Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Wednesday, February 19, 2020

Info Post
சர்வதேச அமைப்புகளான கூகிள் மற்றும் விக்கிப்பீடியாவின் கூட்டு முயற்சியில் இந்தியளவில் கடந்த மூன்று மாதங்களாக நடந்துவந்த அனைத்து மொழி விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதலிடம் பெற்றுள்ளது. ஏதோ போட்டிக்கு எழுதிக் காட்டிக் கொள்ள நடந்ததல்ல. தமிழகத்தில் அதிகம் தேடப்படும் தலைப்புகள், இந்தியளவில் முக்கியமான தலைப்புகள் என அனைத்தும் இந்தச் சமூகம் பயன்படும் தலைப்புகளில் எழுத வேண்டும் என்று முன்முடிவோடு தரத்தில் சமரசமின்றி எழுதப்பட்டவை. அனைத்தும் தன்னார்வத்தில் எடுத்துக் கொண்டு தமிழ் உள்ளடக்கத்தை இணையப்பரப்பில் அதிகரிக்கும் நோக்கோடு எழுதப்பட்டவை. இனி நீங்கள் கூகிள் இத்தலைப்புகளில் தேடும் போது காணக்கிடைக்கும் முதல் பதிலே இந்தப் போட்டியில் எழுதப்பட்டதாக இருக்கலாம். இணையத்தில் தமிழின் வளர்ச்சிக்கு இந்த முன்னெடுப்பு முக்கியமானதே.




ஒரு காட்டில் எத்தனைப் புலிகள் உள்ளன என்பதைக் கொண்டு அந்தக் காட்டின் இயற்கை வளத்தை கணித்துவிடலாம். அதாவது புலி வாழ்வதற்கான இரை விலங்குகளும், அவை வாழ்வதற்கான புல்வெளிகளும், புல் வளர்வதற்கான நீர் ஆதாரங்களும் என ஒரு தொடர் சங்கிலி அந்தக் காட்டின் சூழலைப் பிரதிபலிக்கிறது. அதுபோல ஒரு மொழியின் வளர்ச்சியை அம்மொழி விக்கிப்பீடியாவின் கட்டுரை எண்ணிக்கை காட்டும். அதனடிப்படையில் இந்தக் கட்டுரைப் போட்டியின் பெயரே வேங்கைத் திட்டம் என்று கொண்டு போட்டி நடந்தது. 62 விக்கிப்பீடியர்கள் தமிழ் சார்பாகப் பங்கெடுத்து 2959 கட்டுரைகளை எழுதி, தமிழ் இந்தாண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. போட்டிக்காக இந்திய மொழிகளில் மொத்தம் எழுதப்பட்ட கட்டுரைகளில் இது 24% ஆகும். கட்டுரை எண்ணிக்கை மட்டுமல்லாமல் பங்கெடுத்தவர்கள் எண்ணிக்கையிலும் முதலிடம் என்பது பெருமைதான். இந்த வெற்றிக்கு அடித்தளமாக அறுநூறு கட்டுரை கடந்த ஸ்ரீ. பாலசுப்ரமணியன் மற்றும் சுமார் ஐந்நூறு கட்டுரை தந்த ஞா. ஸ்ரீதர் இருவருக்கும் பாராட்டுக்குரியவர்கள். இருநூறு கட்டுரைகளுக்கு மேல் எழுதிய முனைவர் பா. ஜம்புலிங்கம், "வேங்கை மங்கை" பாத்திமா ரினோசா, வெ. வசந்த லட்சுமி ஆகியோரின் பங்கும் முக்கியமானது. கி. மூர்த்தி, தகவலுழவன், மகாலிங்கம், அருளரசன் ஆகியோர் நூறு கட்டுரைகளுக்கு மேல் எழுதி வெற்றியை உறுதி செய்தனர்.


இவர்கள் மட்டுமல்லாமல் அடுத்தடுத்த எண்ணிக்கையில் கட்டுரைகளை எழுதி, தமிழ் விக்கியின் வெற்றியணியில் இடம்பிடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், நடுவர்கள், பரப்புரையாளர்கள், செய்தி வெளியிட்ட ஊடகங்கள், தொடர்தொகுப்பு நிகழ்விற்கு உதவியவர்கள் என இந்த வெற்றிக்குப் பின்னர் உள்ளனர். வேளச்சேரி பயிலகம், மதுரை மன்னர் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி ஆகியோர் உதவிக்கும் நன்றிகள். இந்த வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு சில மாதங்களில் நடக்கவுள்ளது. கடந்த ஆண்டுப் போட்டியில் களமிறங்கிய பலர் இந்தாண்டு களமிறங்க வாய்ப்பு அமையவில்லை. விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி. ஒருசிலரை மட்டும் நம்பி வளர்வதில்லை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு பயனர்கள் இத்தேரை இழுத்து வருகின்றனர். அதே போல அடுத்தாண்டு வெற்றியைத் தக்கவைக்க இவர்கள் மட்டும் போதாது புதியவர்கள் களமிறங்க வேண்டிய தேவையும் உள்ளது. அந்த அணியில் இடம் பிடிக்க இன்றே நீங்களும் முயலலாம். வெற்றியைக் கொண்டாடுவோம் வெற்றியைத் தக்கவைப்போம்

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வேங்கைத்திட்டத்தில் கலந்துகொண்டது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

kalyan said...

Thanks
for giving this information...