பகுதி-I | பகுதி-II | பகுதி-IV
அடுத்த நிலை[Network layers]களைப் புரிந்து கொள்வதற்கு முன் இரண்டு வலைதொடர்புச் சாதனங்களைப் பற்றித் தெரிந்திருக்கவேண்டும்.
சுவிட்ச்[Switch]
இது 2ம் நிலையில் செயல்படும் ஒரு சாதனம். ஒரு ஐ.பி.முகவரியைக் கொண்டே இது இன்ன குடும்பத்தின் இத்தனையாவது ஆள் என்று கணிக்கமுடியும். ஒரே குடுமபத்தைச் சேர்ந்த ஐ.பி முகவரிகள் எல்லாம் சுவிட்சில் இணைக்கப்பட்டிருக்கும். நுட்பரீதிக சொல்வதென்றால் ஒரே Network சேர்ந்த Host முகவரிகளைக் கொண்டிருக்கும். ஒரே குடும்பத்திற்குள் தகவல் பரிமாற்றம் நடக்க சுவிட்சுதான் ஐடியா சிகாமணி. Host முகவரிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போலச் சுவிட்ச் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். குடும்பம் விட்டுக் குடும்பம் தாண்டி தகவல் பரிமாற்றம் வேண்டும் என்றால் ரவுட்டரை நாடும். ஒட்டஞ்சத்திரம் மூனாவது தெருவுக்கும் நாலாவது தெருவுக்கும் தகவல் தொடர்பென்றால் சுவிட்சே போதும். இல்லாவிட்டால் ரவுட்டர் அண்ணனும் பஞ்சாயத்துக்கு வருவார். பல சுவிட்சுகள் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக் கொண்டு ஒரே குடும்பமாக ஒரே கதவின் மூலம் ரவுட்டரைத் தொடர்பு கொள்ளும். அடுத்து ரவுட்டர்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
ரவுட்டர்கள்[Router]
இது 3ம் நிலையில் செயல்படும் ஒரு சாதனம். ஒவ்வொரு ஐ.பி. குடும்பத்தையும் இணைக்கும் ஒரு தரகு வேலை செய்யும் ஆள். ஆனால் இதன் விலை அதிகமாகயிருப்பதால் மேம்படுத்தப்பட்ட சுவிட்ச்கள் கொண்டே பல தொலை தொடர்பு மையங்களில் காரியம் செய்கிறார்கள். இப்படி உலகம் எல்லாம் உள்ள ரவுட்டர்கள் கயிறு போட்டுக் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரவுட்டரும் பல சுவிட்சுடனும், பல ரவுட்டருடனும் இணைந்திருக்கும். இந்த ரவுட்டரே வலைதொடர்புத் தொழிற்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் சாதனம். அந்த ரவுட்டர் தன்னைச் சுற்றியுள்ள அத்தனை ரவுட்டரின் மேக் முகவரியும் அதன் ஐ.பி. குடும்பத்தைப் பற்றியும் தகவலை வாங்கி வைத்திருக்கும். இதன் செயல்திறனுக்கு ஏற்ப தன்னைச்சுற்றியுள்ள ரவுட்டர்களின் எண்ணிக்கையை அறிந்திருக்கும். சென்னையில் உள்ள ரவுட்டருக்குப் புரும்ஸ்பீல்ட் ரவுட்டரின் மேக் முகவரி அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தன்னைச்சுற்றியுள்ள ரவுட்டரின் கேட்கும், அது அதற்கடுத்ததிடம் கேட்கும் இப்படியே படிப்படியாகப் போனால் சில ரவுட்டர் கடந்து அமெரிக்க ரவுட்டர் சரியான இடத்தைப் பதிலளித்துவிடும். மேலும் ஒரு ரவுட்டர் இருப்பிடத்திற்குப் பல வழிகளையும் குறித்துவைத்திருக்கும். புனேவிலிருந்து மதுரைக்கு ஒரு தகவல் செல்லவேண்டும் என்றால் மிகக்குறைந்த, டிராபிக் அதிகமில்லாத வழியை இந்த ரவுட்டர் தேர்வு செய்து சென்னை வழியாக அல்லது பெங்களூர் வழியாகக்கூடத் தகவல் அனுப்பும்.
...வலைநிலை [Network Layer]
இப்போது இணைய நெறிமுறைத் தொகுப்பிறகுச் செல்வோம், வலைநிலையில் பெறுநரின் இணையமுகவரியைக் கொண்டு DNS சர்வர்கள் மூலம் அதன் ஐ.பி.முகவரிகளைப் பெற்றுக்கொள்ளும். கூகிள் சாட் என்றால் கூகிள் சர்வர் முகவரி[google.com], இணைய தளம் என்றால் அதன் இணைய முகவரி என்று எடுத்துக் கொண்டு இந்த டி.என்.எஸ். வழங்கியிடம் சரியான ஐ.பி.முகவரியை வாங்கிக்கொள்ளும். இப்போது நமது கதைப்படி, வால்பாறையின் ஐ.பி. முகவரியும், கூகிள் சர்வர் ஐ.பி முகவரியும் இணைத்து அடுத்த நிலைக்கு அனுப்பப்படும்.
தரவு நிலை [Datalink Layer]
வலைநிலையில் இருந்து தரவு நிலைக்கு வரும் பாக்கெட்டுகள், அதனுள் இருக்கும் ஐ.பி. முகவரிக்குஏற்ப மேக் முகவரிகள் இங்கு இணைக்கப்படும். கணினிகள் தன் தொடர்பில் உள்ள சுவிட்சின் மேக் முகவரியை இணைக்கும். சுவிட்சுக்கு வந்த பாக்கெட்டுகள் பெறுநரின் ஐ.பி. முகவரி கொண்ட உபகரணம் தனது குடும்பத்தில் இருந்தால் அதன் மேக் முகவரியை இணைக்கும் அல்லது வெளிக் குடும்பம் என்றால் ரவுட்டருக்கு அனுப்பிவிடும்.(கவனிக்க: ரவுட்டரின் மேக் முகவரியை இணைத்து ). ஆக, பெறுநர், அனுப்புநர் ஐ.பி. முகவரிகள் மாறாமல், மேக் முகவரிகளை மட்டும் மாற்றிக்கொண்டே இணையக் கடலில் நமது Hi என்கிற வார்த்தை நீந்தத் தொடங்குவதை உருவகிக்கலாம். எனவே இந்த நிலையின் முடிவில் மேக் முகவரிகள் சேர்ந்து துண்டுகளாக (Frame எனப்படும்) சட்டகம் என்ற பெயரில் அடுத்த நிலைக்குச் செல்லும்
பரும நிலை [Physical Layer]
இது பெரிய கில்லாடிஎல்லாம் இல்லை. இது வெறும் செம்பு வயர்களும்[copper Cable], ஒளிவடமும்[optical Cable] கொண்டதாகும். இவை தகவல் கடத்தி மட்டுமே. ஒரு உபகரணத்திலிருந்து அடுத்தவற்றிற்குக் கடத்தும். வயர்லெஸ் தொழிற்நுட்பத்தில் காற்றும் ஒரு கடத்தியாக வேலை செய்யும். இந்த இடத்தில் ஒரு கேள்வி மைக் பிடிக்கும், அதாவது சுவிட்சோ அல்லது ரவுட்டரோ பல வயர்களுடன் இணைந்திருக்கும் அப்போது எந்த வயரு வழியாகத் தகவலைக் கடத்து? இங்குத் தான் மேற்கூறிய மேக் முகவரி கதாபாத்திரம் கதையைத் தூக்கிப்பிடிக்கிறது, ஒரு சுவிட்சு தனக்கு வந்த தகவலை, சேரவேண்டிய கணினியின் மேக்முகவரியுடன் தனது குடும்பத்திலுள்ள எல்லாக் கணினிகளுக்கும் அனுப்பும். மேக் முகவரி ஒத்துப்போகும் கணினி மட்டுமே அதனைப் படிக்கமுடியும். மற்றக் கணினிகள் பெப்பே என விழித்துக்கொண்டு சும்மா இருக்கும். "உலகத்தில் ஒரே மாதிரி மேக் முகவரி கொண்ட மென் உபகரணங்கள் இல்லவேயில்லை" என்று முன்னர்ச் சொன்ன விசயம் இங்கு நினைவுகூறத்தக்கது
இதுவரை வலையமைப்பு பற்றித் தெரிந்துவிட்டது ஆனால் அந்த hi என்கிற வார்த்தை எப்படியெல்லாம் பயணம் செய்யும் என்று அறிய அடுத்தப் பகுதி விரைவில்...
இன்டர்நெட்டின் ரகசியங்கள் - III
Info Post
4 comments:
நல்ல தகவல்கள்... தொடருங்கள்... நன்றி நண்பரே !
எனக்கும் இங்கிலீசு தெரியாது.!நல்ல தகவல்.. கலக்குங்கள் :)
மிகவும் பயனுள்ள பகுதி நன்றி. -வசந்த்
நல்ல பதிவு
நன்றி,
ஜோசப்
--- ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment