Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Thursday, March 21, 2024

Info Post

ஒரு நல்ல திரையிசைப் பாடல் என்பது எதுகை மோனை என்பதைத் தாண்டி மெட்டுக்கு ஏற்ற வரிகளாக அமைய வேண்டும். அந்த சந்தத்திற்கான இலக்கணமே யாப்பு. செய்யுளுக்கான யாப்பிலக்கணத்தை முழுவதும் பயன்படுத்தாவிட்டாலும் அசைகளும் சீர்களும் சரியாக இருந்தால் தான் ஓசை நயம் வரும். கடந்த ஆண்டு இசைஞானி இளையராஜா ஒரு நேர்காணலில் பேரு "வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி" என்ற பாடல் திருக்குறளின் "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் தூஉம் மழை" என்ற வரிகளின் சந்தத்தைப் பயன்படுத்தியதாகக் கூறியிருப்பார். இவ்விரு வரிகளையும் அசைகளாகப் பிரித்தால் "நேர்நேர்நேர்  நேர்நேர்நேர்  நேர்நேர்நேர்  நேர்நேர்" என்று சரியாகப் பொருந்துகிறது. மேலும் இதே சந்தத்தில் பல திரைப் பாடல்களும் வெவ்வேறு மெட்டுக்களில் பாடப்பட்டுள்ளன. இத்தகைய இலக்கண ஆய்விற்குத் திரையிசைப்பாடல்களை உட்படுத்தமுடியும். இது போன்ற ஆய்வுகளுக்குப் பிற ஐரோப்பிய மொழிகளில் Scansion Tool, Prosody Analyzer வகை கருவிகள் பல உள்ளன. தமிழிலும் அகலோகிதம், எமோனி போன்ற மென்செயலிகள் உள்ளன. இவ்வரிசையில் பாவாச்சி என்ற மென்செயலி(webapp) முழுமையடைந்து உலக கவிதை நாளில்  அறிமுகமாகியுள்ளது.

http://apps.neechalkaran.com/rhythm

இதில் மெட்டிற்குப் பாட்டிழுதவோ, திரையிசைப் பாடல்கள் சந்தம், சொல், தொடை போன்ற பாட்டுக்கான கூறுகளைத் தேடவோ முடியும். 

அதில் விரும்பும் மெட்டைக் கொடுத்து நீங்களாகப் பாடல் வரிகளை எழுதலாம். மெட்டுக்கு வரிகளில் நெருக்கமாக அமைந்தால் அதைச் சுட்டிக் காட்டி வழிநடத்தும். எளிதில் ஒப்பிட்டுப் பார்த்து, திருத்திக் கொள்ளலாம். ஏற்கனவே பாவாச்சியில் உள்ள சந்தத் தேடல் மற்றும் ஒலித் தேடல் போன்ற வசதிகள் மூலம் தேவையான சொற்களைப் பரிந்துரையாகக் கொடுக்கலாம்.

எப்படிப் பயன்படுத்துவது?
"தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த" என்று மெட்டினையோ அல்லது நேரடியாக ஏதேனும் பாடல் வரிகளையோ முதல்பெட்டியில் இடவேண்டும். அடுத்த பெட்டியில் நீங்களாகப் பாட்டெழுதலாம். எழுத்தினைத் தட்டச்சத் தட்டச்ச நீங்கள் கொடுத்த மெட்டின் நிறம் மாறி உங்களுக்கு ஒப்பிட்டுக் காட்டும். பச்சை எழுத்தென்றால் ஓசை பொருத்தமானது; சிவப்பு எழுத்தென்றால் ஓசை பொருத்தமாக வில்லை எனக் குறிக்கும். பச்சைக் கோடு இட்டிருந்தால் அசையும் பொருத்தமாகிவிட்டதெனப் பொருள். சிவப்புக் கோடு இட்டிருந்தால் அசை பொருத்தமாகவில்லை எனப் பொருள். வேண்டிய திருத்தங்களை உங்கள் வரிகளில் செய்து பச்சை நிறமாக்கி, பாடல் வரிகளைப் பயன்படுத்தலாம். 

