Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Thursday, February 21, 2019

Info Post

ஆங்கிலத்திற்குப் பல பிழைதிருத்திகள் இணையத்தில் கிடைக்கும் போது தமிழுக்கும் இணையத்தில் கிடைக்க வேண்டும் என்ற ஒரு தாகத்தில் வாணி திருத்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. ஆனால் தொடர்ச்சியாக விரிவு செய்யப் பொருளாதாரப் போதாமை நிலவியதால் சோதனைப் பதிப்பில்(beta) செயல்பட்டுவந்தது. அந்நிலையிலிருந்து மீண்டு புதுப் பொலிவுடன் அதிகத் தரவுகளுடன், அதிக ஆற்றலுடன் வாணியின் மேம்பட்ட பாதிப்பு இன்று வெளியாகிறது.
புதிய பதிப்பைப் பாடலாசிரியர் மதன் கார்க்கி சமூகத்தளத்தில் வெளியிட்டார். 


என்ன மேம்பாடுகள்

  • இதுவரை பரிந்துரையை ஏற்றுச் சம்மதம் செய்தே திருத்தி வந்ததற்கு மாறாக நேரடியாகவே ஆவணத்தில் திருத்திக் கொள்ளமுடியும். அதாவது WYSIWYG இடைமுகமாக மேம்பட்டுள்ளது.
  • கையடக்கக் கருவிகளுக்கு ஏற்ப ஒத்திசைவும் கொண்டுள்ளது.(மேக் கருவி தவிர)
  • கூடுதலாக ஐயாயிரம் அடிச்சொல்லுடன் மொத்தம் 45000 அடிச் சொற்களுடன் சுமார் ஒன்பது கோடி சொற்களைப் பகுத்துணரும்.
  • புழக்கத்தில் உள்ள ஆயிரம் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைப் பரிந்துரையாக வழங்கும்.
  • புள்ளியியல் அடிப்படையில் இயங்கும் நாவியின் பல அம்சங்களை வாணியில் இலக்கண விதி அடிப்படையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் 70% சந்திப்பிழைகளையும் கண்டுணர்ந்து திருத்தும்.
  • புழக்கத்திலுள்ள தனிப் பெயர்ச்சொல்(ஊர்ப் பெயர், ஆண் பெண் பெயர்கள்) பலவற்றை இது புரிந்துகொள்ளவும்.
  • வழமை போல ஒரு எழுத்துப் பிழையைத் திருத்தத் தேவைப்படும் (தட்டுப்பிழை(typo), சந்திப்பிழை, ஒருங்குறிப் பிழை, பேச்சுவழக்கு) அனைத்துச் சோதனைகளையும் செய்து பரிந்துரைக்கும். தற்காலத் தமிழ் நடையை மட்டுமே புரிந்து கொள்ளும்.
  • வேற்றுமை உருபுடன் இயங்கும் ஒரு தொகுப்பு அகராதியையும் கொண்டுள்ளது. இதில் ஒரு சொல்லின் பல வடிவங்களையும் (inflect form) இது உணர்ந்து கொண்டு அதன் பொருளை முக்கிய சில அகராதிகளிலிருந்து எடுத்துக் காட்டும்.
  • தற்காலத் தமிழகத்தில் புழக்கமில்லாத அதிகம் புழங்கும் இலங்கைத் தமிழ்ச்சொற்களும் இதில் கணிசமாக உள்ளன. அமெரிக்க, பிரிட்டீஷ் ஆங்கிலம் போல இந்திய இலங்கைத் தமிழ் வழக்குகளுக்கு எதிர்காலத்தில் தனிப்பிரிவுகள் உருவாகக்கூடும்

சில உதாரண செயல்பாடுகள் 

உள்ளீடு பரிந்துரை குறிப்பு
போலீஸ் ஸ்டேசன் காவல்நிலையம் உடைந்த ஆங்கிலச்சொற்கள் 
சுப்ரீம் கோர்ட் உச்சநீதிமன்றம் ஆங்கிலச்சொல்
பிசினஸுக்கு சவாலாய் தொழிலுக்குச் சவாலாய், வணிகத்திற்குச் சவாலாய், வியாபாரத்துக்குச் சவாலாய்  பல மொழிபெயர்ப்புகள்
திருப்பதிப்படாமல் திருப்திப்படாமல்,திருப்பப்படாமல் தட்டுப்பிழைகள்
சொல்லி செய்தார்
சொல்லி, செய்தார்
சொல்லிச் செய்தார்
சொல்லி, செய்தார்
சந்திப்பிழை
ஆடுங்க ஆடுங்கள்,ஆடுகள் வழக்குச்சொல்
ஒரேப் பொருளா ஒரே பொருளா தேவையற்ற ஒற்றை நீக்குதல்
பள்கழைகலக பல்கலைக்கழக ஒன்றுக்கு மேற்பட்ட வேற்றெழுத்துப் பிழைகளை நீக்கும்
பக்கங்களுடன்சென்னையில் பக்கங்களுடன் சென்னையில் தேவையற்ற சொல் இணைப்பைத் தவிர்க்கும்
ஈடுபாடுயிருந்தாலும் ஈடுபாடிருந்தாலும்  புணர்ச்சிப் பிழை

இதுவரை பயன்படுத்தித் தொடர் ஊக்கம் தந்த வாசகர்களும்,  2015 கணிமை விருது வழங்கிய கனடா இலக்கியத் தோட்டமும் இந்த முயற்சிக்குப் பெரிய உந்துதலாக இருந்தன. இலக்கண ஆலோசனைகள் வழங்கிய செங்கைப் பொதுவன் அவர்களுக்கும், கட்டமைப்புப் புரவலர் வலைத்தமிழ்.காமிற்கும் இத்தருணத்தில் நன்றியுடன் வாணி வெளியிடப்படுகிறது.


பிழைகளையும், ஆலோசனைகளையும் அறியத்தரலாம்.

2 comments:

கிரி said...

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நான் உங்களுடைய நாவி சந்திப்பிழை திருத்தி ஒவ்வொரு கட்டுரைக்கும் பயன்படுத்துகிறேன்.

என்னுடைய ஒவ்வொரு கட்டுரையிலும் உங்களுடைய மறைமுகப் பங்குள்ளது.

தமிழ் தமிழ் என்று பேசிக்கொண்டிராமல் செயலில் காட்டிக்கொண்டு இருக்கும் நீங்கள் எனக்கு ஒரு பெரிய முன்னுதாரணம்.

உங்களின் உழைப்புக்கான அங்கீகாரம் அனைத்து பக்கங்களிலும் இருந்தும் கண்டிப்பாக கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்று வாழ்த்துகிறேன்.

நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

புதியதைப் பயன்படுத்திப் பார்க்கிறேன்..

நன்றி...