ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கோலசுரபி மென்பொருள் சார்ந்து புதிய அறிவிப்புகள் செய்யும் வழக்கமுண்டு. இக்கருவியானது முதலில் கம்பிக்கோலம் மட்டும் வரைந்தது, பின்னர் கோட்டுக் கோலம், பின்னர் ரங்கோலிகான பலகோண வடிவங்கள், விருப்பமான நிறங்கள், புதிய பயனர் இடைமுகம், முப்பரிமாணக் கோலங்கள், மிகை மெய்ம்மை (AR) என்று நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த ஆண்டு கோலத்தின் கணிதப் பண்புகளை உருவங்கள் மீது செலுத்தி, புதிய வடிவங்களில் கோலங்களை உருவாக்கும் முறை அறிமுகமாகியுள்ளது.
https://apps.neechalkaran.com/kolasurabhi
இதுவரை சதுரம், சாய்சதுரம் என இரு வடிவங்களிலேயே கம்பிக் கோலங்களை வரைந்து தந்தது, இப்போது விளக்கு, தேர், மலர், மயில், அன்னம், யானை போன்ற புதிய உருவங்களிலும் கோலம் வரையலாம். நீங்கள் விரும்பிய அகலத்தில் இக்கருவி அந்த உருவத்தை வரைந்து கொடுக்கும். அளவு அதிகரிக்க அதிகரிக்க உருவத்தின் அடையாளங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஒவ்வொரு முறை வரையும் போதும் புதுப் புது வளைவுகளில் ஒரே உருவத்தை வரைந்து காட்டும் விரும்பிய வடிவத்தை விரும்பிய நிறத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
விரும்பிய எல்லா வடிவத்திலும் கோலம் வர முடியும் என்றாலும் சில உருவங்களே தெளிவாக அமைகின்றன என்பதால் இவை மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பிய வடிவங்கள் இல்லாவிட்டால் சுட்டிக் காட்டலாம் அதையும் சேர்க்க முயல்கிறேன்.
சுழல்வடிவு (rotational), நிழல்வடிவு(reflectional) ஆகிய இரு வடிவு ஏற்கனவே இருந்தன, இப்போது புதிதாக சீரற்றவடிவும் அறிமுகமாகியுள்ளது. இதனால் இதன் படைப்புகளில் புதுமையான வடிவங்களைப் பார்க்கலாம். இதுவரை 13 வகைக் கோலங்களே இருந்தன, இனி 27 வகைக் கோலங்கள் எனலாம்.
இந்த ஆண்டும் கூடுதல் செய்தியாக முதன்முதலாக கோலசுரபி சார்பாக ஒரு கேட்பு அச்சு நூல்(print on demand) அமேசானில் கோலப் பயிற்சிக்கு அறிமுகமாகியுள்ளது. குழந்தைகள் கோலம் பழக்குவதற்கான சிறப்பான நூலாக இது அமையும். இதில் கோலத் தடத்தில் வரைந்தோ, விடுபட்ட புள்ளிகளை இணைத்தோ, வண்ணம் தீட்டியோ பழகலாம். விருப்பமுள்ள குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் பழகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கணிதமும் கற்பனையும் நிறைந்த கோலங்கள் அனைவர்கள் மனதையும் வண்ணமயமாக்கும்.
இந்த நூலுக்கான இணைப்பு.
கோலசுரபியின் இன்ஸ்டா முகவரி
0 comments:
Post a Comment