Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Monday, January 11, 2021

Info Post
தமிழில் குறியாக்க மாற்றிகள் பல இருந்தாலும் அவற்றில் விடுபட்ட குறியாக்கங்கள் சில இருந்தன. அதற்காக ஓவன் செயலி 2016 இல் வெளிவந்தது. இதையும் கணிசமான பயனர்கள் பயன்படுத்தி வந்தனர். இப்போது ஆங்கிலம் கலந்த கோப்புக்களையும் வடிவமைப்பு மாறாமல் இனி ஒருங்குறிக்கு மாற்ற முடியும்.  கடந்த சில நாட்களாக இதைக் கவனித்திருக்கலாம் அல்லது சிலர் பயன்படுத்திப் பின்னூட்டம் அனுப்பியிருக்கலாம். குறுகிய வட்டத்திற்குள் நிகழ்ந்த சோதனைக்குப் பிறகு இன்று அனைவருக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது. 
 
Tamil unicode converter
இதில் நாற்பதிற்கும் மேற்பட்டவற்றை இருபுறமும் மாற்றும்.  இதில் வெகு நாட்களாக இரு வசதிகளைப் பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஒழுங்கு(format) மாறாமல் எழுத்துருவை மாற்ற வேண்டும் மற்றும் பிற மொழி குறிப்பாக ஆங்கிலம் கலந்த கட்டுரைகளில் தமிழை மட்டும் மாற்ற வேண்டும். இவை உண்மையில் தற்காலப் பயன்பாட்டிற்கும் பெரிதும் தேவையானது. கடந்த ஆண்டு இந்த இருவசதிகளும் கூகிள் டாக்ஸ் செயலிக்கு உருவாக்கப்பட்டது. சில நூல்களும் அதில் மாற்றப்பட்டு வெளிவந்தன. தற்போது இணையத்தில் இவ்வசதி புதுப்பிக்கப்பட்டு, புதிய பதிப்பாக "ஓவன்" அனைவருக்கும் அறிமுகமாகிறது. 

இனி எந்தவொரு ஆர்.டி.எப்.(Rich Text Format) வடிவக் கோப்பையும் வெட்டி ஒட்டி மாற்றிக் கொள்ளலாம். பழைய முறையிலும் வெறும் பனுவலை மட்டும் இட்டும் மாற்றிக் கொள்ளலாம். எம்.எஸ்.வேர்ட் போன்ற சொல்லாளர்களில் இருந்தோ வேறு இணையப் பக்கத்திலிருந்தோ நேரடியாகவும் உள்ளடக்கத்தை இட்டால் அதிலுள்ள எழுத்துருக்களைக் காட்டும் அதில் விரும்பியவற்றை மட்டும் தேர்வு செய்து மாற்றிக் கொள்ளலாம். மேலும் மாற்றப்பட்ட ஆக்கங்களை மீண்டும்  ஒழுங்கு மாறாமல் பயன்படுத்த முடியும். உள்ளீட்டுக் குறியாக்கம் தெரியாவிட்டால் "auto detect" தேர்வு செய்து முயலலாம். வெளியீட்டுக் குறியாக்கத்தை "default" என்று கொடுத்தால் யுனிக்கோட் முறைக்கே மாற்றும். மற்றபடி பழைய அம்சங்கள் அப்படியே உள்ளன. 

சிறிய செயல்முறை விளக்கம் 
இதில் மொத்தமாக 43 வகையான குறியாக்கங்கள் உள்ளன. புதிய குறியாக்கங்கள் ஏதேனும் இதில் விடுபட்டிருந்தால் அறியத் தரலாம். நிறை குறைகளையும் பகிர்ந்து மேம்படுத்த உதவலாம்.

பொதுத் தகவல் 
இலவச தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் பல இருந்தாலும் பழைய வடிவமைப்பு மென்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் யுனிக்கோட் அல்லாத குறியாக்கத்தில் உருவான எழுத்துருவையே பயன்படுத்துகின்றனர். இணையத்தில் ஒருங்குறியே பிரதானமானாலும் அவை அல்லாத தளங்களும் பக்கங்களும் பல உள்ளன. நீங்கள் பாமினியிலோ மயிலையிலோ இட்டுத் தேடினால் அத்தகைய தளங்கள் கூகிளில் கிடைக்கும்.  பொதுவாக இத்தனைக் குறியாக்கங்களைப் பார்க்காதவர்களுக்கும், பழைய கணித்தமிழ் பாதையை அறிய விரும்புபவர்களுக்கும் இணையத்தில் உள்ள ஒருங்குறி அல்லாத வெவ்வேறு வகை பக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. படித்தும் பார்க்கலாம். 



4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு... வாழ்த்துகள்...

ம.தி.சுதா said...

thanks 🙏

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் said...

அரியதொரு தமிழ்ப்பணி. நல்வாழ்த்துகள்..

Thiruppullani Raguveeradayal said...

தொடரும் உங்கள் தமிழுக்கான சேவைகள் வியப்பூட்டுகின்றன. பாராட்டுதல்களுக்குரியன. முகம் தெரியாத பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெறுவர். வாழ்த்துகள்.
கூகுளின் நோட்டோ சான்ஸ் போன்ற otf வகை எழுத்துருக்களையும் இதில் இணைக்க வேண்டுகிறேன். இன்று முயற்சித்ததில் சரியாக வரவில்லை.