ஆங்கிலத்தில் pangram என்றும் தமிழில் முழுவெழுத்து அல்லது 'முழு அரிச்சுவடி சொற்றொடர்' அல்லது அரிச்சுவடித்தொடர் என்றும் அழைக்கப்படும் தொடரானது அந்த மொழியின் அரிச்சுவடியிலுள்ள அனைத்து எழுத்துக்களாலும் அமைக்கப்பட்ட சொற்றொடரைக் குறிக்கும். சிறிய வாக்கியமாகவும் நினைவில் கொள்ளத்தக்க பொருளும் கொண்டாகவும் இருக்கும். இது அச்சடித்த வடிவத்தைக் காட்ட, அச்செழுத்துக் கருவியைப் பரிசோதிக்க, கையெழுத்து, வனப்பெழுத்து மற்றும் தட்டச்சுத் திறனை வளர்க்கவெனப் பயன்படுகிறது. அதாவது தொழில்நுட்பத்திலோ திரையிலோ எல்லா எழுத்தையும் சோதித்துப் பார்க்க இந்தத் தொடர் பயன்படுகிறது.
ஆங்கிலத்தில், "The quick brown fox jumps over the lazy dog" என்ற சொற்றொடர் பிரபலமானது. இதில் அனைத்து 26 எழுத்துக்களும் அடக்கமாகும். எந்த எழுத்துருவைக் கணினியில் பதிவு செய்யும் போதும் இந்தத் தொடரைப் பார்த்திருப்போம். ஆங்கிலத்தில் புதிதாகப் பயன்படுத்தும் எழுத்துருவைச் சோதிக்க இந்த ஒற்றை வரியை உருவாக்கி, அனைத்து எழுத்தும் எந்த வடிவில் உள்ளது எனப் பார்த்துக் கொள்ள முடியும். தமிழில் அவ்வாறு 247 எழுத்துக்களையும் கொண்ட தொடரை உருவாக்க முடியாது ஆனால் குறைந்தபட்சம் உயிரும் மெய்யும் சேர்த்து வருமாறு உருக்கலாம். மேலும் தமிழ் அரிச்சுவடில் உள்ள மாறுபட்ட குறியீடுகளையும் இந்தச் சொற்றொடர் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பு. அப்போது தான் இதனை வடிவச் சோதனைக்குப் பயன்படுத்த முடியும்.
தமிழில் உள்ள அனைத்து துணையெழுத்துகளின் வகைகளைக் கீழே பார்க்கலாம்.
* துணைக்கால் - கா, சா, தா, வா
* கொம்புக்கால் - ஊ, கௌ, சௌ. யௌ
* மடக்கு ஏறுகீற்றுக் கால் - ணூ, தூ, நூ
* ஒற்றைக்கொம்பு - கெ, நெ, செ,ளெ
* இரட்டைக்கொம்பு - கே, நே, சே,ழே
* இணைக்கொம்பு/சங்கிலிக்கொம்பு - கை, சை, நை, றை
* சாய்வுக்கீற்று - ஏ
* இறங்கு கீற்று - பு, சு, வு, யு
* மடக்கு ஏறு கீற்று - ணு, து, நு, லு. று
* பின்வளைகீற்று - கூ
* மேல்விலங்கு - கி, தி, பி, மி
* கீழ்விலங்கு - மு, ரு, கு, டு
* இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி - சூ, பூ
* மேல்விலங்குச் சுழி - கீ, தீ, ரீ, வீ
* கீழ்விலங்குச் சுழி - மூ, ரூ, டூ
* பிறைச்சுழி - ஆ
தமிழில் உள்ள 216 உயிர் மெய் எழுத்துக்களையும் வைத்துத் தொடர் அமைப்பது கடினமானது மட்டுமல்ல தேவையும் இல்லை. காரணம் "ை" என்ற சங்கிலிக் கொம்பு எழுத்து ஏதாவது ஒரு மெய்யுடன் வந்தாலே போதும் மற்ற கை,சை,தை, பை போன்ற ஐகார வரிசை முழுவதும் எழுதிவிடலாம். அது போல ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு ஒருமுறை வந்தாலே போதும். கீற்று வகை எழுத்துக்களில் வகைக்கு ஒன்றாவது இருந்தாலே மற்றவற்றைப் புரிந்து கொள்ளலாம். விலங்கு வகை எழுத்துக்களிலும் வகைக்கு ஒன்றாவது இருந்தால் போதும். இப்படி இந்த எல்லா மாறுபாட்டைப் புரிந்து கொண்டு அனைத்து உயிர் எழுத்துக்களும், அனைத்து மெய் எழுத்துக்களும் அனைத்து வகை துணை எழுத்துக்களும் கொண்ட ஒரு தொடரை உருவாக்கினால் அதுவே தமிழில் சிறந்த முழுவெழுத்து எனலாம்.
