தனிப்பயனாக்கம்(Customization) என்பது ஏறக்குறைய அனைத்துத் தொழில்நுட்பத்திலும் வந்துவிட்டன. படைப்பிலக்கியங்களுக்குள்ளும் பிற மொழிகளில் வரத் தொடங்கியுள்ளன. தன்னாள்வியல் கவிதை (cybernetics poem) போன்று தமிழில் சில முயற்சிகள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வரிசையில் சோதனை முயற்சியாகத் தனிப்பயனாக்கச் சிறுவர் கதைகளுக்கான ஒரு தளம் அறிமுகமாகியுள்ளது. அதில் உள்ள கதைகளின் கதாப் பாத்திரங்களை விரும்பிய வகையில் மாற்றிக் கொள்ள முடியும். முயலுக்குப் பதில் பூனைக்குட்டியை வைத்து, கதையை வாசிக்கலாம் அல்லது வாசிக்கவிட்டுக் கேட்கலாம். பாட்டி வடை சுட்ட கதையில் பாட்டிக்குப் பதிலாகத் தாத்தாவைப் போட்டுக் கொள்ளலாம். முழுக்க முழுக்க மழலையர்களுக்காக உருவாக்கப்படும் தளம்.
https://stories.neechalkaran.com/
தொழில்நுட்பங்கள்:
இதில் சில நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக உரை-ஒலி மாற்றி(TTS) உள்ளது. விரும்பிய மாற்றங்களைச் செய்து, அக்கதையை ஒலிக்க விடலாம். சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் இயல்பான மனிதரின் குரல் போல ஒலிக்கும். உருபனியல் உருவாக்கி(Morphological Generator) கொண்டு கதாப் பாத்திரங்களின் பெயர்களை இயல்பாகக் கதையுடன் பொருத்தப்படுகிறது. ஒரு சில கதாப் பாத்திரங்களுக்குச் செயற்கை நுண்ணறிவு கொண்டு படங்களை வரைய முடிகிறது ஆனால் அச்சேவைகள் கட்டண முறையில் இருப்பதால் இப்போதைக்கு இணைக்கவில்லை. குழந்தைகளின் ஆர்வத்திற்கேற்ப முயலலாம். கதைகளைக் கொடுத்துக் கதாப்பாத்திரங்களைத் தேர்வு செய்தால் கீழே உள்ள வார்ப்புருவினை இத்தளம் தானாக உருவாக்கிக் கொள்ளும்.
நீங்களும் எழுதலாம்:
பங்களிக்க விரும்பினால் சுவாரசியமான கதைகளைச் சிறுவர்கள் படிக்கும் விதத்தில் எழுதி எனது மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். சிறுசிறு வாக்கியங்களாக இருக்க வேண்டும். தொகைச் சொற்களை இயன்றவரை தவிர்த்து வேற்றுமை உருபுகளைப் பயன்படுத்தலாம். விரும்பும் கதாப்பாத்திரப் பட்டியலையும் பரிந்துரைக்கலாம்.
விதவிதமான பாத்திரங்கள் இருப்பதால் குழுந்தைகள் ஒவ்வொரு முறையும் விரும்பிப் படிக்க வாய்ப்புள்ளது. இது புது முயற்சி என்பதால் மேலும் கூட்டல் கழித்தல்கள் நிகழலாம். நீங்களும் ஆலோசனைகளை அளிக்கலாம். ஆர்வமுள்ள குழந்தைகளுக்குக் காட்டிப் படிக்க வைக்கலாம்.
இவற்றையும் பார்க்கலாம்.
1 comments:
முயற்சி செய்து பார்க்கிறேன்...
Post a Comment