Pages - Menu

Tuesday, October 22, 2013

கேள்வி பதில் [வலைப்பூக்கள்] III

வலைப்பூக்கள் சார்ந்த கேள்வி பதில் பகுதிக்கான கேள்விகள் கொஞ்சம் சேர்ந்துவிட்டதால் இத்தொடரின் மூன்றாவது பதிவு இது.

எனது வலைப்பூவில் கீழிருந்து மேலாக எழுத்துக்களை ஓடவிடுவது எப்படி?
ஹெச்.டி.எம்.எல். நிரலில் direction="up" என்ற பண்பை marquee என்ற அங்கத்தில் சேர்ப்பதன் மூலம் இந்த வடிவமைப்பைப் பெறலாம். கீழே ஒரு உதாரணத் தொடரமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
<marquee direction="up" scrollamount="3">
<ul>
<li>என்னை மாற்றிக் கொள்ளுங்கள்</li>
<li>என்னையும் மாற்றிக் கொள்ளுங்கள்</li>
<li>என்னையும் கொஞ்சம்</li>
</ul>
</marquee>
இதை விரும்பிய இடத்தில் வலைப்பூக்களில் இட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பழைய ப்ளாக்ஸ்பாட் தளத்திலிருந்து புதிய களப்பெயர்[Domain name] வாங்கிய பின், தமிழ்மணத்தில் எனது பதிவுகளை இணைக்க முடியவில்லை.
தமிழ் மணத்தில் உங்கள் பழைய பிளாக்ஸ்பாட் முகவரி மட்டும் தான் சேமிக்கப்பட்டுள்ளதால் புதிய முகவரியைத் தானாக எடுத்துக் கொள்ளாது. அதனால் நீங்கள் புதிய களப்பெயர் வாங்கிய உடன் தமிழ்மணத்தில் அம்முகவரியை மாற்றச் சொல்லி கோரிக்கை வையுங்கள். அதுவரை தீர்வு என்ன? என்று குழம்ப வேண்டாம். பொதுவாக ப்ளாக்கர் தளங்களில் களப்பெயர் வாங்கிய பின்னும் உங்கள் பிளாக்ஸ்பாட் முகவரி வழிமாற்றியாகச் செயல்படும். அதனால் அம்முகவரியை தமிழ்மணத்திற்குச் சென்று முதற்பக்கத்தில் உள்ள பெட்டியில் உதாரணமாக "http://ethirneechal.blogspot.com" என்று பழைய முகவரியைப் போட்டு இணைக்க வேண்டும் அவ்வளவே. பிறகு எப்போதும் போல அந்தப்பதிவு தமிழ் மணத்தில் இணைந்து கொள்ளும். தமிழ்மண நிர்வாகிகளுக்கு என்ன வேலைப் பளுவோ தெரியாது ஆனால் அவர்கள் உங்கள் புதிய தளத்தின் பெயரைப் பதிவு செய்து கொள்ளும் வரை ஒவ்வொரு பதிவிற்கும் இதுதான் தீர்வு.


ஒரு இணையத்தளப் பக்கத்தைக் கீழ்நோக்கி உருட்டும் போது அதன் பக்கமுடிவில் தானாக அடுத்தப் பக்கத்தின் செய்திகள் வந்துவிடும் இதற்குப் பெயர் pagination என்பார்கள். உதாரணம்: இன்டலி, நமது பக்கம் இம்மாதிரி தான்தோன்றும் பக்க வசதியை ப்ளாக்கர் தளத்திற்குச் செய்யமுடியுமா?
இம்மாதிரியான வசதிகளை அனைத்துத் தளங்களுக்கும் செய்ய முடியும். ஆனால் அதற்கு ஏற்ற பக்க வடிவமைப்பு நிரல்கள் வேண்டும். அத்தகைய ஒரு நிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ப்ளாக்கர் தளக்கோலத்தில்[layout] "Add a Gadget" சொடிக்கி, "HTML/JavaScript" என்ற பெட்டிக்குள் இந்த நிரல்களைப் போட்டுச் சேமிக்கவும். முக்கியமாக அது blogpost gadget பகுதிக்குக் கீழே வருமாறு சேமிக்க வேண்டும்.

<script src='https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.8.1/jquery.min.js'/></script/>
<script src="https://googledrive.com/host/0BxqXn__-BYCRZ1FrdjRfdEFXb0E/" type="text/javascript"//></script/>
இத்தளத்தின் பிற பதிவுகளில் பகிரப்படும் நிரல்கள் போல இது எதிர்நீச்சல் தளம் சார்பாக எழுதப்பட்ட நிரலல்ல. ஆகையால் இந்நிரலின் வழுக்களுக்குத் தீர்வு இங்கு கிடைக்காமல் போகலாம்.

