சீன மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் பல தமிழ் மாணவர்கள் சீனம் படிப்பதும் அது தொடர்பான தகவல்களைத் தேடுவதும் கணிசமாக உள்ளனர். மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மாண்டரின் அல்லது தமிழ் மொழி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் இது உதவும் வகையில் புதிய சீன தமிழ் அகராதி அறிமுகமாகியுள்ளது.
சீன மொழியின் தொழில்நுட்ப வளர்ச்சியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை பல உள்ளன. குறிப்பாக, பல வட்டார வழக்குகள் இருந்தாலும் சீன எழுத்துக்களுக்கு இணையான ஆங்கில எழுத்துக்களை தரப்படுத்திவிட்டனர். கற்றுக் கொள்ள எளிதாக சீன அகராதிகள் பெரும்பாலும் கற்றல் நிலைக்கு ஏற்பச் சொற்களைக் காட்டுகின்றன. அதாவது ஒவ்வொருவரின் மொழி அறிவிற்கேற்ப, பல நிலைகளில் கற்றுக் கொள்ள வேண்டிய சொற்கள் என்று தனிப் பட்டியல் இட்டுள்ளனர். எழுதிப்பழக, மாற்றிக் கொள்ள என்று எண்ணற்ற கருவிகளும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ஆங்கிலத்தை விட தாய்மொழியை அதிகம் முன்னிறுத்துகின்றனர். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சீன மொழி எழுத்தென்பது இந்திய மொழிகள் போல ஓசைக்கு வடிவம் கொடுப்பதில்லை. மாறாக உருவத்திற்கு வடிவம் கொடுக்கிறார்கள். அதனாலேயே அவை சித்திர எழுத்துக்கள் என்கிறோம். கடந்த காலத்தை விடத் தற்போது எவ்வளவோ எழுத்துச் சீர்த்திருத்தம் செய்து நவீன வடிவிற்கு வந்துள்ளனர். இருந்தும் சுமார் நாற்பத்தோராயிரம் எழுத்துக்கள் தற்காலத்தில் பயன்படுத்துகின்றனர் அவற்றிற்கு ஒருங்குறியில் இடமும் வாங்கியுள்ளனர். அடிப்படை ஒலிகளாக சுமார் 407 ஒலிகள் எனலாம்.
உலகின் முக்கிய மொழிகளுள் ஒன்றான சீன சொற்களுக்கான தமிழ் அகராதி என்று பொதுவில் எதுவும் குறிப்பாக இணையத்தில் இல்லை. அதை ஈடு செய்யும் விதமாக முனைவர் மெய். சித்ரா அவர்களின் தொகுப்பில் சீன தமிழ் அகராதி அண்மையில் வெளியிடப்பட்டது. இது இரு மொழி அகராதி என்றாலும் இதில் சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்றிலும் தேடலாம். நேரடியாக இணையத்தில் தமிழ்ச் சொல்லுக்குச் சீனத்தில் எப்படி சொல்லலாம் என்று தேடவோ, மொழி ஆய்வுகள் செய்யவோ, மொழிபெயர்ப்புகளை அதிகரிக்கவோ இது உதவக்கூடும். இதில் ஐயாயிரம் சீனச் சொற்கள் உள்ளன. அடுத்தடுத்த மேம்பாடுகளில் விரிவாக்கவுள்ளோம்.
ஆங்காங்கிலிருந்து முனைவர் மெய். சித்ரா அவர்களின் முயற்சியில் தமிழ் விளக்கங்களைத் தொகுக்கப்பட்டு, சிறப்பான அகராதியாக முழுமையடைந்துள்ளது. சொற்கள் திரட்டலிலிருந்து, தள வடிவமைப்பு, இயந்திர சோதனைவரை தொழில்நுட்ப உதவிகளை என்னால் செய்ய முடிந்தது. மேலும் அகராதிப் பணிக்கு பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இதில் உள்ள நிறைகுறைகளை அறியத் தரலாம். வாய்ப்புள்ளவர்கள் தமிழ் சீன அகராதியை உருவாக்கும் எங்கள் குழுவிலும் தன்னார்வலர்களாக இணையலாம்.
0 comments:
Post a Comment