Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Wednesday, January 1, 2020

Info Post
முந்தைய ஆண்டுகளைப் போல இல்லாமல் 2019 இல் சில உருப்படியான வெளியீடுகளும் முன்னெடுப்புகளும் நமது தளம் சார்பாக நடந்தன. நேரப் பற்றாக்குறை காரணத்தால் தனியான பதிவுகள் இன்னும் இடவில்லை. இருந்தாலும் பொது அறிமுகத்திற்கு 2019 நிகழ்வுகளைத் தொகுத்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2019-01-01 Pepper Carrot Happy-New-Year by-David-Revoy


  • நான்காண்டுகளுக்குப் பிறகு வாணியின் மேம்பட்ட பதிப்பு உலகத் தாய்மொழி நாளில் பாடலாசிரியர் மதன் கார்க்கி மூலம் வெளியிடப்பட்டது. இதன் மூலம் WYSIWYG மற்றும் TEXTவடிவில் வாணியைப் பயன்படுத்த முடியும்.
  • கடந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டு, தமிழில் பிழைகளைச் சுட்டிக்காட்டும் நோக்கர் குழுவிற்காக நோக்கர் கருவி உருவாக்கப்பட்டது. இதில் தமிழ் உள்ளடக்கங்களை மதிப்பிட்டு, பிழைகளை அறிக்கையாகப் பெற்றுக் கொள்ளமுடியும்.
  • வாணி பிழை திருத்தியின் புரவலர்களுக்குக் கூடுதல் திறனுடன் புரவலர் பதிப்பு என்று ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் முழுப் புத்தகத்தையும் ஒரே நேரத்தில் மெய்ப்புப் பார்க்கப்பட்டு, பல அமேசான் மின்னூல்கள் வெளிவந்துள்ளன.
  • விக்கிப்பீடியாவின் வழங்கியான wmflabs இல் அணுக்கம் கிடைத்தது, அதில் விக்கித் திட்டங்களுக்கான சில கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • விக்கிக்குள் உள்ளிணைப்புகளை மொழி பெயர்க்க உதவும் wikiconverter கருவியின் மேம்பட்ட பதிப்பு இவ்வாண்டே வெளியிடப்பட்டது.
  • ஆங்காங்கே இருந்த கட்டற்ற தமிழ் எழுத்துருக்களைத் தொகுத்து ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 2200 மேல் தமிழ் எழுத்துருக்கள் உள்ளன.
  • நண்பர்களுடன் சேர்ந்து வெளிவரும் பன்னாட்டு மாத இதழான வலைத்தமிழ் இந்த ஆண்டு அறிமுகமாகியது.
  • இணையத்தில் கணித்தமிழ் வளர்க்கும் வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டத்தின் சார்பாக நிகண்டியம் என்ற திட்டம் அறிமுகமானது. நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தமிழ் அகராதிகளை மின்னுருவாக்கம் செய்து வருகிறார்கள்.
  • விக்சனரியில் உள்ள தமிழ்த் தலைப்புச் சொற்களை எல்லாம் தொகுத்து, சொல்வங்கியாக இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ் விக்கிப்பீடியாவின் பதினாறாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டது, தமிழகத்தில் கணித்தமிழ் சார்ந்த சில  பயிற்சிப் பட்டறைகளை நடத்தியது என 2019 நிறைவடைந்தது. உடன் துணை நின்ற நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி உரித்தாகுக.

கனவுத் திட்டமான தமிழ் வலைப்பதிவு திரட்டியும், தமிழ்ச் சொற்பகுப்பியும் 2020 இல் வெளிவரும் வெளியீடுகளில் குறிப்பிடத்தக்கவையாகும். புதிய தசாப்தத்தில் கணித்தமிழும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் புதுமைகள் செய்யட்டும் என வாழ்த்தி வரவேற்போம்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான திட்டங்கள்...

தமிழ் வலைப்பதிவு திரட்டியை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

Yarlpavanan said...

இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

கிரி said...

உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

தமிழை மேம்படுத்த உங்களின் முயற்சிகள் அளப்பரியது. உங்களுடைய Naavi பிழைதிருத்தியை நான் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகிறேன். மிக்க நன்றி.

உங்களின் பல்வேறு முயற்சிகளுக்கு முக்கியமான இடங்களில் இருந்து ஆதரவு கிடைக்கிறது என்று நம்புகிறேன். என்ன தான் கடுமையாக முயற்சி செய்தாலும், மற்றவர்களின் ஆதரவும் கிடைக்கும் போது தான் அவை மேலும் பலம் பெறுகின்றன.

அனைவர் ஆதரவும் உங்களுக்குக் கிடைத்து மேலும் பல புதிய படைப்புகளைத் தமிழுக்கு வழங்குங்கள். தமிழின் மேம்பாட்டில் உங்களின் பங்கும் இருப்பது மகிழ்ச்சி.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

கிரி said...

நீங்கள் குறிப்பிட்ட நிகண்டியம் படித்தேன்.

ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை உருவாக்குவது மிக முக்கியமானது. நம்மில் பலரும் அவரவர் சொற்களைச் சுய கௌரவத்தின் காரணமாக உருவாக்கி மற்றவர் உருவாக்கிய சரியான சொல்லைக் கூடப் பயன்படுத்த மறுக்கின்றனர்.

இந்த நிலை மாற வேண்டும். பொதுவாக, அதிகாரப்பூர்வமாகச் சொற்களை அறிவித்து இவற்றைத் தான் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று அமைப்பு கூற வேண்டும்.

இதைப் பல வருடங்களாக எதிர்பார்த்து வருகிறேன் ஆனால், நடக்கவில்லை. சமீபத்தில் மலேசியாவில் நடந்த தமிழ் மாநாட்டில் இது சம்பந்தமாக முடிவு எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.

ஆங்கில சொற்களுக்கு இணையாக உருவாக்கப்படும் சொற்கள் பயன்பாட்டில் அதிகம் வரவில்லை என்றால், அதற்கான பழக்கம் மக்களிடையே அதிகரிக்காது.

நமக்குள்ள மிகப்பெரிய பின்னடைவு என்னவென்றால், மிக முக்கிய தமிழ் ஊடகங்கள் அனைத்தும் ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்துகின்றன.

கடினமான வார்த்தைகளுக்கு ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தினால் கூடப் பரவாயில்லை (எ கா குளம்பி) ஆனால், சாலை, வரிசை, அலுவலகம், மருத்துவமனை போன்ற எளிமையான சொற்களுக்குக் கூட ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்துவது மிக மிக வருத்தத்தை அளிக்கிறது.

தமிழ் மேலும் வளர வேண்டும் என்றால், ஆங்கில கலப்பை முதலில் ஒழிக்க வேண்டும். அதைச் செய்ய வேண்டும் என்றால், அதற்குச் சரியான தமிழ் வார்த்தை இருக்க வேண்டும்.

தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தாத காரணத்தினாலே தான் புதியதாக பயன்படுத்தும் போது அந்நிய மொழி போல படிப்பவர்களுக்கு தோன்றுகிறது அல்லது படிக்க வசதியாக தோன்றுவதில்லை.

இணை வார்த்தைகள் உருவாக்கப்படும் போது கடுமையானதாக இல்லாமல், ஓரளவு இயல்பான வார்த்தையாக மாற்றுவது மிக முக்கியம்.

சிங்கப்பூர் 'வசந்தம்' செய்தியில் முழுக்க தமிழிலேயே செய்தி வாசிப்பார்கள் அதாவது ஆங்கில கலப்பில்லாமல்.

அவர்கள் ஸ்மார்ட் ஃபோன் என்பதை 'பலபயன் தொலைபேசி' என்பார்கள். இதை 'திறன்பேசி' என்று கூறுவது எளிமையாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.

இது போல எளிமையான சொற்களை கொடுப்பதே மக்களிடையே கொண்டு செல்ல உதவும். எனவே, உங்களால் இச்செய்தியை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொண்டு செல்ல முடிந்தால், என்னுடைய இக்கருத்தை அவர்களிடம் தெரிவியுங்கள்.

நான் என்னுடைய தளத்தில் 98% ஆங்கில கலப்பில்லாமல் தான் எழுதுகிறேன். வேறு வழியில்லாத வார்த்தைகளுக்கு மட்டுமே ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

இதைக்கூட தமிழில் எழுதும் நிலை வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

பலரும் ஆங்கிலக்கலப்பு இல்லாமல் எழுத முடியாது, அது கடினம் என்று கருதுகிறார்கள். அது உண்மையல்ல.

நான் எழுதிய இக்கருத்தில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் இல்லை, படிக்கக் கடினமாக இருந்ததா?!

எனவே, பிரச்னை நமது எண்ணத்தில் தான். முயற்சி இருந்தால், மாற்ற முடியும்.

தமிழ் எழுத்தில் ஆங்கில கலப்பை முழுவதும் வெறுக்கிறேன். அழகான தமிழ் மொழியை அந்நிய மொழியோடு இணைத்து அனைவரும் கொலை செய்து வருகிறார்கள்.

இதை பாரம்பரிய செய்தி நிறுவனமான 'விகடன்' கூட செய்து வருவது மிக வருத்தத்தை அளிக்கிறது.

இப்பிரச்சனை தீர உங்க அளவில் முயற்சி எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

Geetha said...

மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்

Peyari said...

Very Nice!! Thanks for Sharing..

பெயரி | Tamil Baby Names | Baby Names in Tamil | Peyari