Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Tuesday, October 6, 2015

Info Post
கூகிள் தனது டூடில் எனப்படும் முதற்பக்க லச்சினையினை முக்கிய நாட்களில் அடிக்கடி மாற்றியமைத்து வருவதை நாம் அறிவோம். அவ்வப்போது நாடுகள்வாரியாக டூடில் உருவாக்கப் போட்டிகள் நடத்தில் மாணவர்களின் படைப்பாற்றலையும் வளர்க்கிறது. அவ்வகையில் இந்தியாவில் இந்தாண்டு மாணவர்களுக்கான கூகிள் டூடில் உருவாக்கும் போட்டி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றிபெறும் டூடிலை, குழந்தைகள் தினத்தன்று தனது இணையத்தளத்தில் காட்சிக்கு வைக்கவும் திட்டமிட்டுள்ளது.


1 முதல் 10 வகுப்புவரை உள்ள மாணவர்கள் யாவரும் இதில் கலந்துகொள்ளலாம். 1 - 3 வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 4 - 6 வகுப்புகள் மற்றொரு பிரிவாகவும், 7 - 10 வகுப்புகள் மூன்றாவது பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பிரிவு நால்வர் என்று மொத்தம் 12 வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்களாம். அதிலிருந்து சிறந்த டூடிலை பொது வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யுமாம். http://www.google.co.in/doodle4google என்ற முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து டூடிலை அதனுடன் அனுப்ப வேண்டும். கடைசி நாள் அக்டோபர் 13 என்றும், முதல்கட்ட வெற்றியாளர்கள் அக்டோபர் 23 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மெலுள்ள இணையப்பக்கத்தைப் படிக்கலாம்

டூடில் என்பது கூகிள் நிறுவனத்தின் "Google" என்ற சொல்லைப் பிரதிபளிக்கும் வகையில் பல்வேறு வடிவத்தில் சித்திரமாக வரைந்த படமாகும். உதாரணத்திற்கு, G என்பதை ஒரு முதியவர் போலவும், o என்பதை இரு கண்ணாடி போலவும் விதவிதமாகக் காட்சிப்படுத்துவதாகும். "இந்தியாவிற்காக நான் ஏதேனும் உருவாக்க முடிந்தால், அது.." என்பதே இந்தாண்டு டூடிலுக்கான கருவாக உள்ளது. ஓவியத் திறனும், வண்ணங்களின் பயன்பாடும், கற்பனையின் ரசனையும், படைப்பாற்றலும் கொண்டு சிறந்த டூடில் தேர்வுசெய்யப்படும். காப்புரிமை கொண்ட படங்களைப் பயன்படுத்தாமல் குழந்தைகள் தாங்களாக வரையவேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெற்றியாளருக்குப் பாராட்டுப் பத்திரம், பதக்கம், கூகிள் குரோம் மடிக்கணினி மற்றும் கூகிள் அலுவலகத்தை பார்வையிட வாய்ப்பு ஆகியவை காத்திருக்கின்றன. எனவே பழைய டூடில்களை ஒருமுறை பார்த்துவிட்டு, உங்கள் பென்சீலைத் தீட்டுங்கள்.

அக்டோபர் 1-15 தமிழ் கம்ப்யூட்டர் இதழுக்காக எழுதியது

2 comments: