Pages - Menu

Thursday, July 18, 2024

கிளாட்.ஏஐ - ஒரு திறனாய்வு

 கிளாட்.ஏஐ என்பது சாட்ஜிபிடி போல செயற்கை நுண்ணறிவில் செயல்படும் புதிய உரையாடி (chatBOT). ஆந்திரோபிக் என்ற நிறுவனம் உருவாக்கி வெளியிட்டுள்ள கிளாட் 3.5 சோனெட் என்ற மொழி மாதிரி கொண்டு இயங்கும் செயலி. குறிப்பாக மொழிபெயர்ப்பு, ஒளிப்பட பகுப்பாய்வு போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படும் செநு(AI) உரையாடியாகும்(Bot). ஜூன் மாதம் அறிமுகமானதால் மொழித் தொழில்நுட்பத்திற்குப் புதுவரவு. இதற்கு முந்தைய செநு சார்ந்த மொழிக் கருவிகளைவிட மொழிபெயர்ப்பு மற்றும் மெய்ப்புத் திருத்தம் போன்ற இடங்களில் சிறப்பாகச் செயல்படுகிறது. அதன் வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது. 

மொழிபெயர்ப்பு:

தமிழிலும் மொழிபெயர்ப்பு மற்றும் பிழைதிருத்தத்தைச் செய்கிறது. தமிழில் குறிப்பாக நன்றாகவே செயல்படுகிறது. சில பிழைகள் என்றால், பெயரெச்சத்தை அடுத்து "மற்றும்" இடுகிறது, வினையெச்சத்தை அடுத்தும் "மற்றும்" இடுகிறது. ஆனாலும் கூகிள் அளவிற்கு "மற்றும்" பயன்பாட்டை அள்ளித் தெளிக்கவில்லை. இடத்திற்கு ஏற்ற சொற்களைப் பரிந்துரைக்கிறது.  மொழிநடையில் தெளிவு இருக்கிறது. "தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ" என்று இலக்கணரீதியான சில பிழைகளை இன்னும் விடுகிறது. கூகிளைவிடச் சிறப்பாக மொழிபெயர்த்தாலும் இன்னும் சந்தைக்கான பயனர் கருவிகளாக வெளிவரவில்லை. தற்போதைக்கு ஓரளவு பயன்பாட்டிற்கு இலவசமாகக் கொடுத்துள்ளனர். அதிகம் பயன்படுத்த கட்டணம் கட்டவேண்டும்.

பிழை திருத்தம்:

பிழை திருத்தம் என்ற பணியில் நன்றாகப் பயிற்சி எடுத்துள்ளது. தமிழ் மொழியின் இலக்கணத்தைப் புரிந்து கொள்வதில்லை தான் ஆனாலும் பெரும்பாலான பரிந்துரைகள் சரியாக உள்ளன. தமிழில் எங்கெல்லாம் அதிகம் பிழை வருமோ அங்கெல்லாம் சரியாகக் கணிக்கிறது. ஆனால் இலக்கணம் தெரியாமல் கணிப்பதால், குறைவான பயன்பாட்டு இடங்களில் அதே பிழையை விடுகிறது. ஒரு இடத்தில் பொருத்திக் கொள்ளும் விதியை மறு இடத்தில் போட்டுக் கொள்வதில்லை. ஒருமை பன்மை ஓரளவு கணிக்கிறது. ஆனால் கால வேற்றுமையைப் புரிந்து கொள்வதில் தடுமாறுகிறது

வாணி பிழை திருத்திக்கான சோதனை நேர்வுகள்(test case) கைவசமிருந்ததால் கிளாடில் போட்டிப் பார்த்ததில் 80% சரியாகச் சொல்கிறது. கூடுதலாக உலக அறிவு இருப்பதால் தானாகச் சில புரிதல் கொண்டு சரியாகக் கணிக்கிறது. தங்கிலீஷில் முழுமையான தெரியாமல் எழுதினாலும் சரியானவற்றிற்கு நெருக்கமாகப் பரிந்துரைக்கிறது. பொருள்மயக்கம் வரும் இடங்களில் பெரும்பான்மை வழக்கை எடுத்துக் கொள்கிறது. சில இடங்களில் பொருளை மாற்றியும் விடுகிறது. பிழைகளைச் சுட்டிக் காட்டும் போது ஒரு நிலைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. வழக்கமான செநு கருவிகளைப் போல வழக்கில் இல்லாத/மீறிய சொல்லாக்கங்களைத் தான்தோன்றித்தனமாகச் செய்கிறது.

தமிழ் எழுதத் தெரியாதவர்களுக்கு இது வரப்பிரசாதம். தமிழில் கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு இது ஓரளவிற்குப் பயனளிக்கலாம். 

பொருளை மாற்றும் உதாரணம்

உருபனியல் பிழை



பிழையாகக் காலத்தை மாற்றுதல் 





நிலைத்தன்மை இல்லை என்பதற்கான உதாரணம்:



மொழி இலக்கணத்தையும், நிலைத்தன்மையையும் அதிகரிக்கும் போது மொழிக்கான முக்கிய வளர்ச்சியாக இது அமையும். விரைவில் இவை மேம்படலாம். எதுவானாலும் மொழிநுட்பத்தில் பிரமிக்கத்தக்க பாய்ச்சல். கிளாட்டைக் கைதட்டி வரவேற்போம்.

மேலும் அறிய:


No comments:

Post a Comment

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது