Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Thursday, February 9, 2017

Info Post
வரலாற்றில் எழுத்து தோன்றுவதற்கு முன்னரே தோன்றியது சித்திர எழுத்தாகும். ஒரு செய்தியைச் சொல்ல முதன்முதலில் அதன் படம் தான் வரையப்பட்டது பின்னர் அதிலிருந்தே எழுத்துக்கள் உருவாகின. இன்றும் சீனம் உள்ளிட்ட மொழிகள் சித்திர எழுத்தாகவே உள்ளன. கணினி உருவாகி வெகுஜனப் பயன்பாட்டிற்கு வந்தபோது அந்தச் சித்திர மோகம் விடவில்லை உரிய எழுத்துக்களுக்குப் பதில் வேறுவகை குறியீடுகள் கொண்டு பெயரை எழுதுவது, படங்கள் வரைவது போன்ற புதுக்கலை உருவானது. Typewriter Art போன்று கணினியில் அட்சரங்களைக் கொண்டு காட்சி வடிவினை உருவாக்கும் இதனை ASCII Art என்றனர். காரணம் கிராபிக்ஸ் இல்லாத அன்றைய காலத்தில் ASCII குறியாக்கம் தான் பெரும்பாலான கணினிகளில் இருந்தன. அஸ்கி என்பது 7பிட் கொண்டதால் மொத்தம் 128 குறியீடுகளைமட்டுமே கொண்டிருக்கும். இதில் புள்ளி, காற்புள்ளி, அரைப்புள்ளி, வினாக்குறி, செருகற்குறி, வியப்புக்குறி, மேற்கோள், பிறை அடைப்புக்குறி, எழுத்துக்கள் போன்ற அச்சுக்குகந்த 95 அட்சங்கள் கொண்டே வரையப்படும்.

அச்சு எந்திரங்களில் வரைகலை நுட்பம் இல்லாத 1960களில் இதன்வழியாகவே தலைப்பு எழுத்துக்களை வேற்றுமைப்படுத்திக் காட்டினார். இந்தச் சித்திரங்கள் பொதுவாக மின்னஞ்சல், செய்திமடல், கட்டளை வரிகளில்(commandline) பயன்படுத்தப்பட்டன. இதனை எளிதில் உருவாக்கவும் பல்வேறு செயலிகள் உருவாகின. 1991ல் சி மொழியில் உருவான ஃபிக்லெட்(figlet) ஆங்கில எழுத்துக்களை பலவடிவில் வடித்துக் காட்டியது. இதைப்போன்ற கருவிகளும், கணினியின் பரவலும் இக்காலக் கட்டடத்தில் சித்திர எழுத்துக்களின் பயன்பாட்டை அதிகரித்தது. 1995க்குப் பிறகு வரைவியல் பயனர் இடைமுகம்(GUI) வந்த பின் மெல்ல மெல்ல இதன் பயன்பாடு மாறத்தொடங்கியதே அன்றி குறையவில்லை. கைப்பேசிகள், தட்டச்சுப் பக்கங்கள் என்று இதன் தேவை இருந்து கொண்டே இருந்தன.

ஆரம்பக் கைப்பேசிகளில் ASCII மட்டுமே இணக்கமாக இருந்ததால் சின்ன திரையில் குறுஞ்செய்திகள் அனுப்ப இந்தக் கலை தேவைப்பட்டது. பத்தாண்டுகளுக்கு முன்னர் பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்களை எல்லாம் பழைய கைப்பேசிகளில் சித்திர எழுத்துக்களைப் பெயர் தெரியாமல் பயன்படுத்தியிருப்போம். பின்னர் திறன்பேசிகள் வந்தபின்னர் இதன் பயன்பாடு குறையுமாயென்றால் அதுவும் இல்லை. ஸ்மைலி என்று பொதுவாகச் சொல்லப்படும் இமோடிகான் :-) இந்தக் காலக் கட்டடத்தில் இளைஞர்களிடம் பரவலாகப் பயன்பாட்டில் வந்தது. உதாரணம் அழுகைக்கு :'‑( ஆனந்தக் கண்ணீருக்கு :'‑) ஏறக்குறைய அனைத்து மனித உணர்வுகளின் வெளிப்பாட்டையும் குறிக்கும் ஸ்மைலிகள் வந்தன. இமோடிக்கானுக்கென்றே அகராதிகள்கூட உருவாகின. அதன் நவீன பரிணாமமே இமோஜி. திறன்பேசிகள் முதற்கொண்டு, மின்னஞ்சல் வழங்கி வரை இந்த சித்திர வெளிப்பாடு பயன்பாட்டில் வந்துவிட்டது. ஆயிரக்கணக்கான இமோஜிக்களை ஒவ்வொரு நிறுவனமும் பயனர் இடைமுகங்களில் சேர்த்துள்ளன. வாட்ஸ்சப், மெசஞ்சர் போன்ற உரையாடல் செயலிகளில் இமோஜிதான் நாயகன். டிவிட்டர், ஜிமெயில் போன்ற நிறுவனங்களும் தங்கள் பொருட்களில் இமோஜி வசதியைச் சேர்க்கத் தொடங்கியது. எல்லாவற்றையும் விட மரபுவழி குறியீடுகளை மட்டும் கொண்டிருந்த ஒருங்குறி தரப்பாடு இமோஜிகளையும் சேர்த்துக் கொண்டுள்ளது (http://unicode.org/emoji/charts/full-emoji-list.html).

இவை என்னதான் பரிணாம அடைந்து வந்தாலும் அனைத்து வகை வடிவங்களும் இன்றும் புழக்கத்தில் உள்ளன. #140Art என்ற பெயரில் டிவிட்டரிலும், ASCIIArt என்றும் இணையத்தில் பல சித்திரங்களைக் காணலாம்.
கேலிச்சித்திரம், ஓவியங்களுக்கான அஸ்கி வடிவங்களுக்கு
http://figment.com/topics/270260-ASCII-art, http://www.asciiworld.com/, http://www.chris.com/ascii/

நாம் கொடுக்கும் படங்களை அஸ்கி படங்களாக மாற்றித் தருபவை
http://picascii.com/, http://www.text-image.com/, http://www.glassgiant.com/ascii/

ஆங்கில எழுத்துக்களை சித்திரமாக எழுதிக் காட்ட பல தளங்கள் உள்ளன. அவை http://www.figlet.org/fontdb.cgi http://www.network-science.de/ascii/ அதுபோல தமிழ் எழுத்துக்களை எழுதிக் காட்டும் ஒரு செயலையும் உள்ளது. இதில் வரும் வடிவத்தை அப்படியே நகலெடுத்து எந்த சமூகத் தளத்திலோ, குறுஞ்செய்தியிலோ அனுப்பலாம். இணையத்திலோ மின்னஞ்சலிலோ பயன்படுத்தினால் கூடுதலாக பல வண்ணங்களோ, வடிவங்களையோ இங்கு மாற்றிக் கொள்ளலாம். http://dev.neechalkaran.com/menkolamசித்திர எழுத்துக்கள் மனித நாகரியத்துடன் மட்டும் நெருக்கமானவை அல்ல நவநாகரிகத்துடனும் நெருக்கமானவையாகிவிட்டன.

பிப் 1-15 தமிழ் கம்ப்யூட்டர் இதழுக்காக எழுதியது

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி...

Yarlpavanan said...

அருமையான எண்ணங்கள்
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்