Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Sunday, September 13, 2015

Info Post
தற்போதுவரை தொகுக்கப்பட்ட தமிழ் இணையத்தளங்கள் மட்டும் 18000 உள்ளன. இதில் 95% வலைப்பதிவுகள் என்கிறது அந்தப் புள்ளிவிவரம். ஒரு தலைப்பைக் கூகிளில் தேடினால் வரும் தேடல் விளைவுகளில் 75% வலைப்பதிவுகளும் தனிநபர் பக்கங்களும் தான் காணக்கிடைக்கின்றன. எதிர்காலத்தில் இணையத்தில் தேடியே வரலாற்றை அறிந்துகொள்ள முடியும். ஆனால் பரவலாக வலைப்பதிவு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்பது வீண் அரட்டைகளும், வில்லங்கமான சண்டைகளும் தான். ஆனால் நவீன உலகில் அரசு முதல் அண்ணாச்சிக் கடை வரை இணையம் இன்றியமையாததாக மாறிவருவதால் வெறும் சொந்தக் கதை சோகக்கதை தாண்டி பயனுள்ள ஊடகமாக மாறிவருகிறது. கணித்தமிழ் வளர்ச்சிக்கு வலைப்பூக்கள் மாலையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநராக திரு த. உதயச்சந்திரன் இ.ஆ.ப. பொறுப்பேற்ற பிறகு கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பெரிய மறுமலர்ச்சித் திட்டங்களை இவ்வமைப்பு உருவாக்கிவருகிறது. குறிப்பாக இதுவரை நடக்காத அளவிற்குத் தமிழ்த் தொழிற்நுட்பத் துறையினரையும், மொழியியல் துறையினரையும் அழைத்து ஒரு பெரிய கலந்துரையாடலை நடத்தி அதன் பரிந்துரை அடிப்படையில் திட்டங்களை வகுக்கிறது. தமிழ் மொழியியல் கருவிகள் உருவாக்கம், தமிழ் நூல்களை மின்னூலாக்கம், தமிழ்மொழிக் கற்பித்தல் போன்றவை முக்கியத் திட்டங்களாகும். அனைத்தையும் விட இணையத்தில் கணித்தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக, விக்கியூடகம், வலைப்பதிவு மற்றும் இதர சமூக ஊடகங்களில் தமிழ் வளங்களை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. குறுகிய காலத்தில் கணித்தமிழ்ப் பேரவையைக் கல்லூரிகளில் தொடங்கியது, பணிக்குழுக்களை அமைத்துச் செயலில் ஈடுபடுவது என இக்கல்விக்கழகத்தினர் சக்கரமாகச் சூழல்கிறார்கள்.

அவ்வகையில் வருகிற அக்டோபர் புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, மாபெரும் பதிவுப் போட்டியை வழங்கியுள்ளனர். அறிவியல் தமிழ் முதல் கணித்தமிழ் வரை தமிழின் வளர்ச்சியினைப் பற்றியும், சுற்றுச்சூழல் முதல் இயற்கை வரை பாதுகாப்புப் பற்றியும், பெண் முன்னேற்றம் பற்றியும் ஒவ்வொருவரும் சிந்திக்கவும், எழுதவும் தூண்டும்வகையில் போட்டியினை வடிவமைத்துள்ளனர். போட்டியைப் புதுக்கோட்டை சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழு நடத்த அதற்கு நிதியாதரவைத் த.இ.க. வழங்கிட திருவிழாப் பரபரப்பு அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி இணையத்தில் கணித்தமிழுக்கான வளங்களான கலைக்களஞ்சியம், அகராதிகள், பிழைதிருத்திகள், தட்டச்சுக் கருவிகள், வலைப்பதிவு உருவாக்கப் பயிற்சிகள் போன்றவற்றை உருவாக்கும் செயல்திட்டங்கள் ஏராளம். இவையனைத்தும் இணையத்தில் தமிழை வளர்க்க வலைப்பூக்கள் அல்லது இணையத்தளம் வாயிலாகவே முழுமையடையும். கல்லூரிகள் தோறும், கணித்தமிழைக் கொண்டு செல்வதுடன் வலைப்பதிவுப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. மேலும் வலைப்பதிவின் வரவேற்பைப் பொருத்து அதிகப் போட்டிகள், புத்தகத் திருவிழாவில் வலைப்பூவிற்கான தனி அரங்கம், வலைப்பதிவர்களுக்கான இதழ்கள் போன்றவற்றிற்கும் வாய்ப்புள்ளது.

இனி, வீட்டில் இருக்கும் பாட்டிமார்களை எழுப்பி அவர்கள் வாழ்வியல் அனுபவங்களை இணையத்தில் ஆவணப்படுத்தலாம். வரலாற்றை ஆராய்ந்து செய்திகளைத் தொகுக்கலாம். உங்கள் துறையில் உள்ள கலைச்செல்வங்களைத் தமிழில் படைக்கலாம். பாரதிதாசனைப் போல குயில்பாட்டு எழுதலாம். கண்ணதாசனைப் போல சோகப்பாட்டும் எழுதலாம். சட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் விவாதங்கள் நடத்தலாம். எனவே கணித்தமிழ் வழியாக அறிவார்ந்த சமூகம் நோக்கி இனி நகர்வோம்.

உலகலாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு உங்கள் வலையுலக வாசகர்களுக்கு விருந்தளியுங்கள்.

தமிழ் மென்பொருட்கள் பற்றிய ஒரு தொகுப்பு இங்குள்ளது.
http://www.tamilvu.org/coresite/html/cwsoftlist.htm

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
எனது வலைப் பூவில் போட்டிக்கான கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளேன்
நேரமிருக்கும்பொழுது வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் தோழர்... உங்கள் பங்கு இதில் பெரும் பங்கு வகிக்கிறது... நன்றிகள் பல...

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

அய்யா ஜி.எம்.பி.அவர்களின் கேள்விக்கு எமது வலைப்பக்கத்திலும் பதிலிட்டுள்ளோம். நீங்கள் ஒரு பெரும் கட்டுரையளவிற்கு அதற்கான விளக்கம் தந்திருப்பது பெருமகிழ்ச்சியூட்டுகிறது. தங்களின் கணித்தமிழ்ப் பணிகள் போற்றுதலுக்கல்ல..பின்பற்றுதலுக்குரியவை. உங்கள் கணித்தமிழ்ப் பேரவை போல, புதுக்கோட்டையில் “கணினித் தமிழ்ச்சங்கம்” வைத்துச் செயல்பட்டு வருகிறோம். இந்தவிழாக் கூட அந்த நண்பர்களின் முயற்சிதான். நமது நோக்கம் ஒன்றாக இருப்பது குறித்து, மகிழ்ச்சியடைகிறோம்.இயலும்வரை இணைந்து பயணிப்போம்.