Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Saturday, January 16, 2021

Info Post
தமிழர்களின் கலை வடிவான கோலங்களை இணையத்தில் உருவாக்கிக் கொடுக்கும் செயலியாக 2012 ஆம் ஆண்டு கோலசுரபி வெளிவந்தது. பெரிதாக வரைகலை நிபுணத்துவமின்றி, கணித நிபுணத்துவத்தில் உருவான அந்தச் செயலியில் தான்தோன்றித்தனமான கோலங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். அதனைப் பலர் பயன்படுத்தியும் வந்திருப்பீர்கள். அதன் மேம்பட்ட பதிப்பு ஜெர்மனியிலுள்ள முன்சென் தமிழ்ப் பள்ளியின் பொங்கல் விழாவில் இன்று(ஜன 16 2021) வெளியிடப்பட்டது.
 
இதில் கூடுதலாக இரு வகை கோலங்களை வரையும் திறனும், கோடுகளுக்கு நிறங்களை மாற்றிக் கொள்ளும் திறனும் புதியதாக அறிமுகமாகியுள்ளன. மேலும் வரைகலையில் நவீனமான யுக்தியைக் கொண்டு படங்களை வரைந்து தள்ளுவதால், உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கோலமும் அழியாமல் நழுவுபடமாக (slide show) போல சேர்ந்துகொள்ளும். விருப்பமான படத்தை இப்போது நேரடியாகவே சேமித்துக் கொள்ளலாம். முன்பு கோலத்தில் நான்குபுறம் மட்டுமே வளைகோடுகள் செல்லும் ஆனால் புதிய பதிப்பில் குறுக்காகவும் செல்லும் இதனால் பார்த்திராத கோலங்களும், புதுப்புது வடிவங்களும் கிடைக்கும். நட்சத்திர வடிவக் கோலங்களில் தான்தோன்றியான முனைகளுடன் புள்ளிகளுக்கேற்ற அளவில் வரைந்து கொடுக்கும். அனைத்தையும் ஒருமுறை வரைந்து பார்க்கலாம்.

கோலங்களைச் சிறுவயதில் நன்கு வரையும் குழந்தைகள் கணிதத்தில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். இராமனுஜரும் தனது தாயின் கோலங்களைப் பார்த்தே கணித வல்லுநராக உயர்ந்திருக்கலாம். கோலங்கள் கணிதத் திறனின் வெளிப்பாடு மட்டுமல்லாமல் கற்பனையின் வெளிப்பாடும் தான். கோலசுரபியின் கோலங்கள் அனைத்தும் கட்டுற்ற கோலங்கள், கட்டறு கோலங்கள் இத்தகைய கணித/கணினி சூத்திரங்களுக்குள் அடைப்பது ஒரு சவால் தான். கோலத்தின் விதிகள் என்றால் நேர்ப் புள்ளி, ஊடு புள்ளி என்று இரு வகையாகக் கோலங்களுக்குப் புள்ளிகள் உண்டு. சிக்கு, நெளி, கம்பி, புள்ளி போன்றவை அதன் அங்கங்களாகும். புள்ளி இல்லாமலும் பூக்கோலங்கள் கட்டறு கோலங்கள் உள்ளன. ஒருமுறை வந்த வழியே கோடுகள் மீண்டும் வரக்கூடாது. எங்குமே கூரிய முனையில் வளையக் கூடாது. அனைத்துப் புள்ளிகளையும் கோடுகள் கடந்திருக்க வேண்டும் இவை கோலத்தின் விதிகள். ஆந்திராவில் முக்கு, மேற்கு வங்காளத்தில் ஆல்பனா என்றும், சத்தீஸ்கரில் சௌக்புராணா என்றும் இதர பகுதிகளில் ரங்கோலி, ரங்கவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. கோலப்பொடி, அரிசிமாவு, சாணம், வண்ணப்பொடி, பூக்கள் போன்றவை கோலங்கள் வரைய பயன்படும் பொருட்கள். நட்சத்திரம், விளக்கு, தாமரை, ரோஜா, அன்னம், கிளி, மயில் போன்றவை கோலங்களில் அதிகமாக இடம் பெறும் வடிவங்களாகும். சங்கப் பாடலான நற்றிணையில் "வரி" என்றும் அகநானூற்றில் "கோல்" என்றும் பரிபாடலில் "அழகு/ஒப்பனை" என்றும் பல்வேறு குறிப்புகள் கோலத்தைப் பற்றிய உள்ளன. வரிவடிவக் கோலங்கள் தவிர பெரும்பாலும் நான்கு அல்லது இரு புறமும் ஒரே ஒழுங்கில் சதுரம், வட்டம், அறுகோணம் அல்லது எண்கோணம் வடிவில் இருக்கும்.


கோலங்களை வரைந்து குழந்தைகள் பழக எளிய செயல்முறைப் பயிற்சிக்கான ஒரு மின்னூலும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்த நூலினை அச்சிட்டுக் கோலங்களுக்கு வண்ணம் தீட்டலாம், நிறைவடையாத கோலங்களை வரைந்து காட்டலாம். கோலப் பயிற்சிக்கான புத்தகங்கள் பெரிதாக இல்லை என்பதால் இதனைக் குழந்தைகளுக்குத் தந்து முயன்றும் பார்க்கலாம். இந்நூல் படைப்பாக்கப் பொதுமத்தில் (CC BY-SA) வெளியிடப்படுகிறது. அனைவருடனும் பகிரலாம், கோலங்களைப் பரப்பலாம். கோலசுரபியின் நிறைகுறைகளையும் ஆலோசனைகளையும் அறியத்தரலாம். 

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அற்புதம்... இதற்கு கணக்கியல் முக்கியம்... வாழ்த்துகள் பல...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஆகா!! சிறப்பு!! வாழ்த்துகள் சகோ

முனைவர் அ.கோவிந்தராஜூ said...

சுடர் மிகு அறிவுடன் உன்னப் படைத்தான்.
மிச்சம் இன்றி உச்சம் தொடு.

இராமமூர்த்தி ராமச்சந்திரன் said...

நீச்சல் காரன் தரையிலும் வானிலும் நீந்தி சாதனை செய்கிறார்.பாராட்டுகள்! - புலவர் இராமமூர்த்தி