விரும்பிய சந்தவரிகளையோ பாடல் வரிகளியோ இட்டால் அதே ஓசை நயத்தில் உள்ள வரிகளை எடுத்துத் தரும். உதாரணம் "லாலலால லாலா லாலலால லாலா" என்று தரும் போது கும்தலக்கடி கும்தலக்கடி பாடலில் உள்ள "மாமனாரு வீட்டில் மன்னனாக ஆனேன்" என்பது போன்ற பலவரிகளைக் காட்டும். "கொம்புல பூவ சுத்தி நெத்தியில்" பொட்டு வச்சு இந்தப் பாடல் வரியை இடும் போது "அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே" வரிகள் உட்பட இசைக்கு ஒத்த வரிகள் கிடைக்கிறது. அசை பிரித்தும் தருவதால் இலக்கணத்தோடும் ஒப்பிட்டுக் கொள்ளமுடியும். மேலே குறிப்பிட்ட இளையராஜா பாடல் வரிகளை இட்டு அதே குறளைத் தேடி எடுக்கலாம். இன்னொரு உதாரணமாக "சிப்பி இருக்குது முத்தும் இருக்குது" பாடலில் நடிகை ஸ்ரீதேவி குறிப்பிடும் சந்தத்தை இதில் இட்டால் நடிகர் கமலஹாசன் பாடிய வரிகள் கிடைக்கும்.
உவமைக்குச் சொற்கள் தேடும் போதும் ஒரு சொல் எப்படியெல்லாம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்றும் காட்டுகிறது. குறிப்பாக குயில் என்ற சொல் காதல் குயில், ஆனந்தக் குயில், பருவக் குயில், தேவக் குயில், செல்லக் குயில் போன்று அறுபது வகையாகப் பயன்பட்டுள்ளது. காவேரி என்ற சொல்லும் காவிரி என்ற சொல்லும் தலா தொண்ணூறு பாடல்களில் பயன்பட்டுள்ளது.  இது போன்ற சொல்லாட்சியும் பயன்பாட்டையும் கண்டுபிடிக்கமுடியும். மேலும் ஒரே எதுகை மோனை சொற்களையும் இதே திரையிசைப் பாடல்களிலிருந்து எடுத்துத் தரும். இது நிறைவான கருவியில்லை ஆனால் திரையிசைப் பாடலும் யாப்பிலக்கணமும் கலந்த ஆராய்ச்சிகளுக்கு உதவும்.

பிரபலமான அனைத்துத் திரையிசைப் பாடல்களும் இதன் தரவுத் தளத்தில் உள்ளதால் தமிழ்த் திசையிசைப் பாடல்களில் உள்ள மொழிவளத்தை கவித்துவத்தையும் ஆய்வு செய்யலாம். பொதுவாக எதுகை மோனை போன்ற மரபுகளை எல்லாம் புதுக் கவிதைகளில் உடைத்தாலும் ஓசை நயத்திற்கோ பொருள் நயத்திற்கோ நல்ல சொற்களைக் கவிஞர்கள் தேடுவதுண்டு. பாடலாசிரியர்களும் இசையமைப்பாளரின் மெட்டிற்கேற்ற வரிகள் எழுத சந்த நயத்தை பெரிதும் பின்பற்றியாக வேண்டியிருக்கும். இத்தகைய கவிதைகளை எழுதவும், எழுதிய பாடல்களில் தேடவும் இத்தளம் உதவும்.

மரபுக் கவிதைகளைவிடப் புதுக் கவிதைகளும் நவீனக் கவிதைகளும் மக்களை அதிகம் அடைந்துள்ளதற்கு இலக்கண விதிகள் ஒரு காரணமாகச் சொல்லப்படுவதுண்டு.  பொதுவாக அசை, சீர் போன்ற விதிகளைத் தவிர்த்துப் பேசுபொருள் ஒன்றை மட்டும் மையமாகக் கொண்டு எழுதுவதால் மக்களுக்கு இவை எளிதாக இருக்கின்றன. ஆனால் முக்கிய வேற்றுமை என்னவெனில் மரபுக் கவிதைகளைப் பாடலாகப் பாடமுடியும். ஆனால் புதுக்கவிதைகளில் அது கடினம். இந்த விதி திரையிசைப் பாடலுக்கும் பொருந்தும். அதனாலேயே கவிஞர்களை எல்லாம் பாடலாசிரியராகக் கொள்ள முடிவதில்லை. திரையிசைப் பாடல்களைக் கவிதை என்று நவீனக் கவிஞர்களும் ஏற்பதுமில்லை. அப்படியெனில் திரையிசைப் பாடல்கள் கவிதைகளைவிட மேம்பட்ட இலக்கிய வடிவா என்ற விவாதத்தைத் தாண்டி நவீனக் கவிதைகளுக்குப் பொருந்தாத யாப்பிலக்கணம் திரையிசைப் பாடல்களில் பின்பற்றப்படுகிறது என்பதை உணரவேண்டும்.

கவிஞர்களுக்கு மட்டுமில்லாமல் கவிதையை ஆராய நினைப்பவர்கள் அனைவருக்கும் இக்கருவி பயன்படலாம். பயன்படுத்தி, நிறை குறைகளைக் கூறலாம்.






Next
This is the most recent post.
Older Post

0 comments: