Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Monday, December 16, 2013தமிழ் மென்பொருட்களுக்கான ஆதரவும், விற்பனைக்குரிய சந்தையும் இருந்தால் தமிழுக்கு விரைவில் மொழியியல் சார்ந்த மென்பொருட்களான இலக்கணத் திருத்தி, எழுத்து பேச்சு மாற்றி, பேச்சு எழுத்து மாற்றி, எந்திர மொழிபெயர்ப்பு போன்ற பல்வேறு மென்பொருள்கள் உருவாகும் என்பதாலும், தமிழில் அறிமுகமாகியுள்ள முதல் முயற்சி என்பதாலும் வணிக மென்பொருளே ஆனாலும் அதன் திறனாய்வு இங்கு செய்யப்படுகிறது.

மென்தமிழ் (MenTamizh) எனும் தமிழ்ச் சொல்லாளர்(Tamil Wordprocessor) மென்பொருளை NDS Lingsoft Solutions Pvt. Ltd. எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது மைக்ரோசாப்ட் வேர்ட் போல தமிழில் இடைமுகம் கொண்ட சொல்லாளராகும். வழமையான சொல்லாளரில் இருக்கும் அடிப்படைக் கோப்பு வடிவமைப்புப் பணிகளுக்கான வசதிகள் தமிழில் உள்ளன. அரசுத் துறை, கல்வி நிறுவனங்கள், அச்சு நிறுவனங்களில் போன்ற இடங்களில் நிச்சயம் பயனளிக்கக் கூடியதே. தமிழில் ஒரு சொல்லாளர் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதே. தமிழில் தட்டச்சிடக் கூடிய மேசைக்கணினிகளில் நிறுவிக் கொள்ளும் எம்.எஸ். வேர்டாகட்டும், இணையவழி கூகிள் டாக் ஆகட்டும் அவற்றில் இருந்து இம்மென்பொருள் புதிதாகத் தரும் தமிழ் மொழிசார்ந்த வசதிகள் பல.

எழுத்துருக்கள்
பல விதத் தட்டச்சுக்கள் செய்து கொள்ள வசதியுள்ளது. ஒருங்குறி[unicode] மற்றும் பிற குறிகளை வேண்டிய சில குறிமுறைகளில் மாற்றிக் கொள்ள உதவுகிறது. வெவ்வேறான குறிமுறைகளில் எழுதப்படும் கோப்புகளைத் திருத்திக் கொள்ள அமைக்கப்பட்டது சிறப்பு. ஆனால் எழுத்துக்குறிகளில் பெயர் தெரியாத போது மாற்றிக் கொள்வதில் சிக்கலுள்ளது. எழுத்துக்கள் மாறிப் போகாமல் இன்னும் சீர்படுத்த வேண்டும்.

தமிழ்ச் சொல்:
பல அயல்மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருகிறது. ஒவ்வொரு சொல்லுக்கும் இணையான தமிழ்ச் சொல்லைச் சேகரித்து உழைத்ததன் பயன் தெரிகிறது. "பஸ்ஸும்" என்று இட்டாலும் "பேருந்தும்" என்று மாற்றித் தருகிறது. ஒபாமா, கண்ணன், ராமன் போன்ற சில உயர்திணைப் பெயர்களையும் உணர்ந்து பிழை காட்டாமல் சரியாக நகர்கிறது.

அகராதிகள்
ஆங்கில அகராதிகள் போல பக்கவாட்டில் பல அகராதிகள் இருப்பதால் தெரியாத சொற்களுக்குப் பொருளை அறிந்து கொள்ளலாம். இருமொழி, அயல்மொழி,ஆட்சிச்சொல், மயங்கொலி என நால்வகைப் பட்டியல்கள் உள்ளன. மேலும் இணைச்சொல் மற்றும் எதிர்ச்சொல் பட்டியல்களும் உண்டு

எழுத்துப்பிழைகள்:
கணினி வழி எழுத்துப் பிழைகள் கண்டறிதல் என்பது தமிழில் சவாலான காரியமே. தமிழில் கூட்டு வார்த்தைகள் சாத்தியம் ஆகையால் அதன் அனுசரனையோடே அணுக வேண்டும். அவ்வகையில் பெரும்பாலான எழுத்துப் பிழைகளை நீக்குகின்றன. அதனுடன் ஆங்கிலப் பிழை திருத்தமும் பரிந்துரையும் உண்டு. தமிழின் மயங்கொலி வேறுபாடுகளில் பரிந்துரைகளும் வழங்குகிறது. "அன்பன கணவர்" என்னும் போது பரிந்துரையில் "அன்பான" என்று வர குறில் நெடில் சோதனை மேலும் தேவைப்படுகிறது. "போராட்டத்திற்க்கு" போன்ற வாக்கியப் பிழைகளை கண்டுணர வேண்டும். "இது", "இனி" போன்ற சில அடிப்படைச் சொற்களுக்கும், தாத்தா, தோழி, போன்ற உயர்திணை பெயர்களுக்கும் பிழையான சந்திகளை நீக்குவதில்லை.

ஒற்றுப் பிழைகள்:
தமிழ்க் கணினிப் பகுப்பாய்வில் மேலும் சவாலான விசயம் சந்திப் பிழை. அதையும் ஓரளவு திருத்துகிறது. அதிகம் பயன்படும் சொற்களைக் கொண்டு சொல்லாய்வு செய்யாமல் திருத்துவதால் பிழையான பரிந்துரைகள் பயனரின் பார்வைக்கு வராமல் திருத்தவும் படுகிறது. வேற்றுமை உருபுகள் வரும் இடங்களை மட்டும் சரியாகத் திருத்தம் செய்கிறது. உயர்திணைப் பெயர்களுக்கு முன் சந்தி வராது, ஆனால் "அந்த கண்ணன்" என்னும் போது "க்" சேர்க்கப் படுகிறது. மேலும் "எழுத்து பிழை", "தமிழ் பெண்கள்", "போற்றி பாடினார்" போன்று ஒற்று வரவேண்டிய பல இடங்கள் சவாலாக இருப்பதாலோ கணிக்கவும் இல்லை, சுட்டிக் காட்டவும் இல்லை.

அகரவரிசைப்படுத்தி, சொல்லடைவி, எண்<->எழுத்து மாற்றி, துணைநூற்பட்டியல் போன்றவற்றில் தமிழுக்குத் தேவையான மாற்றங்கள் சரியாகச் செய்யப்பட்டுள்ளன. வடிவமைப்பு ரீதியான ஒரு சிறு தடங்கள் யாதெனில், தமிழ் ஒருங்குறிகளின் மீது திரைக்குறியால்[Cursor] முன்பின் நகர்த்தும் போது, தமிழ் எழுத்துக்களில் சரியாகக் கடப்பதில்லை. க் என்பதில் க ் என்றே பிரித்து நகர்கிறது. வெட்டி ஒட்டும் போது எழுத்துக்கள் குதறுகிறது. அடுத்தடுத்து வெளிவரும் பதிப்புகளில் மேலும் மேன்படுத்தப்பட்டு, மக்கள் பயனடையே வேண்டும். இதன் விலையையும் இதர கணினித் தேவைகளையும் கீழுள்ள மென்பொருள் சுட்டியில் கண்டு கொள்க.
http://lingsoftsolutions.com/Product.aspx?ProductID=1

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இணைப்பிற்கு மிகவும் நன்றி...

Anonymous said...

மிகவும் பயன்மிக்க நாங்கள் வெகுநாளாக எதிர்பார்த்த மென்பொருள் தான், நிச்சயம் நான் பயன்படுத்திப் பார்க்கப் போகின்றேன். நிறைகுறைகள் யாவும் பயன்படுத்த பயன்படுத்த தான் உணர முடியும். மேலும் மேம்படுத்தவும் பரவலாக பலராலும் பயன்படுத்தவும் தொடங்கப்பட்டால் மிக நல்லது. நன்றிகள் !

--- விவரணம். ---

கவியாழி said...

தங்களின் தமிழுக்கானச் சேவை போற்றுதற்குரியது.தமிழுலகமே தங்களின் குழுமத்தைப் பாராட்டும்.நன்றி

கவியாழி said...

தங்களின் தமிழுக்கானச் சேவை போற்றுதற்குரியது.தமிழுலகமே தங்களின் குழுமத்தைப் பாராட்டும்.நன்றி

Unknown said...

உங்கள் பணியைப் போற்றுகிறேன் !
த ம +1

Unknown said...

ஓட்டு போட முடியலையே ?சரிசெய்யவும் !

Neechalkaran said...

கவியாழி கண்ணதாசன், நான் எதுவும் செய்யவில்லை. இது வேறு தயாரிப்புக் குழுமம்.

Bagawanjee KA, த.ம. எனது தளக் களப்பெயரைப்[domain name]பதிவு செய்து கொள்ளவில்லை.:(

பெருங்காயம் said...

தமிழ் மென்பொருட்களுக்கான ஆதரவும், விற்பனைக்குரிய சந்தையும் இருந்தால் - முதலில் சந்தைப்படுத்த வேண்டும். அதுதான் பிரச்சனை. ஆன்லைன் விற்பனை அல்லது சென்னையில் மட்டும் விற்பனை என்றல் எப்படி சந்தை இருக்கும்? விலையும் நயமாக இருக்க வேண்டும். சில clipart விற்பனையாளர்கள் அச்சகம், DTP வேலை செய்பவர்களுக்கு நேரிடையாக வந்து விற்பனை செய்கிறார்கள். நேரிடையாக அல்லது அணைத்து இடங்களிலும் விற்பனை வழி செய்ய வேண்டும்.

இ.பு.ஞானப்பிரகாசன் said...

நான் மின்னிதழ் ஒன்றில் பிழை திருத்துநராகப் பணிபுரிகிறேன். வேறு இதழ் ஒன்றிலும் என்னை அழைத்தார்கள். அப்பொழுது, நேரம் போதாமையால் இதை வாங்கிக் கொள்ளலாமா என நினைத்தேன். ஆனால், காசு கொடுத்து வாங்கிச் சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன செய்வது என்று தயக்கம். அதனால் வாங்கவில்லை. இப்பொழுது நீங்கள் கூறியதிலிருந்துதான் தெரிந்தது இதன் தரம். போகட்டும்; ஆனால், நல்ல முயற்சிதான். பாராட்டலாம். தங்களுடைய பிழை திருத்தியை நான் முயன்று பார்த்திருக்கிறேன். இதை விட உங்களுடையது தேவலாம் என நினைக்கிறேன். இத்தனைக்கும் நீங்கள் இலவயமாக வெளியிட்டே விட்டீர்கள்!!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_10.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கடலூர் பிரவின் said...

இல.சுந்தரம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
இன்று நான் இங்கு சுயமாக கணினியை பயன்படுத்துவதற்க்கும் கணினியைப்பற்றி மேலும் பல தகவல்கள் தெரிந்துக்கொண்டதற்கும் அவர்தான் காரணம்.. வாழ்க அவரின் புகழ்!