பிளாக்கர் தளம் தானே இலவசமாக பதிப்பிக்க இடம் தருகிறதே பிறகு ஏன் சிலர் பதிவுகளைக் கட்டணச் சேமிப்பகத்தில்[web hosting] வைக்கிறார்கள்? ப்ளாக்கரில் என்ன குறை கண்டீர்?
ஆம் பிளாக்கர் இலவசமாகத் தான் பதிவுகளைச் சேமிக்க இடம் தருகிறது, மேலும் மறுமொழியாகட்டும், பின்தொடரும் வசதியாகட்டும் முக்கியமானவை எல்லாம் சிறப்புதான் ஆனால்... குறையென்று சொன்னால்,
ப்ளாக்கரில் உங்களால் சொந்தமாகத் தள வடிவமைப்பு செய்யவேண்டுமெனில் அவர்களின் ப்ளாக்கர் வடிவமொழியில் தான் அதை செய்ய வேண்டும்.
அவர்களுக்கு என்று (Terms and conditions) நிபந்தனைகள் உண்டு, அவை மீறப்படுவதாகத் தெரிந்தால் அந்த நொடியே உங்கள் தளத்தை தன்வசப் படுத்திக் கொள்வார்கள். முறையாக திரும்ப பெறாமல் அவற்றிலிருந்து பதிவுகளை மீட்க முடியாது. இதற்கான காலம் 30 ~ 60 நாட்கள் ஆகலாம்.
சில சந்தர்பங்களில் கூகிளின் பிற சேவையில் பிரச்சனைஎன்றால் மொத்தக் கணக்குகளையும் முடக்கும் பொது பிளாக்கர் கணக்கும் பலியாகும்.
ப்ளாக்கரில் தளமுகவரியில் விரும்பிய பக்கமுகவரியை அமைக்கமுடியாது. அதாவது 2013/10 என்று ஆண்டும் மாதமும் கூடவே வரும்.

மேற்கண்ட பதில் ப்ளாக்கர் தளத்தை மட்டம் சொல்ல அல்ல தனியான பதிவு சேமிப்பகத்தைவிட [blog storage] ப்ளாக்கரில் உள்ள வசதி குறைபாடுகளே. நீங்கள் எதற்காக தளத்தை உருவாக்குகிறீர்களோ அதைவைத்து சிறந்ததைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்

இறுதியாக,
ப்ளாக்கர் மறுமொழிகளில் அநேக வசதியுடன் மறுமொழியிட உதவும் nccode நீட்சியின் பழைய நிரல்கள் கூகிள் மூடுவிழாக்களுள் சிக்கி வழங்கிகளில் அழிக்கப்பட்டு விட்டது. இப்பக்கத்தைப் பார்க்காதவர்களுக்காக அதன் புதிய நிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விரும்புகிறவர்கள் இதனை ப்ளாக்கரில் Template -> edit HTML-> சென்று </body> என்ற பகுதியின் மேலே போட்டுவிடவும். அவ்வளவே
<script src='https://googledrive.com/host/0B4h6e6FJ1K3LeXJ2ODhxWlMzejA/' type='text/javascript'/>


நீங்களும் வலைப்பூக்கள், இணையம் சார்ந்த கேள்விகளை இப்பகுதிக்கு மறுமொழியிலோ, மின்னஞ்சலிலோ கேட்கலாம். விடை தெரிந்தால் உங்களுக்கு உதவப்படும். யாரேனும் கேட்டு கொஞ்சம் கேள்விகள் சேர்ந்த பின் அடுத்த பகுதி தொடரும்...

3 comments:

  1. தங்களின் தளத்தில் அனைத்தும் மிகப் பயன்மிக்க தகவல்கள். தங்களின் இணைய செயலிகளையே பதிவுகளில் ஒற்றுமிகு மிகா இடங்களைச் சரிப் பார்க்க பயன்படுத்துகின்றேன். தமிழில் சொற்களைத் தானே திருத்தும் வசதி இல்லையா? இருந்தால் அறியப்படுத்துங்கள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நானும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். சிறப்பான ஒரு எழுத்துப் பிழை திருத்தி இணையத்தில் இல்லை. தற்போதைக்கு searchko.in/spellchecker_test/index.html இதுதான் உள்ளது. சில வணிக எழுத்துப்பிழை திருத்திகள் குறுந்தகட்டில் கிடைக்கிறது. அவற்றின் செயல்பாடுகள் எப்படி என்று தெரியாது. சில மாதங்களில் நாவி செயலி, எழுத்துப் பிழைகளையும் காட்டும் விதத்தில் மேம்படுத்தப் படவுள்ளது.

      Delete
  2. பயனுள்ள பதில்கள்... இங்கு பதில்தந்து பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!!!

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது