பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின் பொதுவாகவே இணையவழிக் கற்றல் அதிகரித்துள்ளது. குறிப்பாக பைஜூஸ் போன்ற நிறுவனங்கள் போலியான விளம்பரங்கள் கொடுத்தாலும் நவீன கற்றல் முறையை அறிமுகம் செய்துவருவதை மறுக்க இயலாது. நாம் விரும்பாவிட்டாலும் கணினிவழிக் கல்வி இச்சமூகத்தின் அங்கமாகிவிட்டது. ஆங்கிலம் உட்படப் பல பாடங்களுக்கு உலக அளவில் கற்றலுக்கான தேவையிருப்பதால் அவை சார்ந்த கருவிகளும் செயலிகளும் அதிகமாக உள்ளன. உதாரணமாக ஏ, பி, சி, டி வரைபடங்கள் சந்தைக்கு வரும் அளவிற்குத் தமிழ் அரிச்சுவடிகள் விற்பனைக்கு வருவதில்லை. வந்தாலும் ஆங்கிலத்திற்கு இருப்பது போலப் புதுமையான முறைகளில் விளையாட்டுப் பொருளாகக் கிடைப்பதில்லை. இதை மாற்றி, தமிழுக்கு ஒருபுறம் ஊக்குவிக்கும் வேளையில் புதிய கற்றல் செயலி ஒன்று இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது.
பொதுவாகவே மழலையர்களுக்காகத் தமிழ்க் கற்பிக்கும் செயலிகள் சில உள்ளன. தொடக்கத்தில் அவை காணொளிகளாக வந்தன, பின்னர் படங்களாகவும் ஒலிக்கீற்றாகவும் வந்தன, பின்னர் அசைவூட்டப் படங்களாகவும் வந்தன. இப்போதைய நவீனத் தொழில்நுட்பத்தில் இதற்கும் மேலே ஊடாடக்கூடிய செயலிகள் பல வர வேண்டும். இத்தேடலில் ஒரு முயற்சியாகப் புதிய இணையச் செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது. இதில் மழலையர்களுக்கு 247 எழுத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொடுக்கும். நான்கு நிலைகளில் தனி எழுத்து, உயிர் மெய் கூட்டு, உயிர்மெய் எழுத்து, வரிசை எழுத்து என ஒரு குழந்தையே தொட்டுப் பார்த்து, கேட்டுணர்ந்து, கண்டுணர்ந்து புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கவனச் சிதறலில்லாமல் படிக்க பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுத்திரையை விரித்துவிட்டு ஒரு குழந்தையிடம் கொடுத்தால் தானே இயக்கிப் பார்க்கும் வகையில் எளிதாக இருக்கும். கைப்பேசி, தத்தல் போன்ற கையடக்கக் கருவிகளும் கணினியிலும் இயங்கும். அந்தந்த உலாவியில் முகவரியை சேமித்துக் கொண்டால் எளிதில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
http://apps.neechalkaran.com/alphabets
தொடக்கத்தில் விக்கிமீடியா பொதுவகத்தில் உள்ள 30 எழுத்துக்களுக்கு மட்டும் ஒலி வடிவம் தரப்பட்டது. பின்னர் அதன் திறனை அதிகரிக்க 247 எழுத்தையும் ஒரே குரலில் பதிவு செய்து நவீன நுட்பத்தில் இயக்கவும் ஒலிக்கவும் வசதி செய்யப் பட்டுள்ளது. இனிமையான குரலில் அனைத்து எழுத்திற்கும் குரல் கொடுத்துள்ளார் ஆங்காங்கைச் சேர்ந்த முனைவர் சித்ரா. இதிலுள்ள எழுதுமுறை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டது. அதாவது மேலிருந்து கீழாக நேர் கோடிட்டுப் பின்னரே கிடை மட்டக்கோட்டை இட்டு ஈ முதல் ர வரை எழுதும் முறை(எழுத்து முறையல்ல). மேலும் யோசனைகளையும், கருத்துக்களையும் அனுப்பலாம்.
இவை முழுக்கக் கற்றுக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கற்றவற்றை மதிப்பீடு செய்யும் முறைகளும், அரிச்சுவடி சார்ந்த விளையாட்டுக்களும் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப உருவாக்கப்படும். பயனுள்ளதென்றால் தேவைப்படும் குழந்தைகளிடம் பகிருங்கள். மேலும் சொற்கள் கற்பித்தல், பாடல்கள் போன்று இம்மாதிரி நவீன முறையில் கற்பிக்கும் ஆர்வமுள்ளவர்களும் இணைந்து இச்செயலியை மேம்படுத்தலாம்.
http://apps.neechalkaran.com/alphabets
இதுபோன்ற வேறு கற்றல் செயலிகள் இவற்றையும் பயன்படுத்தலாம்.
https://www.pollachinasan.co.in/tt/index.htm
1 comments:
வாழ்த்துகள்... குரலும் அருமையாக உள்ளது...
Post a Comment