Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Tuesday, October 29, 2019

Info Post

கணினிப் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க கணினியில் தமிழ்ப் பயன்பாடும் ஒருபுறம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒப்பிட்டளவில் ஆங்கிலம் போல இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இதன் பரவல் அதிகமாகும் என நம்பலாம்.  குரல்வழி உள்ளீடு வரை தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இன்னும் பலர் கணினியில் தமிழ் உள்ளீட்டுச் சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்குத் தமிழ் போய்ச் சேராதவரை இந்த நுட்பங்களில் வளர்ச்சி கேள்விக் குறிதான். அதனடிப்படையில் கணினியில் தமிழ் உள்ளீட்டுக்குத் தேவையான அடிப்படைத் தகவல்களையும், வழிகாட்டல்களையும் இக்கட்டுரையில் காணலாம். கைப்பேசி உள்ளீட்டு மற்றும் குரல்வழி உள்ளீட்டிற்கு இதர கட்டுரைகளைக் காணலாம்

அடிப்படையில் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டிற்கு தமிழ்க் குறியாக்கம், தமிழ் எழுத்துரு, தமிழ் விசைப்பலகை அமைப்பு என மூன்று நுட்பங்கள் கலந்துள்ளன. இவற்றைக் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதல்ல ஆனால் குறைந்தபட்சப் புரிதலைக் கொண்டிருக்கலாம். குறியாக்கம் (encoding) என்பது எந்த முறையில் தமிழ் எழுத்தைக் கணினியில் இருமக்குறிகளாக(binary) மாற்றுகிறோம் என்பதைக் குறிக்கும். உதாரணம் டேம், டேப், டிஸ்கி, பாமினி, யுனிக்கோட் எனப் பலவகையில் இருந்தன. ஆனால் இனி யுனிக்கோட் மட்டுமே அனைவருக்கும் பரிந்துரைக்கிறோம். சில வடிவமைப்புத் துறையினர் மட்டுமே யுனிக்கோட் அல்லாதவற்றைப் பயன்படுத்தும் நிலையுள்ளது(இதுவும் விரைவில் மாறும்). எனவே உங்கள்
எழுத்துக் குறியாக்கம் யுனிக்கோட் என்பதை மட்டும் உறுதி செய்தால் போதும். இதர குறியாக்கத்தில் உள்ளவற்றை யுனிக்கோடில் மாற்றிக் கொள்ள ஓவன் கருவியைப் பயன்படுத்தலாம்.  தமிழ் எழுத்துரு (font) என்பது இந்தக் குறியாக்கத்திற்கேற்ப ஒவ்வொரு எழுத்திற்கும் வரையப்பட்ட ஒரு மீச்சிறுபடமாகும்(glyph). நல்ல வரைகலை நிபுணர்கள் தமிழ் எழுத்துருக்களை விதவிதமாக வடிவமைக்க முடியும். எனவே எந்தக் குறியாக்கமோ அதற்கேற்ற எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும். இந்த எழுத்துரு உங்கள் கணினியில் இருந்தால் தான் தமிழ் வடிவத்தைப் பார்க்கமுடியும். யுனிக்கோட் தான் பொதுத்தரம் என்று முடிவு செய்யப்பட்டதால் யுனிக்கோட் எழுத்துருக்களையே பயன்படுத்தலாம். தமிழ் ஒத்திசைவு கொண்ட அனைத்துக் கருவிகளிலும் தமிழ் யுனிக்கோட் எழுத்துரு ஒன்று கட்டாயமிருக்கும். உதாரணம் விண்டோசில் லதா, லினக்சில் லொகிட். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொது உரிமையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன, தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுபோல எழுத்துருவை மட்டும் நிறுவிக்கொண்டு தமிழைத் தட்டச்சு செய்யமுடியாது அதற்கு உதவுவது தான் மூன்றாவது நுட்பமான விசைப்பலகை முறை. அதாவது எந்த விசையை அழுத்தினால் எந்த எழுத்து வர வேண்டும் என்று கட்டுப்படுத்தும் ஒரு மென்பொருள் என்று சொல்லலாம். தமிழக அரசின் பரிந்துரையான தமிழ்99 முறை, எழுத்துபெயர்ப்பு முறை, பாமினி, இன்ஸ்கிரிப்ட் எனப் பல முறைகள் உள்ளன. எழுத்துபெயர்ப்பு(Transliteration) என்பது vanthaan என்று தட்டினால் "வந்தான்" என்று காட்டும் முறை. இங்குக் குறிப்பிட்டவை அனைத்தும் யுனிக்கோடிற்கு ஒத்திசைவானவையே. இதில் விருப்பமான ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில் இருவழிகளில் தமிழ் உள்ளீட்டைக் கணினியில் செய்ய இயலும். சொந்தக் கணினி அல்லது இணைய இணைப்பில் குறைவாக இருக்கும் கணினிகளில் தமிழ் உள்ளீட்டு மென்பொருட்களைத் தரவிறக்கி நிறுவிக் கொள்வது முதல் வகை. இதனால் இணையத் தொடர்பின்றி தமிழில் எழுதமுடியும். இரண்டாவதாக இணையத்தில் நேரடியாகத் தமிழில் உள்ளீடு செய்து கொள்வது. மின்னஞ்சல் செய்கையிலோ, பிளாக்கரில் எழுதுகையிலோ நேரடியாகவே அங்கே தட்டச்சு செய்யமுடியும். இதற்கு எந்த மென்பொருளையும் நிறுவிக்கொள்ள வேண்டியதில்லை. இவற்றை ஒவ்வொன்றாகத் தெளிவாகப் பார்ப்போம்.

இணையமில்லா வழி 
http://www.azhagi.com (விண்டோஸ், லினெக்ஸ், மேக்)
http://software.nhm.in/products/writer (விண்டோஸ்)
http://keyman.com/tamil(விண்டோஸ்)
http://www.iniyatamil.com (விண்டோஸ்)
மேலே உள்ள ஒன்றை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்வதால் இணையம் இல்லாமல் கணினியில் தட்டச்சு செய்ய உதவும் வழியாகும்.  என்.எச்.எம். எழுதியும், அழகி எழுதியும் தான் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். உங்கள் இயங்குதளத்திற்கு ஏற்ப (விண்டோஸ், லினக்ஸ், மேக்) இதன் வகையைத் தெரிவு செய்து நிறுவிக் கொள்ள வேண்டும்.


இணைய வழி
கூகிளில் ஒருமுறை உங்கள் விசைப்பலகை மற்றும் மொழியினைத் தெரிவு செய்தால் எப்போதும் அதனை அனைத்துச் செயலிகளிலும் காட்டும். https://myaccount.google.com/inputtools சென்று தமிழை மொழியாகவும், விரும்பிய விசைப்பலகை keyboard layout ஆகவும் தெரிவு செய்ய வேண்டும். நீங்கள் தமிழை ஆங்கில எழுத்தில்(தங்கிலீஷ்) எழுதிப்பழகியவர் என்றால் எழுத்துபெயர்ப்பு முறை உங்களுக்கானது

வலைப்பதிவர்கள் பிளாக்கரில் settings -> Languages and formatting -> Enable transliteration -> enabled in Tamil என்று தெரிவு செய்ய வேண்டும். மேலே உள்ள படத்தைக் கவனிக்கலாம். அவ்வாறு செய்த பிறகு, கீழே உள்ளது போல "அ" குறியீட்டுடன் ஒரு படவுரு காணக்கிடைக்கும். இதனை இயக்கி தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.

உங்கள் ஜிமெயில் கணக்கில் செய்து கொள்ள settings -> General -> Language -> Enable input tools -> Edit tools சென்று தமிழ் மொழியைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

இதன் பிறகு மின்னஞ்சலில் நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். இவ்வாறு கூகிள் தேடுதளம், வரைபடம், டாக்ஸ் என அனைத்து இடங்களிலும் தமிழை உள்ளீடு செய்ய முடியும்.

விக்கிப்பீடியாவில் உள்ளீடு செய்ய கீழுள்ள படத்தில் காட்டியவாறு "மற்ற மொழிகள்" அருகே உள்ள படவுருவை அழுத்தி, வரும் சாளரத்தில் "உள்ளீடு" என்பதில் விரும்பிய மொழியும், விரும்பிய விசைப்பலகையும் தெரிவு செய்து கொள்ள வேண்டும். 
இதன் பிறகு விக்கிப்பீடியாவில் எங்கு சுட்டியை(cursor) வைத்தாலும் கீழுள்ள படம் போல விசைப்பலகை படவுரு காட்டும். அப்படியெனில் எழுத்துபெயர்ப்பில் எளிதில் தமிழில் எழுதலாம் என்று புரிந்து கொள்ளலாம்.
இவையன்றி, பொதுவாக இணையத்தில் தட்டச்சு செய்ய https://www.google.com/intl/ta/inputtools/try/(சிறந்தவொன்று),  https://tamileditor.org/ (எழுத்துபெயர்ப்பு முறை) https://wk.w3tamil.com/ (தமிழ்99 முறை) பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். தமிழ்ப் பிழை திருத்தியான வாணியிலும் தட்டச்சு செய்யலாம் என்பது கூடுதல் செய்தி. இது போல குரோம் உலாவியில் தட்டச்சு செய்வதற்கே பல நீட்சிகள் உள்ளன. உதாரணம் கூகிள், விக்கிப்பீடியா வெளியீடுகள். அவற்றில் ஒன்றை நிறுவிக் கொண்டால் எல்லா இணையத்தளத்திலும் குரோம் உலாவிவழியாக நேரடியாகத் தட்டச்சு செய்யலாம்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் யுனிக்கோட் குறியாக்கத்தில் உள்ளவை, விசைப்பலகை முறைமட்டும் சில இடங்களில் இல்லாமல் போகலாம். ஆனால் எழுத்துப்பெயர்ப்பும், தமிழ்99 முறையும் பெரும்பாலும் கொண்டுள்ளனர். மேலும் சந்தேகங்களுக்கு மறுமொழியில் கேட்கலாம் இயன்றவரை உதவுகிறேன்.


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து விளக்கங்களும் மிகவும் அருமை... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

// கைப்பேசி உள்ளீட்டு // இதற்கான இணைப்பை மட்டும் சரி செய்யவும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

//:குரல்வழி உள்ளீட்டிற்கு // இணைப்பிற்கு மிகவும் நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

ஓவன் கருவி - அசத்தல்...! மிக்க நன்றி...

Abi said...

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