Pages - Menu

Saturday, October 12, 2019

மலையாளக் கணிமையும் தமிழ்க் கணிமையும்

மலையாளக் கணிமையும் தமிழ்க் கணிமையும்
தமிழ்க் கணிமையில் பல்வேறு காலங்களில் பல்வேறு நபர்களால் வளர்க்கப்பட்டுத் தமிழைக் கணினி, கையடக்கக் கருவி என அனைத்துச் சாதனங்களிலும் பயன்படுத்தி வருகிறோம். அது போல மலையாளத்திற்கென கணினியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த மூவருக்கு மகரிஷி பாத்ராயான் வியாஸ் சம்மன் விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்தாண்டு குடியரசுத் தலைவர் விருதளிக்கிறார். தமிழுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனாதிபதி வழங்கும் இளம் அறிஞர் செம்மொழி விருதினைப் போல பிற ஒன்பது இந்திய மொழிகளுக்கும் மகரிஷி பாத்ராயான் வியாஸ் சம்மன் என்ற விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த விருதினைப் பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அதிலொருவர் நுட்பவியளர் சந்தோஷ் தொட்டிங்கல் (http://thottingal.in) ஆவர். இவர் மலையாளத்தில் பல எழுத்துருக்கள், உள்ளீட்டுக் கருவிகள், உரை-ஒலி மாற்றிகள், கையெழுத்து உணரி போன்ற மொழிக்கருவிகள் பலவற்றை உருவாக்கியுள்ளார். மலையாளம் மட்டுமல்லாது தமிழ் உட்பட பிறமொழிகளுக்கும் இவர் பங்களித்துள்ளார். இவரின் எழுத்துருக்களும் கருவிகளும் தமிழ்க் கணிமைக்கும் பயன்பட்டு வருகிறது. விக்கிமீடியா அறக்கட்டளையில் மென்பொறியாளராகப் பணியாற்றிவருகிறார். கட்டற்ற மென்பொருள் பயன்பாட்டிற்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்து வரும் இவர் சுதந்திர மலையாளக் கணிமை என்ற குழுவினை ஒருங்கிணைத்து வருகிறார். இந்த அமைப்பு 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை பல்வேறு நுட்பக் கருவிகளை உருவாக்கியுள்ளது மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடனும் சேர்ந்து பணியாற்றியுள்ளது.

நமது சகோதர மொழியும், இளம் மொழியுமான மலையாளத்தின் கணிமை வளர்ச்சி ஒப்பீட்டளவில் தமிழைவிட வளர்ந்தே உள்ளது. தமிழ் மொழியியலில் உள்ள ஏறக்குறைய அத்தனை சவாலான கூறையும் கொண்டுள்ள மலையாளத்தில் அவற்றை எதிர்கொண்டு உருபனியல் பகுப்பாய்வுக் கருவிகள், பிழைதிருத்திகள் உருவாக்கியுள்ளனர். அரிய மலையாள மின்னூல்களைச் சர்வதேச ஆவணக் காப்பகத்தில் சேர்த்து இணையத்தில் செழுமையான மின்நூலகத்தைக் கொண்டுள்ளனர். அலுவல்ரீதியாக மலையாளச் சொற்களஞ்சியம், சொல் வகைகாட்டி, உள்ளீட்டுக் கருவி போன்றவற்றைக் கேரள ஐஐஐடிஎம் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் இரண்டாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கணித்தமிழ் பரப்புரைகள் இன்றும் நடக்கின்றதா எனத் தெரியவில்லை. ஆனால் கணினியில் மலையாளப் பயன்பாட்டைத் தொடர்பயிற்சிகள் மூலம் செய்துவருகிறார்கள். பள்ளிக் கல்விக்கென தனியான ''ஸ்கூல்விக்கி'' போன்ற செயல்பாடுகளும் குறிப்பிடத் தக்கவை. சுதந்திர மலையாளக் கணிமை   போன்று தமிழில்  தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்து செயல்பட இயலவில்லை. அனைத்தையும்விட முத்தாய்ப்பாய் குடியரசுத் தலைவரிடம் மொழிக்கணிமைக்கு விருதும் பெற்றுள்ளது அதன் வளர்ச்சிக்குச் சான்று. இத்தகைய மொழித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அரசின் மலையாளக் கணிமைத் திட்டடங்கள் என்று சொன்னாலும் இந்த வளர்ச்சிக்குக்   கேரள மாநிலத்தில் எழுத்தறிவு சதவிகிதமும் காரணம் எனலாம். மலையாளக் கணிமையில் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை நாமும் கற்றுக் கொள்வோம், கணித்தமிழோடு தமிழ் வளர்ப்போம்.



No comments:

Post a Comment

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது