Pages - Menu

Monday, April 13, 2020

விரல் & குரல்வழி உள்ளீட்டுக் கருவிகள்

கையெழுத்து உள்ளீடு(handwriting input) எனப்படும் விரல்வழியாகத் திரையில் எழுதிக் கொள்ளும் நுட்பம் தமிழில் வந்துள்ளன. அது போல குரல்வழி உள்ளீடு (voice input) எனப்படும் ஒலி உரை மாற்றும் தொழில்நுட்ப வசதியும் தமிழில் உள்ளன. அதாவது பேச்சை அப்படியே எழுத்துக்களாக மாற்றித் தரும் வசதி. ஒரு மேடையில் ஒருவர் பேசும்போது அதனை எழுத்துவடிவமாக(transcribe) ஒருவர் எழுதிக் குறிப்பெடுப்பாரே அந்த வேலையை இனி கருவிகளே செய்யவுள்ளன. நீண்ட நெடிய கட்டுரைகளைத் தட்டச்சு செய்து எழுதவேண்டியதில்லை, இந்த நுட்பத்தைக் கொண்டு கணினியோ, கைப்பேசியோ எங்கும் எப்போதும் பேசி அதை அப்படியே எழுத்து வடிவமாக்கிக் கொள்ளமுடியும். பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தாலும் புதிதாகத் தேடுவோரும் உள்ளனர். அவர்களுக்காக இவற்றை எப்படி நிறுவிக் கொள்வதென்றும், எப்படி அணுகுவதென்றும் இப்பதிவில் காணலாம். கைப்பேசி உள்ளீட்டு மற்றும்  கணினி உள்ளீட்டுக்கு  இதர கட்டுரைகளைக் காணலாம்


கைப்பேசியில் இந்த வசதியைப் பல குறுஞ்செயலிகள் வழங்குகின்றன. குறிப்பாக Gboard அல்லது sellinam போன்ற பிரபல உள்ளீட்டுச் செயலி ஒன்றை நிறுவிக் கொள்ளவேண்டும். அடுத்து settings சென்று General Management/Language and Input  அல்லது  Language and Input என்று (கருவிக்குக் கருவி மாறுபடலாம்) தெரிவு செய்யவேண்டும். on-screen keyboard அல்லது  virtual keyboard என்பதைத் தெரிவு செய்யவேண்டும். 
அங்கே நாம் தரவிறக்கிய குறுஞ்செயலியைத் தெரிவு செய்து, Languages ->  என்று கொடுக்கும் போது பல மொழிகளைக் காட்டும் அதில் தமிழைத் தேர்வு செய்யவேண்டும். அங்கே இதுவரை செயல்படுத்தியுள்ள விசைப்பலகை அமைப்பைக் காட்டும், அதில் கையெழுத்து மற்றும் குரல் உள்ளீடு இல்லாவிட்டால், Add Keyboard கொடுக்கவும். அடுத்துக் காட்டும் விசைப்பலகைகளில் விரும்பியவற்றைத் தெரிவு செய்யலாம். குறிப்பாக கையெழுத்து வழி உள்ளீடு(handwriting input) வேண்டுவோர் அதனைத் தெரிவு செய்து கொள்ளவேண்டும். Language & Input பகுதியில் மொழியில் தமிழ் தெர்வு செய்திருப்பதையும், Default Keyboard என்பதில் இந்தக் குறுஞ்செயலி தெரிவு செய்திருப்பதையும் உறுதி செய்து கொள்ளவும். பொதுவாக கையெழுத்து உள்ளீட்டைச் செயல்படுத்தியதும், சில நேரங்கள் உடனே செயல்படாமல் போகலாம், அதுவரை தரவிறக்கம் நடந்து கொண்டிருக்கும். தரவிறக்கம் நிறைவடைந்தவுடன் விசைப்பலகையில் கையெழுத்து உள்ளீடு மற்றும் குரல் உள்ளீடு செயல்படத் தொடங்கிவிடும்.
அவ்வளவே இனி வாட்சப், மெசஞ்சர், ஜிமெயில், பேசியின் தொடர்புகள் என அனைத்து இடங்களிலும் செயலிகளிலும் விரல் & குரல்வழி உள்ளீடு வேலை செய்யும். மேலும் இதன் மூலம் பேஸ்புக், டிவிட்டர் முதற்கொண்டு உள்ளீடு செய்யலாம். இனி தட்டச்சு செய்யவேண்டிய இடத்திற்கு வந்தவுடன் காட்டும் விசைப்பலகையின் வலது முனையில் கருப்பு ஒலிவாங்கி படவுரு இருக்கும்.(வாட்சப்பில் இருக்கும் பச்சை நிறப் படவுரு அல்ல) அதில் மெலிய தட்டலிட்டு, " speak now " என வந்தவுடன் பேசத் தொடங்கலாம். தெளிவாக உச்சரித்தால் தெளிவாகத் தமிழ் எழுத்துக்களில் வந்துவிடும். நம்மைச் சுற்றி இரைச்சலோ தொந்தரவுகளோ இருந்தாலும் இது தெளிவாகப் புரிந்து கொள்ளவும். நிறுத்தக் குறியீடுகளை விசைப்பலகை மூலம் இட்டுக் கொள்ளலாம். பேசும் போது விடும் பிழைகளையும், சந்திப்பிழைகளை வாணி மென்பொருளைக் கொண்டு திருத்திக் கொள்ளலாம்.

ஆண்டிராய்ட் என்றால் பிளே ஸ்டோர், ஆப்பிள் என்றால் ஆப் ஸ்டோரில் இந்தச் செயலிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.  மேலும் இதே கூகிளின் நுட்பத்தைப் பயன்படுத்தி பல செயலிகளும் சந்தையில் கிடைத்தாலும், ஜுபோர்ட், Trancribe போன்ற தயாரிப்பாளரின் மூலச் செயலிகளைப் பயன்படுத்துவது சிறப்பு. பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தக் குரல்வழி உள்ளீடு தமிழ்ப் பயன்பாட்டிற்குப் பயன்பட்டாலும் அவர்களுக்கென்றே சில செயலிகளும் உள்ளன. K4 keyboard, Samsung Good vibes &  மேலும் பல செயலிகள் உள்ளன தேவையானவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். 


கைப்பேசி அல்லாமல் கணினிவழியே உள்ளீடு செய்யவேண்டும் என்றால் http://docs.google.com சென்று புதிய கோப்பைத் திறந்து கொள்ள வேண்டும். அது முழுவதும் திறந்தவுடன் Tools > Voice typing சொடுக்கவும். உடனே ஒரு ஒலிவாங்கி படவுரு வரும். அதில் தமிழ் மொழியைத் தெரிவு செய்து, கணினியின் ஒலிவாங்கியின் மூலம் பேசலாம். முதலில் ஒலிவாங்கியை இணைக்கையில் "allow" அல்லது "block" கேட்டால் உரிய அனுமதியை வழங்க வேண்டும். அதேபோல http://dictation.io/speech என்ற தளத்திலும் நேரடியாக மொழியைத் தெரிவு செய்து ஒலி உரை மாற்ற முடியும். இறுதியாகப் பிழைகளை நீக்கிக் கொள்ள http://vaani.neechalkaran.com தளத்தில் இட்டு, பிழை நீக்கிப் பயன்படுத்தலாம். மேலும் சந்தேகங்களையும், கருத்துக்களையும் தெரிவிக்கலாம்

2 comments:

  1. அனைத்து விளக்கங்களுக்கும் இணைப்புகளுக்கும் நன்றி...

    ReplyDelete
  2. நான் இந்த கருத்தைக் கூட குரல் மூலம் சொல்ல எழுதப்பட்ட எழுத்து
    பலருக்கு இந்த தொழில்நுட்பம் பயனளிக்கும்
    அதனை சிறப்பாக நீங்கள் வெளிப்படுத்தி உள்ளீர்கள்
    பாராட்டுக்கள்

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது