Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Friday, February 7, 2014

Info Post
கடந்தாண்டு ஜூலை 23ம் தேதி உதயம் ஆகிய RT_tamil என்ற டிவிட்டர் தானியங்கி தொடர்ந்து எதிர்பார்த்த வண்ணம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் ரசனையான கீச்சர்களையும், நல்ல வாசகர்களையும் இணைப்பதேவாகும். ஆரம்பத்தில் சொந்தப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டாலும் தற்போது அதனைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கைப் படி இதன் பயன்பாட்டை உணர்ந்து தரம் கூட்டப் படுகிறது. மேலும் சில இணைய ஊடகங்களும் இதனை விரும்ப ஆரம்பிக்கிறார்கள். எனவே வாசகர்கள் அதிகரிக்க அதிகரிக்க, பொறுப்புகளும் அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் 100 டிவிட்டர் கணக்குகளை மட்டும் பின்தொடர்ந்து கீச்சுகளை எடுத்த நிலையிலிருந்து இன்று 6000 தமிழ்க் கீச்சுக் கணக்குகளைப் பின்தொடர்கிறது. அதனால் நாளொன்றிற்குத் தமிழில் கீச்சப்படும் சுமார் 1,07,100 கீச்சுகளை அந்தந்த நிமிடங்களில் அலசி அதிகம் பகிரப்பட்ட அல்லது அதிகம் விரும்பிய காரணிகள் மூலம் முடிந்தளவிற்குச் சிறந்த கீச்சுகளை எடுத்துத் தருகிறது. ஒருவகையில் நுண்பதிவு திரட்டி என்கிற ரீதியில் செயல்படுகிறது. அதேபோல அதன் தரத்தையும் அவ்வப்போது தொழிற்நுட்ப ரீதியில் சோதனைகள் செய்யப்பட்டே வருகிறது.

RT_tamilன் மறுகீச்சுகள் எல்லாம் தானியங்கியால் செய்யப்படுவதால் நடுநிலை என்கிற கவசம் உண்டு. அதே நேரத்தில் மனித தலையீடுகள் இல்லாததால் எல்லாக் கீச்சுகளும் சிறந்த கீச்சுகள் என்று சொல்லிக் கொள்ள முடியாதுதான் ஆனால் பிரபலமான கீச்சு என்று சொல்லிக் கொள்ள முடியும். டிவிட்டர் சூழலே இல்லாதவர்கள் அவ்வப்போது இங்கு வந்து படிப்பதையும் ரசிப்பதையும் முடிந்தால் டிவிட்டர் கணக்கைத் திறப்பதையும் அதன் புள்ளிவிபரங்களால் அறியமுடிகிறது. மேலும் டிவிட்டர் இடைமுகம் என்பது சிறந்த வாசகர் ஊடகமில்லை, அங்கே குறுகிய நேர எல்லைக்குள் மட்டுமே படிக்கமுடியும். கடந்த ஆண்டு ஒரு முக்கிய நிகழ்வின் போது டிவிட்டர் என்கிற நுன்பதிவு எப்படி கருத்தைப் பிரதிபலித்தது என்று இன்று தேடமுடியாது.

அதற்கான ஒரு தீர்வாகவும், ஆவணப்படுத்தலின் அங்கமாகவும், வலைப்பதிவு வாசகர்களுக்கு தங்கமாகவும் கீச்சுப்புள்ளி என்கிற இணையத்தளம் உதயமாகிறது. தினமும் கீச்சப்படும் கீச்சுகளில் முன்னணி கீச்சுகள் இங்கே வலைபதிவு செய்யப்படுகிறது. இது கடந்த 24மணிநேரத்தில் அதிகம் பகிரப்பட்ட கீச்சை மட்டுமே எடுத்துக் கொள்கிறது, RT_tamil கணக்கின் நேரடி இணையத்தள வாரிசு என்றாலும் தவறில்லை. அதன் அளவுகோல்கள் என்று நிரந்தரமாக ஏதுமில்லை அவ்வப்போது எண்ணிக்கையின் அடிப்படையில் எல்லைகளைத் தானியங்கி மாற்றிக் கொள்கிறது. ஆனால் அடிப்படை அளவுகோல் என்பது ஐந்து நபராவது விரும்பும் கீச்சு, விளம்பரம் அல்லாத கீச்சு, அரசியல்/திரை பிரபலங்கள் அல்லாதோரின் கீச்சு (இவர்களுக்குத்தான் ஊடகங்கள் இருக்கிறதே) முக்கியமாக, தமிழ்க் கீச்சு என்று சொல்லலாம். இந்த அடிப்படை முரண் கொண்ட கீச்சுகள் இருந்தால் சுட்டிக் காட்ட மறவாதீர்கள்.

பிறரின் கீச்சுகளை அவர்களின் அனுமதி இல்லாமல் கீச்சுப்புள்ளி இணையத்தளத்தில் வெளியிடுவது காப்புரிமை பிரச்சனை இல்லையா என்றால், "இல்லை" என்பதே பதில். சட்ட ரீதியாகப் பார்த்தால் காப்புரிமை செய்யப்பட்ட ஒன்றில் தான் காப்புரிமை மீறல் என்ற சிக்கவரும். ஆனால் டிவிட்டர் கணக்கு ஆரம்பிக்கும் போதே பகிர்வுரிமைக்கான ஒப்பத்தை வாங்கிக் கொள்கிறது (காப்புரிமை செய்யவில்லை ஆனால் பொறுப்புரிமை உள்ளது). தார்மீக ரீதியாகப் பார்த்தால், கீச்சுப்புள்ளி என்பது ஒரு கீச்சர்-வாசகர் பந்தத்தை மட்டுமே உருவாக்குவதால், உண்மையான கீச்சர் பெயரிலேயே பயன்படுத்துகிறது. அரசியல் ரீதியாகப் பார்த்தால், யாருடைய படைப்புகளையும் கொண்டு லாபம் அடைவதில்லை. இருந்தும் கீச்சுப்புள்ளியில் கீச்சுகளைப் பகிர்வதில் விருப்பமில்லாதவர்கள் தாராளமாகத் தெரிவிக்கலாம்.

தொந்தரவு ரீதியாகப் பார்த்தால், இது ஒரு தானியங்கி பதிவேற்றமே என்பதால் இதன் நிர்வாகியின் கீச்சுகள் கழுத்தை அறுக்காது என்பதை மறுக்காமல் பதிவுசெய்யப்படுகிறது. மேலும் சிறந்த பாதைகள் அடையாளம் காணப்பட்டு, தேவையின் பேரில் விரிவும் படுத்தப்படும். வழமை போல இதன் நிறைகுறைகளைத் தெரிவித்து மேலும் சிறக்க உதவுங்கள்.

மேலும் ஒரு செய்தி, RT_tamil போலவொன்றை மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப் போதிய அம்மொழி கீச்சுகள் தற்போது இல்லை. தமிழ் மட்டுமே அதிகமாக டிவிட்டரில் பயன்படுத்தப்படும் தென்னிந்திய மொழியாகும் என்றே தெரிகிறது. இது மேலும் சொல்லும் செய்தியாதேனில் இத்தகைய படைப்பாக்கக் கீச்சுகள் வேறு மொழிகளில் அதிகம் இல்லை என்பதுவும்தான்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மற்ற தளங்களைப் போலவே கீச்சுப்புள்ளி இணையதளமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

Thomas Ruban said...

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் :)

இ.பு.ஞானப்பிரகாசன் said...

அருமை ஐயா! தங்களுடைய இந்த முயற்சியும் வெற்றியடைய என் அன்பார்ந்த நல்வாழ்த்துக்கள்!

RT_Tamil வரும் முன்பு நான் கீச்சுலகில் கேட்பாரற்றுக் கிடந்தேன். நான்கு பேரோ என்னவோதான் என்னைப் பின்தொடர்ந்தார்கள். பல மாதங்களுக்கு அதுதான் நிலைமை. ஆனால், RT_Tamil-இல் இணைந்த பின் என் கீச்சுக்கள் பலரையும் சென்றடைந்ததன் விளைவு, என்னைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 70! மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி இது!

கீச்சகத்தில் (Twitter) இருக்கும் மிகப் பெரும் குறையே, அதில் பொதுத் தளம் எதுவும் இல்லாததுதான். அதாவது, நாம் இடும் கீச்சு நம்மைப் பின்தொடர்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். நம்மால் பின்தொடரப்படுபவர்களுக்குக் கூட அது தென்படாது. இதனால், நாம் எவ்வளவுதான் நல்ல கீச்சுக்கள் கீச்சினாலும் நம்மைப் பின்தொடர்பவர்கள் யாராவது அதை மறுகீச்சினால்தான் அஃது இன்னொரு மூன்றாம் மாந்தரைச் சென்றடையும். சமூகத்தின் பெரும் புள்ளிகள், அடுத்தவர் தொந்தரவு இன்றி, தன்னை விரும்புபவர்களுடன் மட்டும் தொடர்புகொள்ள உருவாக்கப்பட்ட சாதனம் என்பதால் இப்படியொரு கட்டுப்பாடு கீச்சகத்தில்! ஆனால், RT_Tamil மூலம் தாங்கள் அந்த எல்லைச் சுவரைத் தகர்த்தெறிந்து விட்டீர்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது. இதன் மூலம் கீச்சகத்துக்குள்ளேயே ஒரு பொதுவெளியை நீங்கள் உருவாக்கி விட்டதால் முகநூல் போலவே இதிலும் நமக்குத் துளியும் தொடர்பில்லாதவர்களுக்குக் கூட நம் கீச்சுக்கள் சென்றடைய நீங்கள் வழி ஏற்படுத்தி விட்டீர்கள். அதனால்தான், என்னுடைய சமூக அக்கறை வாய்ந்த கீச்சுக்களும், இன்ன பிற படைப்புக்களும் இன்று கீச்சகத்திலும் கணிசமான பேரை அடைய வழி கிடைத்தது.

சுருங்கச் சொன்னால், RT_Tamil மூலம் நீங்கள் கீச்சகத்தின் பயன்பாட்டு எல்லையைப் பெருவிரிவாக்கம் செய்துவிட்டீர்கள்! ஏற்கெனவே, ஆங்கிலத்தில் இந்தச் சேவை இருக்கிறதோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால், தமிழுக்கு இதை முதன்முதலில் கொண்டு வந்தவர் நீங்கள்தான் என நினைக்கிறேன். அதற்காக என் நன்றிகளும் பணிவன்பான பாராட்டுக்களும்!