Pages - Menu

Sunday, June 17, 2012

புதிய சந்திப்பிழை திருத்தி

ஒரு காலத்தில் கணினியில் தமிழ் எழுத்துருக்களைச் சேர்ப்பதற்கே எழுத்துரு மென் கோப்புகளைத் தேடவேண்டியிருந்தது. பின்னர், தமிழ்த் தட்டச்சிற்குத் தமிழ் எழுத்துபெயர்ப்புகளைத்தேட வேண்டியிருந்தது. இன்று தமிழ்ப் பிழை திருத்திகளைத் தேடவேண்டிய காலமிது. இணையத் தமிழில் சந்திப்பிழைகள், வாக்கியப்பிழைகள், எழுத்துப் பிழைகள், மரபுப் பிழைகள் உட்பட பலவானவை [எதிர்நீச்சல் தளம் உட்பட] மலிந்து காணக்கிடைக்கிறது. சிறியவர், பெரியவர், புதியவர், பிரபலமானவர் என எங்கும் பிழைகளைக் காணலாம். சிறந்த எழுத்தாளர்களின் எழுத்திலேயே பிழைகளைக் காணலாம். அவை அப்படைப்பைத் திருத்திய ஆசிரியரின் கவனக்குறைவாகவும் இருக்கலாம். தமிழ்த் தளங்களின், தமிழ்ப் பயனர்களின், தமிழ் வாசகர்களின் பரவலுக்கேற்ப தமிழ் திருத்திகள்(Editor) புழக்கத்தில் அதிகமில்லை. பரவலான தமிழ எழுத்துப்பிழைகளைத் திருத்திக் கொள்ளவுதவும் சர்ச்கோ என்ற ஒரு செயலி ஏற்கனவே இணையத்தில் உள்ளது. கூகிள் தட்டச்சுக் கருவியிலும் ஓரளவிற்கு எழுத்துப் பிழைகளைக் களையலாம். இவைகளுக்கு அடுத்து சந்திப்பிழைகளைத் திருத்த "நாவி" என்கிற புதுச் செயலி தற்போது அறிமுகமாகியுள்ளது. தற்போதுவரை கொஞ்சம் மரபுப் பிழைகளைத் திருத்தவும், 40%{22/07/2012ன் படி 70%} சந்திப் பிழைகளைத் திருத்தவும், 90% சந்திப்பிழைகளைப் புரிந்து கொள்ளவும் இதன் மூலம் முடிகிறது, மேலும் மேம்படுத்தப்படவும் உள்ளது,


ஒரு மொழிக்குப் பிழை திருத்தி என்பது 100% செம்மையாக இருக்கமுடியாது, காரணம் தமிழ் போன்ற மொழிகளில் ஒரு சிறு புள்ளியோ, சிறு ஒற்றோ பொருளையே மாற்றும் வல்லமை கொண்டது. எப்படி எழுதினாலும் ஏதோ ஒருவிதத்தில் பொருள்படும், எழுதியவர்தான் என்ன பொருளில் எழுதினார் என்பதை அவர்தான் தீர்மானிப்பதாக இருக்கும். இருந்தபோதும் அடிக்கடி புழக்கத்தில் பயன்படும், அடிப்படை உருபுகள், ஒலிக்குறிப்புகள் முதலியவற்றைக் கொண்டு மென்பொருளாலும் ஓரளவிற்குக் கணிக்கமுடியும்.

இச்செயலியில் வாக்கியத்தைப் போட்டு ஆய்வு செய் பொத்தானைத் தட்டினால். வலிமிகும் இடங்களை ஆராய்ந்து பரிந்துரைக்கும். அதுபோக கணிக்கமுடியாத வார்த்தைகளுக்கு ஏற்ற இலக்கண விதிகளைச் சுட்டிக்காட்டும். வலி மிகாத இடங்களில் தவறாக வலி மிகுந்தாலும் கொஞ்சம் கண்டுபிடித்துக் காட்டும். ஆய்வு செய்து காட்டும் பகுதியில் வலி மிகுமிடங்கள் பச்சை நிறத்திலும், வலி மிகாத இடங்கள் சிவப்பு நிறத்திலும், கணிக்கமுடியாத வார்த்தைகள் தடித்த வடிவத்திலும் இருக்கும். அச்சொற்களைச் சொடுக்கினால்[click] அதற்கான காரணத்தைக் காணலாம். மென் பரிந்துரை கூடுமானவரை பிழையற்று இருக்கும். சந்தேக வார்த்தைகளைக் கீழ் கண்ட விதிகளைப் படித்து நீங்களே உங்கள் விருப்பமான வார்த்தையைத் தேர்வு செய்து கொள்ளலாம். இறுதியாக "சம்மதம்" என்கிற பொத்தானில் சம்மதத்தைக் கொடுத்ததும் வாக்கியங்கள் திருத்தப்பட்டிருக்கும். பிழைகளைத் திருத்தவும், கற்றுக்கொள்ளவும் புதியவர்களுக்கு மிகவும் பயன்படும்.


நாவி

இச்செயலி பிறமொழிச் சொற்கள்[காபி, கலெக்டர்], உயர்திணைப் பெயர்கள்[கண்ணன், சான்சன்], இடப்பெயர்கள்[பொன்னமராவதி, வத்தலகுண்டு, கானாடுகாத்தான்] போன்ற எண்ணற்ற கணிக்கமுடியாத பெயர்களைக் கண்டுணராது. மற்றத் தமிழ் இலக்கண வரம்பிற்குட்பட வாக்கியங்களைப் பகுத்து சந்திப் பிழைகளைத் திருத்த முயலும்/பரிந்துரைக்கும். சரியான காற்புள்ளி, நிறுத்தப் புள்ளி, கேள்விக்குறி, தகுந்த இடைவெளி, தேவையற்றயிடத்தில் பதம் பிரிக்காமல் என முறையான வாக்கியமாக இருந்தால் சிறப்பு.

மேற்கோள்கள்:
கொஞ்சம் தொல்காப்பிய/நன்னூல் இலக்கண விதிகளும்,
கவிக்கோ.ஞானச்செல்வன் அவர்களின் பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! என்ற தொகுப்பும்,
தமிழ் இணையப் பல்கலைக் கழக இலக்கணப் பாடங்களும் இச்செயலியின் ஆதாரத் தரவுகளாகும்.

இணையத் தளத்தில் ஓர் இணைப்பு தர:

நேரடியாக பிளாக்கர் தளத்தில் இணைக்க



பயன்படுத்திவிட்டுக் குறைகளையும், அபிவிருத்தி ஆலோசனைகளையும் வழங்குங்கள்.
இது எப்படி செயல்படுகிறது என்று அறிய இங்கு வாருங்கள்.

27 comments:

  1. நல்ல விசயம்...நானும் பகிர்ந்து கொள்கிறேன்

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  3. பதிவிட்டமைக்கு நன்றி சுரேந்திரன்

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல்.. இதுபோன்ற தகவல்கள் இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும்.

    பதிவைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..!

    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா..!

    ReplyDelete
  5. சந்திப்பிழைகளை சரிசெய்கின்றது நல்ல விசயம் நன்றிகள்.....

    ReplyDelete
  6. மிக பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  7. பயனுள்ள நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  8. எடுத்துக்காட்டுத் தொடர்கள் பிழை திருத்தி உருவாக்கியவரின் மீது ஐயத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையில் தமிழ் ஆர்வலர் எனில் நல்ல தொடரைக்கையாளலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    ReplyDelete
  9. அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்,

    உங்கள் கருத்துகளைத் தந்தமைக்கு நன்றி. மாதிரி வாக்கியத்தில் எழுத்துப்பிழைக்காகவும், நகைச்சுவைக்காக சில சுய பகடிகளைச் செய்து கொண்டேன். தமிழைத் தவறாக எங்கும் குறிப்பிடவில்லை. தவறைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

    மேலும் திருத்தியில் உள்ள இலக்கணப் பிழைகளையும், சொல் இலக்கணம் தொடர்பான ஆலோசனைகளை உங்களைப் போன்றோர்களிடமிருந்து பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. வணக்கம்தமிழுக்கு ஆக்கமான மென்பொருள் தந்தமைக்குப் பாராட்டுகள்.நாவி மென்பொருள் உருவாக்குநரைப் பற்றி அறிய விருப்பம்.தமிழ்மென்பொருள்கள் குறித்த ஆய்வுக்கு விவரம் தேவை.என் தனி மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்muelangovan@gmail.com

    ReplyDelete
  11. நானும் இதைப் பார்த்தேன். அற்புதமான முயற்சி! நீங்கள் கூறுவது போல், என் தமிழ்ச் சிற்றறிவுக்கெட்டிய வரை, இது ஓரளவுக்கு இது நன்றாகவே திருத்துகிறது.

    தமிழ் அறிஞர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் பலர் இப்படிப்பட்ட மென்பொருட்களை உருவாக்கிக் காசுக்கு விற்கும் இக்காலத்தில், இதை நீங்கள் இலவசமாக வழங்க முன்வந்ததோடன்றி, இதை நீங்கள்தான் உருவாக்கினீர்கள் என்பதைக் கூட வெளிப்படையாகச் சொல்லாமல் யாரோ கண்டுபிடித்த ஒன்றைப் பற்றிய விவரத்தைப் பகிர்ந்து கொள்வது போல் எழுதியிருப்பது பெரிதும் போற்றுதலுக்குரியது!! கைகூப்பி உங்களை வணங்குகிறேன்! நன்றி! தொடர்ந்து இதை மேம்படுத்துங்கள்! வருங்காலத் தமிழ் உலகிற்கு இஃது இன்றியமையாத் தேவை!

    ReplyDelete
  12. இதைப்பற்றி ஏற்கனவே தெரிந்து இருந்த போதிலும் எழுதி வைத்துள்ள பதிவுகளை இதில் போட்டு பார்க்கும் போது நம் லட்சணம் புரிகின்றது. நீங்கள் தான் உருவாக்கினீர்களா?

    பாராட்டு மற்றும் வாழ்த்து.

    என் பதிவில் இதைப்பற்றி எழுத விரும்புகின்றேன். தொடர்பு கொள்ள முடியுமா

    ReplyDelete
  13. @P N A Prasanna
    உங்கள் கருத்திற்கு நன்றி. ஆனால் வடமொழிச் சொல்லைப் பயன்படுத்த தொல்காப்பியரே அனுமதியும் அளித்துள்ளார் என்பதால் யோசித்துப் பார்க்கிறேன்

    ReplyDelete
  14. நல்ல முயற்சி பாராட்டுக்கள் !

    ReplyDelete
  15. சாலச்சிறந்த, காலத்துக்கு தேவையான அரிய முயற்சி... ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்கு எனது நன்றிகள்... இது ஒரு தனித்துவமான முயற்சி என்பதால் இயன்றளவு வடமொழி உபயோகத்தை குறைத்தால் நல்லது என்று நினைக்கிறன்... இக்கட்டான நிலையில் தொல்காப்பியர் கூறியது போல் பிறமொழி சொற்களை பயன்படுத்துவோம்...

    ReplyDelete
  16. நல்ல முயற்சிதான். எனினும் இதில் இலக்கணத்தை மட்டும் முக்கியமாகக் கருதாமல், நடைமுறைத் தமிழையும் கவனிக்க வேண்டும். இதிலுள்ள பிழைகளை முதலில் திருத்துங்கள்.
    (1) கணிக்க முடியாத பெயர்களைக் “கண்டுனராது” என வந்திருப்பதைத் திருத்துங்கள்.(ண)
    (2) “இச்செயலின் ஆதாரத் தரவுகளாகும்”என்பது, செயலியின் என வந்திருக்க வேண்டும்.
    (3)“இணையத் தளத்தில் ஒரு இணைப்பு தர:” என்பது ஓர் இணைப்பு என வரவேண்டும்.
    எனினும் இதனை அவரவர் தளத்தில் பொருத்துவது இன்னும் எளிமையாக்கப்பட வேண்டும்.
    அன்புடன் - நா.முத்துநிலவன், புதுக்கோட்டை

    ReplyDelete
  17. “சொற்களைச் சொடிக்கிக் காரணம் காண்க” என்று உள்ளது.
    சொற்களைச் சொடுக்கிக் காரணம் காண்க என வரவேண்டும். (சொடுக்குதல்தான் சொல்)

    ReplyDelete
  18. @Muthu Nilavan
    தவறுகளைத் திருத்திவிட்டேன். பலர் கவனிக்காத பிழைகூட ஆசிரியர் கண்களுக்கே புலப்படும் என்பதை உணர்ந்தேன். நன்றி.

    ReplyDelete
  19. நல்லது. நன்றி. இப்போது நமது 3(இதையும்சேர்த்து 4) பின்னூட்டங்களையும் நிரந்தரமாக எடுத்துவிடலாம். (பிழைகளைக் கண்டுபிடிப்பதே ஆசிரியர் பணி என்னும் பழியைத் துடைக்க வேண்டும்)

    ReplyDelete
  20. நாவியை அதிகமாகப் பயன்படுத்துகிறவர்களில் நானும் ஒருவன். நாவி மூலம் தமிழில் எழுதக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லலாம். நன்றி.
    “அதிகமாகப் பயன்படுத்துகிறவர்களில்” போன்ற தொடர்களில் “ப்” வரவேண்டும் எனக் கூறுகிறது. “மழை காரணமாக குருவி மகிழ்ந்தது” என்பதிலும் “க்” வேண்டும் எனக் கூறுகிறது. இவற்றிற்குக் காரணமாக ’நான்காம் வேற்றுமை விரியாக இருந்தால்’ என்றும் கூறுகிறது. மூலங்களில் தேடிப்பார்த்தபோது, http://www.tamilvu.org/courses/degree/c021/c0214/html/c0214661.htm பக்கத்தில் ‘ஆக, ஆய், என என்று முடியும் வினையெச்சங்களின் முன் வல்லினம் மிகல்’ எனவும், மொழி அறக்கட்டளை வெளியிட்ட தமிழ் நடைக் கையேடுவில் ‘“ஆக” என்ற வினையடை விகுதியின் பின் ஒற்று மிகும்’ எனவும் கண்டேன். தாங்களோ, வேறு பயனர்களோ விளக்கினால் நலமாயிருக்கும்.

    ReplyDelete
  21. @S Winston Cruz
    வலிமிகுவதற்கான காரணத்தை நாவி சொல்லவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இரு உதாரணங்களிலும் ஓற்று வரும்.

    வினையடை
    அதிகமாகப் பயன்படுத்துகிறவர்களில்
    மழை காரணமாகக் குருவி மகிழ்ந்தது


    நான்காம் வேற்றுமை விரி
    தந்தைக்காகச் செய்தான்


    அடுத்த மேம்பாட்டில் அதனையும் சேர்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  22. விளங்கிக் கொண்டேன். விரைவில் பதில் அனுப்பியதற்கு நன்றி.

    ReplyDelete
  23. வணக்கம்.நல்லது.இந்த செயலி play store ல் கிடைக்குமா?

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது