Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Sunday, September 6, 2015

Info Post
செப்டம்பர் 5 2015ல் மதுரை கணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழாவில் "கணித்தமிழும் மாணவர்களும்" என்ற தலைப்பில் வழங்கிய கருத்துரையின் சாரம்.


ஏன் மாணவர்கள் கணித்தமிழுக்கு முக்கியமானவர்கள் என்றால், அவர்களிடம் தான் பொறுமையும், அர்ப்பணிப்பும் அதிகமாக இருக்கிறது. பணி, குடும்பம் என்ற சூழலுக்குள் வந்தபிறகு இத்தகைய பணியில் ஈடுபட சூழல் அமைவது கடினம். ஆனால் மாணவர்களாக இருக்கும் போதே உங்களுக்குள் ஒரு விதை விழுந்தால் சிறப்பாக செய்வீர்கள் அல்லது என்றாவது ஒருநாள் அதை செய்வீர்கள். உங்களுக்குள் இருக்கும் அந்த ஆற்றலைப் பயன்படுத்திப்பார்க்க இதுவே சிறந்த களம். வளர்ந்துவரும் தொழிற்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்தமட்டில் ஏறக்குறைய ஆசிரியர்கூட ஒருவகையில் மாணவர் தான். எனவே ஆசிரியர்களை விட்டுவிட்டதாக எண்ணவேண்டாம், கற்கும் ஆற்றல் உள்ள யாவருக்கும் இந்நிலை பொருந்தும்.



கலையும் இலக்கியமும் தான் ஒரு மொழியைக் காலம் கடந்து எடுத்துச் செல்லும். நல்ல எழுத்துதான் ஒரு மொழியை வளர்க்கும். அத்தகைய நல்ல மொழியை ரசியுங்கள். அதைப்போல நல்ல தமிழை அனுபவியுங்கள். மதிப்பெண்களுக்கு மட்டும் படிக்ககாமல் மனதாலும் படியுங்கள் அதுவே தமிழ்வளர்க்க முதல் படியாகும். என்னதான் தமிழில் எழுத வசதிகள் செய்து கொடுத்தாலும் தானாக வராத உந்துதல் நிலைக்காது. தானாக ஒரு உந்துதல் வந்துவிட்டால் வசதிகள் பெரிய பொருட்டல்ல.

நான் ஒரு இயற்பியல் பட்டதாரி. தமிழ் வாசிப்பு என்னைத் தமிழ் எழுத்தாளனாக ஆர்வமூட்டியது. எனது எழுத்துதான் எனக்கு ஒரு மென்பொருளை உருவாக்க உந்துதலைத் தந்தது. ஒருவேளை நான் தமிழ் வாசகனாக இல்லாவிட்டால் தமிழில் மென்பொருள் உருவாக்கத் தேவையும் எனக்கு வந்திருக்காது நானும் இங்கு வந்திருக்கமுடியாது. ஆகவே சொல்கிறேன் கணித் தமிழுக்கு மாணவர்கள் செய்யும் ஆகசிறந்த பணி தமிழின் கலைவடிவங்களை ரசியுங்கள். உங்களுக்குள் அந்த ரசிகன் இருக்கும்வரை ரசிகர்மன்றம் வைத்தாவது கணித் தமிழ் வளர்ப்பீர்கள். தொழிற்காக எங்கு எதைப் படித்தாலும் குட்டிப்போட்ட பூனை போல தமிழன்னை மடிக்கு ஓடிவருவீர்கள்.* உங்கள் துறையில் கலைச் சொற்களை உருவாக்கவோ, உங்கள் அறிவைப் பிறருடன் பகிரவோ, சிந்திக்கவோ தொடங்கிவிடுவீர்கள். உங்கள் துறை கணினி என்றால் கணினி வழி கருவிகள் செய்வீர்கள். உங்கள் துறை இதழியல் என்றால் கருத்துப் பரிமாற்றத்திற்கு செம்மையான வழியில் தமிழை புகுத்துவீர்கள்.

பிழைகளுக்காக அஞ்சாதீர்கள். உங்கள் பிழைகள் தான் உங்களை வளர்த்துவிடும். பிழையைத் திருத்தும் வாய்ப்பில்தான் பெரிய முயற்சிகள் எடுத்து முன்னேறமுடியும். மரபுமுறை கற்றலில்லாமல் மாற்று முறையிலும் கற்றுக் கொள்ளுங்கள். மரபுமுறை இயல்மொழி ஆய்வில்லாமல் மாற்று முறையிலும் முயன்று பாருங்கள். பிறமொழி மென்பொருட்களை மட்டும் நம்பி மொழிக் கருவிகளை உருவாக்காதீர்கள். தமிழுக்கென்று தனிவழியில் சிந்தியுங்கள். முதல் முதலில் முயலும் போது சிலர் சொன்னார்கள் தமிழில் விகுதிகள் அதிகம் செய்யமுடியாது என்றனர். ஒருங்குறியில் முடியாது என்றனர். தமிழில் சேர்த்து எழுதும்முறையை மாற்றினால் தான் முடியும் என்றனர். ஆனால் மாற்றுவழியில் முயலும் போது வாணி எழுத்துப்பிழை திருத்தி செய்யமுடிந்தது. எனவே இப்படி வரும் சிக்கல்களுக்கு அஞ்சாதீர்கள் அதற்கான தீர்வுகளைத் தேடுங்கள்.

அறிவியல் வளர்ச்சிக்குப் பகுத்தறிவுத்தனம் உதவினால் தொழிற்நுட்ப வளர்ச்சிக்குச் சோம்பேறித்தனம் உதவும். ஒரு அறிவாளியான சோம்பேறிதான் ஒரு விசயத்தை விரைவில் முடிக்கும் வழியைக் கண்டுபிடிப்பான். உங்களிடம் சோம்பேறித்தனம் இருக்கலாம் ஆனால் சோம்பேறியாகத் தான் இருக்கக் கூடாது. எளிமையான வழிகளில் கருவிகளை உருவாக்கவேண்டும். இலக்கணத் துறையில் இருப்பவர்கள் தமிழ் இலக்கணத்தை தொழிற்நுட்பம் கொண்டு மக்களுக்கு எளிமையாகத் தரவேண்டும். காலத்திற்கேற்ப மாற்றங்கள் வேண்டும். கிரவுட் சோர்சிங், கிரவுட் பண்டிங் போல தொழிற்நுட்பம் மரபுமுறைகளையே மாற்றும். அதேபோல சொற்களை அகராதிகளில் இருந்தோ, புத்தகங்களில் இருந்தோ எடுக்காமல் இணையத்தில் தானியங்கி கொண்டும் எடுக்கலாம். மக்கள் மொழிநடையறிய சமூகத்தளங்களையும் பயன்படுத்தலாம்.

பொதுவாக ஒரு படைப்பாளிக்கு அங்கிகாரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அங்கிகாரத்தை எதிர்ப்பார்க்காவிட்டாலும் புறக்கணிப்புகளின் வலியை உணர்ந்திருக்கிறேன். ஆனால் உங்களுக்கான அங்கிகாரத்தை தமிழ் இணையக்கல்விக் கழகம் செய்து கொடுக்கும். அதற்கு ஒரு உதாரணமாகவே எனக்கு இந்த முதல் மேடைவாய்ப்பை அமைத்துத் தந்துள்ளனர். உலக மொழிகள் எல்லாம் வரிவடிவம் பெறும் முன்பே இலக்கண வடிவம் பெற்றது தமிழ். பல மொழிகளுக்கு வேர்ச்சொல், இலக்கணம் என மொழிக்கொடை கொடுத்தநாம் இன்று கணிமையிலும் புதிய முறைகளை உருவாக்கி உலக மொழிகளுக்குக் கொடுக்கவேண்டும்.* தொடர்ந்து கணித்தமிழ் வளர்ச்சிக்குச் செயல்படுங்கள்.

* பேச மறந்த குறிப்புகள்

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// கற்கும் ஆற்றல் உள்ள யாவருக்கும் இந்நிலை பொருந்தும். // மிகச் சரி...

கரந்தை ஜெயக்குமார் said...

///பொதுவாக ஒரு படைப்பாளிக்கு அங்கிகாரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அங்கிகாரத்தை எதிர்ப்பார்க்காவிட்டாலும் புறக்கணிப்புகளின் வலியை உணர்ந்திருக்கிறேன்///
உண்மையான வார்த்தைகள்

எம்.ஞானசேகரன் said...

வளரும் தலைமுறையினருக்கு மிக அவசியமான கருத்துரைகள். தங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

வாழ்த்துக்கள்

கிரி said...

"என்னதான் தமிழில் எழுத வசதிகள் செய்து கொடுத்தாலும் தானாக வராத உந்துதல் நிலைக்காது. தானாக ஒரு உந்துதல் வந்துவிட்டால் வசதிகள் பெரிய பொருட்டல்ல."

உண்மை

"உங்களுக்குள் அந்த ரசிகன் இருக்கும்வரை ரசிகர்மன்றம் வைத்தாவது கணித் தமிழ் வளர்ப்பீர்கள். தொழிற்காக எங்கு எதைப் படித்தாலும் குட்டிப்போட்ட பூனை போல தமிழன்னை மடிக்கு ஓடிவருவீர்கள்.* உங்கள் துறையில் கலைச் சொற்களை உருவாக்கவோ, உங்கள் அறிவைப் பிறருடன் பகிரவோ, சிந்திக்கவோ தொடங்கிவிடுவீர்கள். உங்கள் துறை கணினி என்றால் கணினி வழி கருவிகள் செய்வீர்கள். உங்கள் துறை இதழியல் என்றால் கருத்துப் பரிமாற்றத்திற்கு செம்மையான வழியில் தமிழை புகுத்துவீர்கள். "

அசத்தல் :-) இது மிகச் சரி என்று ஏற்றுக் கொள்கிறேன்.

ரொம்ப நன்றாக இது குறித்து எழுதி இருக்கிறீர்கள். என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

Ilakkuvanar Thiruvalluvan said...

பேசிய உங்கள் ஒளிப்படத்தையும் அனுப்புங்கள். அகரமுதல இதழில் வெளியிடுகிறேன். உங்கள் இயற்பெயர் என்ன? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர் அகரமுதல www.akaramuthala.in இணைய இதழ் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

Pandiaraj Jebarathinam said...

வாழ்த்துகள்.

கணினியோடு தொடர்புகொள்ள ஆங்கிலமல்லாமல் தமிழை மட்டுமே பயன்படுத்தி கம்பைலர் போன்ற ஒரு பொறியை உருவாக்கம் செய்ய முடியுமா? அதற்கான முயற்சி யாரேனும் செய்திருக்கிறார்களா இது சாத்தியமா.

உலகில் பல மொழிகள் இருந்தும் ஆங்கிலம் மட்டுமே பைனரிக்கு அடுத்து இருப்பது ஏன் அவர்களின் கண்டுபிடிப்பு என்பதனாலா? பிற எந்த மொழியிலேனும் கம்பைலர் உருவாக்கும் நுட்பத்தை முன்னெடுத்திருக்கிறார்களா?.