ஒரே படத்தின் பின்புலத்தில் தரவுகளை மாறிலிகளாகப் போட்டுப் பல ஒளிப்படங்களை உருவாக்கும் பயனர் செயலி சில மாதங்கள் முன் அறிமுகமாகியிருந்தது. இணையவழிப் பயிற்சிகளுக்குச் சான்றிதழ் தயாரிக்க உதவும் வகையில் முதன்மையாக அமைந்திருந்தது. இதன் மூலம் பலர் சான்றிதழ்களையும் தயாரித்து அனுப்பினர். மேலும் பல பின்னூட்டங்கள் வந்தன குறிப்பாக அதில் நேரடியாக மின்னஞ்சல் அனுப்பும் வசதியும், அதிகத் தரவுகள் உள்ளீடும் வசதியும் கேட்டிருந்தனர். இதற்கு முன் வரை இங்கு உருவான மென்சான்றிதழ்ப் படத்தைத் தரவிறக்கும் செய்த பின்னரே மின்னஞ்சலில் பங்கேற்பாளர்களுக்கு அனுப்ப முடிந்தது. அது போல பெயர், ஊர் தவிர இதர தகவல்களும் இடும் தேவையும் இருந்தது.
எப்போதும் போல இச்செயலியின் பக்கத்திற்குச் சென்று, அந்த கூகிள் விரிதாளின் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம். பக்கம் திறந்தவுடன் அதை உங்கள் கோப்பாக(Make Copy) நகலெடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இயக்க முடியும். பின்னர் வேண்டிய அமைவடிவங்களைப் பூர்த்தி(Configurations) செய்த பின்னர் முதல் முறை இயக்கும் போது கூகிள் அணுக்கம் கேட்கும்(unsafe), அதற்கு சம்மதம் என்று கொடுக்க வேண்டும்.
செய்ய வேண்டியவை
சான்றிதழுக்கான ஒரு வார்ப்புரு தயாரித்துக் கொள்ளவும் அதாவது பங்கேற்பாளர் பெயரில்லாத ஆனால் கையெழுத்து முதல் லச்சினை வரை அனைத்தும் கொண்ட வெற்றுச் சான்றிதழ். இதை கூகிள் டிரைவில் பதிவேற்றி அதன் கோப்பு எண்ணை எடுத்துக் கொள்க. பின்னர் சான்றிதழின் எந்தெந்த புள்ளியில் கொடுக்கப்படும் தகவல்கள் இடம்பெற வேண்டும் என்று முடிவுசெய்து X அச்சு Y அச்சு அளவுகளைக் குறித்துக் கொள்க. இவற்றை விரிதாளின் ஸ்ரிப்ட் எடிட்டர் பகுதிக்குச் சென்று உரிய இடங்களில் மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் மின்னஞ்சலின் தலைப்பு, சிசி முகவரி போன்றவற்றையும் மாற்றிக் கொள்ளலாம். பின்னர் விரிதாளின் இரண்டாவது தாளில், அனுப்ப உள்ள மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை எழுதிக் கொள்ளுங்கள். கடைசியாக அனுப்ப வேண்டிய பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை தாளில் இட்டு, Macro -> Generatemail என்பதை இயக்கி அஞ்சல்களை அனுப்பலாம். இதை சரியாக இந்த நீட்சியில் இட்டு இயக்கினால் நாளொன்றிற்கு அதிகபட்சமாக 500 நபர்களுக்குச் சான்றிதழ்கள் அனுப்ப முடியும்.
இருமொழியில் சிறிய விளக்கக் காணொளி
சில குறிப்புகள்:
- எம்.எஸ் பெயிண்ட் அல்லது வேறு ஒரு மென்பொருள் துணையுடன் X/Y அச்சுகளைக் குறித்துக் கொள்ளலாம்.
- முதலில் சோதனை மின்னஞ்சலைக் கொடுத்து சான்றிதழின் இறுதி வடிவைப் பார்த்துக் கொண்டு பின்னர் அனைவருக்கும் அனுப்பலாம்.
- கூகிள் பயனர் கணக்கில் நாளொன்றிற்கு 500 என்ற வரம்பிற்குப்பதால் இரண்டு வேறுவேறு கணக்கிலிருந்து ஒரே நாளில் ஆயிரம் வரைகூட அனுப்பிக் கொள்ளலாம்.
- சான்றிதழுக்கு மட்டுமல்ல வேறு எந்த விதமான படிவங்களையும் பலருக்கு ஏற்றவகையில் விருப்பமைவு செய்ய வேண்டுமெனில் இது உதவும்
- இது இலவசக் கருவி என்பதால் இதன் பயன்பாட்டு இடர்களுக்கு உருவாக்குநர் பொறுப்பேற்க இயலாது.
- கூடுதல் ஆலோசனை மற்றும் மேம்பாடுகளுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
2 comments:
பலருக்கும் உதவும்... நன்றி...
தமிழுக்கு மேலும் ஒரு மெருகு. அற்புதம்
Post a Comment