தமிழுக்கு சில முழு அரிச்சுவடி சொற்றொடர்களைச் சிலர் உருவாக்கியுள்ளனர். முனைவர் தேமொழி உருவாக்கிய "ஈவது விலக்கேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயமிட்டு உண், ஊக்கமது கைவிடேல், மூதுரை ஔவை கூறிய ஆத்திசூடி நூலின் தீஞ்சுவை மொழி, அஃதே எங்கள் பூவுலக நெறி" என்ற தொடரில் ஏறக்குறைய அனைத்து உயிரும் மெய்யும் இருக்கின்றன. ஆனால் ஒ, ஓ ஆகிய இரண்டு மட்டும் இல்லை. இதில் மொத்தம் 69 எழுத்துக்களும் தனித்த எழுத்துக்களாக 56 உம் உள்ளன.
செல்வக்குமார் இராயப்பன் என்பவர் உருவாக்கிய "தமிழ் குடி ஐயன், ஆதி முருகன், சூர உலகிற்கு ஈந்தளித்த நீர், திருமந்திரம், ஓம் நமசிவாயெனும் பஞ்சாட்சரம் அஃதே மூப்பு, பிணி, ஏழுபிறப்பு, ஊழி, இம்மை, மறுமை ஒழிக்குங்கூறு" என்ற முழு அரிச்சுவடி சொற்றொடரில் மொத்தம் 81 எழுத்துக்களும் தனித்த எழுத்துக்களாக 58 உம் உள்ளன. இதில் எ மற்றும் ஔ ஆகிய உயரெழுத்துக்கள் இல்லை. இவ்வாறு ஆங்காங்கே சில உதாரணங்கள் இருக்கலாம். இந்த வரிசையில் புதிய சொற்றொடர் இக்கட்டுரை வாயிலாக அறிமுகம் செய்யப்படுகிறது.
"ஓர் ஊர்தியில் ஏறி, கீழே இறங்கி சூடான சுத்தமான நெய் உணவு ஆவினை எடுத்து, திடீரென ஐந்நூறு கூடை குண்டூசியும் ஈரேழு ஔடத மின்னூல்களும் அனுப்பி ஞாபகமூட்டியது ஒரு தூதுக்குழு"
எழுத்து | எண்ணிக்கை |
---|---|
து, ன | 3 |
க, கு, த, தி, த், ம், ர், ல், ழு | 2 |
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, கி, கீ, கூ, க், ங், சி, சு, சூ, ஞா, ட, டா, டி, டீ, டு, டூ, டை, ட், ண, ண், தூ, நூ, நெ, ந், ப, பி, ப், மா, மி, மூ, ய, யி, யு, ய், ரு, ரெ, ரே, வி, வு, ழே, ளு, ற, றி, று, னு, னூ, னை, ன் | 1 |
இதில் மொத்தம் 83 எழுத்துக்களும் 70 தனித்த எழுத்துக்களும் உள்ளன. இத்தொடரில் அனைத்து உயிரும் மெய்யும் உள்ளன. இதில் துணைக்கால் முதல் பிறைச்சுழி வரை அனைத்து துணையெழுத்து வடிவங்களும் உள்ளன. இதன் மூலம் எளிதாக அனைத்து வடிவங்களையும் சிறிய தொடரில் பார்த்துவிடலாம். இதைவிட சிறிய தொடர்களை நீங்களும் உருவாக்கிப் பாருங்கள்.
சுளகு கருவி வழியாக நீங்களும் உருவாக்கிப் பார்க்க கீழே உள்ள வழிமுறைகள் உதவலாம்.
- முதல் படி, எந்தெந்த எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.
- தற்காலத் தமிழில் உள்ள சொல்வங்கி அல்லது பல தரப்பட்ட கட்டுரைகளைத் திரட்டி, சுளகு கருவி வழியாகத் தனிச் சொற்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும். அவற்றில் அரிதாக உள்ள எழுத்துக்களை வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
- அந்த வரிசையில் உள்ள எழுத்துக்களுக்கு முன்னுரிமை கொண்டு பொருள் கொண்ட வாக்கியம் அமைக்க முயல வேண்டும்.
- சுளகு கருவியைக் கொண்டு எல்லா எழுத்துக்களும் உள்ளனவா என்று சரிபார்க்கலாம்.
0 comments:
Post a Comment