதுணைக்கால் - ரகர வேறுபாடு
எண் - எழுத்து வேறுபாடு
எண் - எழுத்து வேறுபாடு
ருஎண் - எழுத்து வேறுபாடு
எண் - எழுத்து வேறுபாடு
எண் - எழுத்து வேறுபாடு
கூஎண் - எழுத்து வேறுபாடு
பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் கணினியைப் பொறுத்தமட்டில் இவை பிழைகளே. இவற்றைத் தவிர்க்க சரியான எழுத்துக்களைக் கொண்டே தட்டச்சு செய்யவேண்டும்.

இணையம் முழுக்க ஒருங்குறியே நிலைபெற்றுள்ளதால் ஒருங்குறியையே பயன்படுத்தவேண்டும். இருந்தும் அரசு அலுவல் உட்பட சில இடங்களில் ஒருங்குறி அல்லாத எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டே வருகின்றன. தகவல் பாதுகாப்பிற்காகவும், அறியாமையினாலும் இணையத்திற்கு அப்பால் அரசு அலுவல் உட்பட கணிசமான கணித்தமிழ் பயன்பாடு வெவ்வேறு குறியாக்கத்தில் நடக்கும் போது அவற்றைச் சீராக ஒருங்குறிக்கு மாற்றிக் கொள்ளவும் இணையத்தில் ஓவன் என்ற புதிய குறியாக்க மாற்றி கருவியும் வெளிவந்துள்ளது. ஒருங்குறியில் கூகிளில் தேடினால் மட்டும் தேடல்கள் வருவதில்லை. பாமினி, டிஸ்கி, டேம் போன்ற குறியீடுகளும் பத்தாண்டுக்கு முன் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதால் அதிலும் தேடலாம். பல இணையத்தளங்கள் அக்குறி எழுத்துருவில் இன்றும் இருக்கின்றன. பெரும்பாலும் தற்காலத்தில் இணையத்தில் படித்து, எழுதிப் பயன்படுத்தும் புதிய பயனர்கள் ஒருங்குறியல்லாத எழுத்துருக்கள் இருப்பது கூட அறிந்திருக்க மாட்டார்கள். அத்தகையோர் பிற குறியாக்கம் குறித்து ஆய்வு செய்ய விழைந்தால் http://archive.org/web/ போன்ற சேவைகள் மூலம் கடந்தகால இணையத்தளங்களை ஆராய்ந்து பார்க்கலாம்.


இணையத்தில் எப்படியெல்லாம் தமிழ் எழுத்துக்களை எழுதலாம், பலவகை எழுத்துருக்கள் பற்றி அடுத்த பகுதியில் தொடரும்.
தமிழ் எழுத்துரு நுட்பங்கள் - I

1 comments:

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு