Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Tuesday, August 27, 2013

Info Post
முதல் பகுதி
"இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது" என்ற வள்ளுவன் வாக்குப்படி, மனிதனின் தகவல் தொழிற்நுட்பத்திற்குக் கிடைத்த தூதனே மின்காந்த அலையாகும். ஒவ்வொரு அலையையும் அதன் தன்மைக்கு ஏற்ப தகவல் தொழிற்நுட்பத்தில் பயன்படுத்துகிறோம்

பெரிய ஆண்டனாவைப் பயன்படுத்தி வானொலி அலையை[Radio waves] அதிகமாகப் பயன்படுத்துகிறோம். இதற்கு அடுத்து வரிசையில் வரும் நுண்ணலையை[Microwave] ஒரே நேர் கோட்டில் உள்ள ஆண்டனா, உங்கள் வீட்டு டீவி ரிமோட் போன்ற இடங்களில் பயன்படுத்துகிறோம். அடுத்து உள்ள அகச் சிவப்பு கதிரை ஃபைபர் ஒளி வடங்களில்[Optical cables] செலுத்தி தகவல் தொடர்பில் பயன்படுத்துகிறோம். அடுத்துள்ள கண்ணுறு ஒளிகளும் தகவல் தொடர்புகளில் தலைகாட்டுகிறது, போக்குவரத்து விளக்குகள் இதற்கு ஓர் உதாரணம். முன்பு சொன்னது போல நமது கண்கள் ஒரு உயிருள்ள அலை உள்வாங்கி[wave receiver]. இதே போன்று ரேடியோ அலைகளை நமது கண்கள் உணர்வதில்லை, அவற்றை உணரும் செயற்கைக் கண்கள் தான் தொலைபேசிக் கோபுரங்கள்[cellphone Towers]. இப்படி ஒவ்வொரு அலையை உணர வித விதமான கருவிகள் உள்ளன. அடுத்துள்ள மனித உடலுக்குள் புகுந்து திசுக்களைச் சிதைக்கும் புறஊதா அலையை மனித தகவல் தொடர்புக்கு அரிதாகவே பயன்படுத்துகிறோம். எக்ஸ் கதிர்களும், அணு பிளப்பில் உண்டாகும் காமா கதிர்களும் மேலும் சிதைக்கும் அதனால் இவற்றையும் தவிர்க்கிறோம். காமா கதிர் என்பது அணு உலையால் வெளியேற்றப்படுவது. மேலும் இந்த அண்டத்தில் சாதாரணமாகப் பூமியை நோக்கி வந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் நம்மைத் தாக்கும் முன் வளி மண்டலத்தில் சிதறிவிடுகிறது. எக்ஸ்-ரே எடுக்கையில் எக்ஸ் கதிரும் நம்மை தாக்கும். ஆனால் இவைகளின் அடர்த்தியும் நேரமும் தான் பாதிப்பைத் தீர்மானிக்கும் என்பதால் பெரிய சேதங்கள் ஏற்படுவதில்லை.இந்த மின்காந்த அலை/கதிர்கள் 7ம் நாம் உற்பத்தி செய்து தகவலை அனுப்பலாம். ஆனால் அதனை உள்வாங்க கூடிய தொழிற்நுட்பம் எளிமையாகயில்லை. இங்கு பிரச்சனை என்னவென்றால் அதிர்வுகள் அதிகமான அலைகளைக் கணிக்க/படிக்க அவற்றின் திசையில் தான் இந்தக் கருவிகள் இருக்க வேண்டும்(அதனால்தான் நுண்ணலையில் செயல்படும் ரிமோட்கள், தொலைக்காட்சியை நோக்கி இருந்தால் தான் இயக்கமுடிகிறது) மேலும் அணுக்கரு அளவில் செயல்படும் அதி நவீன கருவிகள் வேண்டும். இங்கு ஒன்றைக் கவனிக்கலாம் குறைவாக அதிரும்[அதிக அலை நீள] அலைகளைப் படிக்க பெரிய ஆண்டனாவால் தான் முடியும். அதிகம் அதிரும்[குறைந்த அலை நீள] அலைகளைப் படிக்க மிகச் சிறிய அணுக்கரு அளவில் ஆண்டனா வேண்டும்.

நதிமூலம்
இதனூடாக ஒரு சம்பவபத்தைப் பதிவு செய்யவேண்டும்.
ஹைன்ரிக் ஹெர்ட்ஸ் என்பவர் சும்மா இருக்காமல் ஒளிமின் விளைவை 1887ல் நிறுபித்துவிட்டார். விளைவு பயங்கரமாகிவிட்டது, உலகமெல்லாம் பரவி, தமிழ்நாடு பாடநூல் கழகப் பன்னிரெண்டாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இத்தியரி பாய் விரித்தது. இதனை முன்கூட்டியே அறிந்த அக்கால விஞ்ஞானிகள் உடனே நோபல் பரிசை அவருக்குக் கொடுத்து இனிமேல் எதையும் கண்டுபிடித்து இயற்பியல் பாடத்தைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்றனர். அதை விடுங்கள் விசயத்திற்கு வருவோம், அவரும் அவர் வழித்தோன்றல்களும் சொல்லவருவது என்னவென்றால், ஒரு சக்திப் பொட்டலம்{ஒளிக் கதிர்} ஒரு எலக்ட்ரானைத் தாக்கினால் அந்த சக்தியைப் பெற்று அவ்வெலக்ட்ரான் ஒரு சக்தி நிலையிலிருந்து அடுத்த சக்தி நிலைக்கு உயர்கிறது. அதைப்போல ஒரு எலக்ட்ரானை ஒரு சக்தி நிலையிலிருந்து கீழிறக்கினால் மீண்டும் சக்திப் பொட்டலத்தை அது வெளியிடும். இங்கு சக்திப் பொட்டலம் என்பது மசாலாப் பொட்டலம் அல்ல ஒளியைத் தான் அவ்வாறு இயற்பியல் மொழியில் கூறப்பட்டுள்ளது. ஆக ஒன்று தன்னிலையிலிருந்து சீண்டப்பட்டு நிலை இறங்கும் போது கதிரை உமிழும் என்று எடுத்துக் கொள்ளலாம். இப்பிரபஞ்சத்தில் இயக்கசக்தி இருக்கும் வரை மின்காந்த அலைகள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும்.

இப்போது இதனை இன்னும் விசாரிப்போம் வாருங்கள்,
  • அணுக்கரு ஒருவித சிதைவால் நிலைமாறும் போது சிதறும் சக்திப் பொட்டலமே காமா கதிர். 
  • உட்புற எலக்ட்ரான்கள் சக்தி நிலைமாறி வெளிவரும் சக்திப் பொட்டலமே எக்ஸ்-கதிர். 
  • வெளிப்புற எலக்ட்ரான்கள் சக்திநிலை மாறி வெளிவரும் சக்திப் பொட்டலமே புறஊதாக் கதிர். 
  • மூலக்கூறில் எலக்ட்ரான்கள் தாவி விளையாடி வெளிவரும் சக்திப் பொட்டலமே கண்ணுறு ஒளிக் கதிர். 
  • அதிரும் மூலக்கூறில்[Molecular vibration] எலக்ட்ரான்கள் தாவிச்சிதறும் சக்திப் பொட்டலமே அகச்சிவப்புக் கதிர். 
  • சுழலும் மூலக்கூறில் சிதறும் சக்திப் பொட்டலமே நுண்ணலை. 
  • இறுதியாக அதிரும் பொருளில் சிதறும் சக்திப் பொட்டலமே வானொலி அலை.

 இதுவே எளிய மொழி. சக்திப் பொட்டலம் என்பது அறிவியல் மொழியில் Photon, வழக்கு மொழியில் கதிர்/ஒளி/அலை என்று உருவத்திற்கு ஏற்றார்போல விளிக்கப்படுகிறது.

முன்பு கூறியது போல அதனை அலை நீளத்திற்கு ஏற்றார்போல தகுந்த கருவிகளைக் கொண்டு விதமாக உருவாக்கப்படுகிறது. கவனித்தால் சிறிய அலைவடிவ காமா கதிர் உருவாக அணுக்கரு சீண்டப்படவேண்டும், அதே வேளையில் பெரிய அலைவடிவ வானொலி அலை உருவாக ஒரு ஆண்டனா சீண்டப்பாட வேண்டும். இங்கேயே மற்றொரு விசயத்தையும் காதில் போட்டுவிடுகிறேன், அதேப்போல வானொலி அலையை உணர்ந்துகொள்ள ஆண்டனா(குறைந்தது 0.1mm) அளவு கருவி வேண்டும், காமா கதிரை உணர்ந்துகொள்ள ஒரு மீட்டரில் ட்ரிலியனில் ஒரு பங்கு கொண்ட கருவி வேண்டும். வானொலி அலை நீளம் அதிகம் என்பதால் அனுப்புநரும், பெறுநரும் நேராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் காமா கதிரை உணர மிகமிகத் துல்லியமான நேர் கோட்டில் இருக்கவேண்டும். ஆகவே நீங்களே இவ்விரு கதிர்களுக்கு இடையில் உள்ள மற்றவைகளை யூகித்துக் கொள்ளலாம். இறுதியாக அதிர்வுகள் குறைவாக இருப்பதால் மனித உடலைப் பாதிக்காது, எந்தத் திசையிலிருந்தாலும் தொலைத்தொடர்பு கொள்ளலாம்; எளிதான அனுப்பும் கருவியும், உணரும் கருவியும் செய்து கொள்ளலாம், போன்ற காரணத்தால் வானொலி அலையே தகவல்தொடர்பிற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மொத்தம் ஏழு அலைகள் தான் உலகில் உள்ளதா என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழுந்தால் அதற்கு ஔவையார் ஆச்சி சொன்ன "கற்றது கையாளவு கல்லாதது உலகளவு" என்ற பதில்தான் விடை. தற்போதையை அறிவியல் வசதியால் நாம் கண்டுபிடித்த அலைகள் இவை மட்டுமே, வருங்காலத்தில் இவற்றை விட சிறிய அல்லது பெரிய அலைகள் கண்டுபிடிக்கப்படலாம்.


பின்னுரை
நமது ஒசூன் மண்டலம், கண்ணுறு ஒளி, நுண்ணலை மற்றும் வானொலியைத் தவிர மற்ற எல்லா அலையையும் அதிகபட்சம் தடுத்துவிடும். அதனால் பூமியைத் தாண்டி ஒரு அலை போய்த் திரும்ப வேண்டுமென்றால் அது வானொலி அலையால் மட்டுமே சிறப்பாக முடியும். எனவே வானொலி அலையையும் அதனை ஒத்த நுண்ணலையையும் பயன்படுத்தி செவ்வாய்க்கு போன க்யுரியாசிட்டி மாம்ஸ் உடன் பேசிக் கொள்கிறோம். ஆலின் ஆல் அழகு ராஜாவான சூரியனோ எல்லா மின்காந்த அலைகளையும் உருவாக்கி வீசிக் கொண்டுயிருக்கிறது. நமது பூமித்தாய் வானொலி அலையும், கண்ணுறு ஒளியும் மட்டுமே நம்மை அடையும் விதத்தில் ஓசூனைப் படைத்துக் காக்கிறாள். மற்றொரு சுவாரசிய ஒப்பீடு, அலைநீளம் குன்றிய காமா கதிர் எல்லாப் பொருள்களுக்குள்ளும் ஊடுருவும், ஆனால் கண்ணுறு ஒளி இருந்து அதற்கு மேலுள்ள அலைநீளம் கொண்டவைகள் எல்லாம் ஊடுருவும் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறது. எளிய உதாரணம், சாதாரண ஒளியை சிறிய காகிதத்தைக் கொண்டு தடுக்கமுடியும். அப்படியென்றால் வானொலி அலையையும் சுவர் கட்டி தடுக்கமுடியுமா? முடியாது! இவற்றிற்கு ஒளிச்சிதறல் என்ற பண்பைக் கொடுத்து இயற்கை வைத்தது ஒரு செக். ஆக நீளமும், சிதறலும் அதிகம் கொண்ட வானொலி அலையை தடுப்பது என்பது கடினமே. ஆனால் ஆண்டனா டவரே இல்லாத அண்டார்டிக்காவில் சிக்னல் கிடைக்கும் என்று கூறி சிம்கார்ட் விளம்பரம் செய்வது மனிதன் வைத்த செக்.

மூலம்:மானிட்டர் உலகம் என்கிற நமது மின்னூலிலிருந்து

1 comments:

Krishna moorthy said...

இதுவரை உங்கள் பதிவே நான் அறிந்திராத பல விசயங்களின் பதிவுதான் ஆனால் இன்னும் ஒரே விசயம் நான் எதிர்பார்க்கிறேன் அது” சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ” எனப்படும் தொழில்னுட்பம் மூலம் அறியப்படும் தியானத்தின் மூலம் மூளை வெளிபடுத்தும் அலை பண்புகளையும் அதன் பண்புகளையும் அறிய ஆசைப்படுகிறேன் .