Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Monday, March 16, 2015

Info Post
தமிழில் நாவி சந்திப்பிழை திருத்தி உட்பட மொத்தம் நான்கு திருத்திகள் உள்ளதாக தமிழ்ப்பேராயம் கூறுகிறது. ஆனால் உலகில் யாவரும் இணையத்தில் பயன்படுத்தும் வண்ணம் தமிழில் முழுமையான ஒரு திருத்தி உருவாக்குவது மிகவும் சவாலான காரியம். தமிழ் மென்பொருட்களுக்கு வணிகச் சந்தை இல்லையென்பதாலும், ஆய்வுச் செலவும், ஆக்கச் செலவும், இணையவெளியீட்டுச் செலவும் பெரிய தடையாகவுள்ளதால் இதுவரை ஒரு முழுமையான மென்பொருள் வெளியாகவில்லை. அதற்கான ஒரு சிறுமுயற்சியாக இணையவழியில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வாணி என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தி உருவாகியுள்ளது. தற்போது பீட்டா பதிப்பாக(சோதனை நிலையில்) வெளிவந்துள்ள இத்திருத்தி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு விரைவில் செழுமையான வடிவமாக வெளிவரும். அதுவரை முக்கியமான சில சொற்களும் விடுபட்டிருக்கும் வழுக்களும் இருக்கலாம், ஆனால் பல்வேறு இலக்கண விதிகளைப் பயன்படுத்தி இத்திருத்தி இயங்குவதால் சுமார் 70மில்லியனுக்குமேல் சொல்வடிவங்களைப் புரிந்துகொள்ளும்.

முகவரி: வாணி

நாவியில் பயன்படுத்தியது போல உங்கள் வாக்கியங்களை வாணியில் கொடுத்து "திருத்துக" பொத்தானை அழுத்தவும், பின்னர் பிழை திருத்தியபிறகு "சம்மதம்" பொத்தானை அழுத்தி, திருத்தங்களைப் பெற்றுக் கொள்ளலாம். சுயதிருத்தம் என்ற தேர்வு பொத்தானைத் தேர்வு செய்யாவிட்டால் இக்கருவி தானாக எந்தப் பிழையையும் திருத்தாது, வெறும் பரிந்துரை மட்டும் வழங்கும். காட்டப்படும் பரிந்துரைப் பட்டியலில் வாணியின் பரிந்துரைகளும், பயனர் அளித்த சொல்லும் இருக்கும். கூடுதலாக பயனர் திருத்திக் கொள்ள எழுத்துப்பெட்டியும் உள்ளது. ஒரு சொல்லை மட்டுமோ அல்லது மொத்தமாகவோ மாற்றிக் கொள்ளலாம். மேலும் உதவிக்குறிப்புகள் இங்கே
இத்திருத்தி என்ன செய்யும் என்றால்,

இறுதி எழுத்துச் சந்திகள் தவிர (அதற்கு நாவியைப் பயன்படுத்தலாம்) மற்ற சந்திகளைக் கணித்துப் பரிந்துரைக்கும். உதாரணம்:எடுத்துகொள்ள -> எடுத்துக்கொள்ள, அகட்சி -> அக்கட்சி என்று பரிந்துரைக்கும்.

புணர்ச்சி விதிப்படி இதன் சொற்பிழை சோதனை அமைவதால் புணர்ச்சி தவறிய சொற்களையும் சுட்டிக் காட்டும். உதாரணம்:நூறுக்கும் - > நூற்றுக்கும் என்று சரியாகப் பரிந்துரைக்கும். "கருத்தில் கொண்டு" என்று எழுதினாலும் "கருத்திற் கொண்டு" என்று எழுதினாலும் புரிந்துகொள்ளும். "பொருற் பெயர்" என்று தவறாக எழுதினால் இவ்வழியில் "பொருட் பெயர்" எனப் பரிந்துரைக்கும்.

ல-ள-ழ, ன-ந-ண, ர-ற போன்ற வேற்றெழுத்து வேறுபாடுகளைக் கண்டு பரிந்துரைக்கும். சில இடங்களில் (ஒளி,ஒலி,ஒழி) இயல்பான சொல் இருந்தால் தவிர இதர இடங்களில் சுட்டிக் காட்டி பரிந்துரைக்கும். உதாரணம்:ஒலிந்துவிட்டேன் -> ஒளிந்துவிட்டேன்/ஒழிந்துவிட்டேன், சுவறில் -> சுவரில் எனப் பரிந்துரைக்கும்.

பிழையான சொற்களைக் கண்டுபிடித்த பிறகு இருவகையாகப் பரிந்துரைகள் வழங்கப்படும். ஒன்று இலக்கணம் சார்ந்த திருத்தங்களான புணர்ச்சி திருத்தம், ஒற்று, வேற்றெழுத்து திருத்தம் போன்றவற்றைச் செய்யும். இரண்டாவது இலக்கணம் சாராத திருத்தங்களான தட்டச்சுப் பிழை திருத்தம், வழக்குமொழி திருத்தம், சில பிறமொழிச்சொல் திருத்தம் போன்றவற்றையும் செய்யும்.

பிறமொழிச் சொற்கள் சிலவற்றையும் திருத்தும் உதாரணம்: டாக்டர் -> முனைவர்/மருத்துவர்
வழக்குமொழிகளைப் பொறுத்தமட்டில் பெரும்பான்மையான திருத்தங்கள் தென்தமிழக வழக்கிற்கு வழங்குகிறது. வடதமிழகம், இலங்கை வழக்குகளைக் காலப்போக்கில் இணைத்துக்கொள்ளப்படும். உதாரணம்: விழுந்திருச்சே ->விழுந்துவிட்டதே, அடிச்சுகிட்டு -> அடித்துக்கொண்டு

தட்டச்சுப் பிழைகள் என்பது கண்ணுக்குத் தெரிந்த எழுத்துப் பிழைகள் மட்டுமல்ல கண்ணுக்குத் தெரியாத தவறான ஒருங்குறி வடிவங்களும்தான். பல்வேறு தட்டச்சு இடைமுகங்களில் தமிழ் உள்ளீட்டு முறைகளில் சிலசமயம் தவறாக எழுத்துக்கள் சேர்ந்துகொள்ளும். உதாரணம்: க + ஒ என்பதை க+ எ+ அ என்று எடுத்துக்கொள்ளும் கொள்கை -> கொள்கை. துணைக்காலுடன் ஒற்றுக்குறி சேர்ந்து ரகரவொற்றாகத் தெரியும் ா் -> ர் போன்ற பல பரிந்துரைகளும் உண்டு

வழமையான பிற மொழி சொற்பிழை திருத்தி போல பிழையாக எழுதிய சொற்களை அடிக்கோடிட்டுக் காட்டிவிடும். சில முக்கிய பிரமுகர்கள், கதைமாந்தர்கள், முக்கிய நகரங்கள் தவிர பொதுவாக உயர்திணைப் பெயர்கள், இடங்களின் பெயர்கள் தற்போதைக்குச் சேர்க்கவில்லையென்பதால் அச்சொற்கள் அடிக்கோட்டுக் காட்டப்படும். எனவே அடிக்கோடிட்டுக் காட்டுபவை எல்லாம் பிழையென்று அர்த்தமில்லை திருத்தியின் பட்டியலில் இல்லாத சொல்லெனப் பொருள் கொள்க

இச்செயலியின் ஆய்விற்கே பொருளாதாரச் சிக்கல்கள் நிலவியபோது இணைய வெளியீடு முடியாமல் ஓராண்டு கடந்துபோனது. பெருந்தன்மையுடன் வலைத்தமிழ் நிறுவனம் தனது வழங்கியைக் கொடுத்துதவியதால் தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் வலைத்தமிழ் ச. பார்த்தசாரதி அவர்களுக்கும், இலக்கண ஆலோசனைகள் அளித்துவரும் முனைவர் செங்கைப் பொதுவன் அவர்களுக்கும், தொடர்ந்து ஆலோசனைகளும், பலருக்கு அறிமுகமும் செய்துவரும் ஜோதிஜி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பயன்படுத்திப்பாருங்கள். வழமைபோல குறைகளையும் ஆலோசனைகளையும் எமக்கு அறியத்தாருங்கள், பயனுள்ளதாக இருந்தால் வாணியை அடுத்தவருக்கும் அறியத் தாருங்கள்

இணையத் தளத்தில் ஒரு இணைப்பு தர:

நேரடியாக பிளாக்கர் தளத்தில் இணைக்க

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எப்போதும் பயன்படுத்துகிறேன்...

மேம்படுத்தப்பட்ட செயலிக்கு நன்றிகள்...

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

மிகப்பெரிய சேவை அதிலும் இலவசமாக .தமிழ் கூறும் இணைய நல்லுலகம் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறது.நன்றி .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல முயற்சி பயன்படுத்திப் பார்க்கிறேன்.

Yarlpavanan said...

நல்ல முயற்சி
வாழ்த்துகள்

சேலம் தேவா said...

தமிழுக்கான உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்..!!நன்றிகள்..!!

இ.பு.ஞானப்பிரகாசன் said...

ஐயா! சில மாதங்களுக்கு முன் 'நாவி'யைப் பயன்படுத்த வந்தபொழுது 'வாணி'யைக் கண்டேன். பெருமகிழ்ச்சி அடைந்தேன்!

தமிழில் சந்திப் பிழைகள்தாம் மிகப் பெரிய சவால்; அவை தமிழ்ப் புலவர்களுக்கே தண்ணீர் காட்டுபவை எனப் பலரும் மிரட்டி வந்த, வருகிற வேளையில் 'நாவி'யை அறிமுகப்படுத்தி, இந்தத் தலைமுறையினரும் ஓரளவு சந்திப் பிழையின்றி எழுத இயலும்; அஃது ஒன்றும் இயலாத செயலில்லை என்று தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஊக்கமளித்த தாங்கள் இப்படியொரு முழு திருத்தியையே வடிவமைக்கிறீர்கள் என்றால், அது எப்பேர்ப்பட்டதாக இருக்கும் என்று நான் பெரிதும் உவகையடைந்தேன். ஆனால், இதைப் பயன்படுத்திப் பார்க்க என்னிடம் குரோம் உலவி இல்லை. கணினியில் இடப் பற்றாக்குறை என்பதால் என்ன செய்வதெனவும் தெரியவில்லை. இருந்தாலும், இருக்கிறவற்றுள் எதையாவது அழித்துவிட்டாவது குரோமை நிறுவி இதைப் பயன்படுத்திப் பார்க்கத்தான் போகிறேன். அப்படிச் செய்யாவிட்டால் 'பிழை திருத்துநன்' எனச் சொல்லிக் கொள்ளவே, இந்தத் துறையில் இருப்பதற்கே தகுதியற்றவனாகி விடுவேன்.

பிழை திருத்தத்துறையில் சிறியேன் கடந்த சில ஆண்டுகளாகத்தான் பணியாற்றி வருகிறேன் என்றாலும், இதற்குள்ளாகவே ஓரளவு நல்ல பெயர் எடுத்திருக்கிறேன். புதிதாக எழுத வருபவர்கள், வலைப்பதிவர்கள் போன்றோரின் நூல்கள் மட்டுமின்றி, எழுத்தாளர் ராஜேஷ்குமார், வாஸந்தி போன்ற பெரிய எழுத்தாளர்களின் நூல்களையும் நிறையவே பிழை திருத்தம் செய்திருக்கிறேன். எனவே, இந்த மென்பொருள் வடிவமைப்பில் 'பிழை திருத்துநர்'களின் உதவி ஏதாவது தேவைப்படுமானால் தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். மிகுந்த ஆவலுடன் ஒத்துழைப்பேன்!

இ.பு.ஞானப்பிரகாசன் said...

அடடே! குரோமில் மட்டுமில்லாமல் எல்லா உலவிகளிலும் இயங்கும்படி செய்துவிட்டீர்களா? மிக்க மகிழ்ச்சி ஐயா! பயன்படுத்திப் பார்த்து விரைவில் என் கருத்துக்களைக் கூறுகிறேன்.

Unknown said...

Apple-la vandachaa!

கிரி said...

உங்களோட சந்திப் பிழை திருத்தி பயன்படுத்தி வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

என்னுடைய பழைய இடுகைகளை எல்லாம் இதன் மூலம் சரி செய்து வருகிறேன்.

நீங்க செய்து இருக்கும் உதவி அசாதாரணமானது.

ஜோதிஜி கூறிய பிறகு இது குறித்து அறிந்து கொண்டேன்.

உங்கள் தளத்தைப் பற்றிய அறிமுகத்தை ஜோதிஜி பலருக்கும் கொண்டு சென்று இருக்கிறார்.

சந்திப்பிழை திருத்தி அனைத்தையும் சரி செய்வதில்லை.. விரைவில் இதையும் சரி செய்ய முயற்சி எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சிறப்பான முயற்சிக்கு பாராட்டுகள். உங்கள் தளத்தால் அதிகப் பயன்களைப் பெற்று இருக்கிறேன்.

Unknown said...

i need you contact no

முனைவர் பா.குப்புசாமி said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். நன்றி.

எம்.ஞானசேகரன் said...

முன்பே கேள்விப்பட்டதுண்டு. ஆனால் பயன்படுத்தியதில்லை. அமேசானில் புத்தகத்தை வெளியிட முயன்ற போதுதான் பயன்படுத்த ஆரம்பித்தேன். மிக அருமை.